தோக்கியோ : இன்று ஞாயிற்றுக்கிழமை (1 ஆகஸ்ட் 2021) காலை வரையிலான நிலவரப்படி ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
17 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 47 பதக்கங்களைப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. அதற்கு அடுத்த நிலையில் சீனா தனது 2-வது இடத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது.
தங்கப் பதக்கங்களைப் பொறுத்தவரை 21 தங்கப் பதக்கங்களைப் பெற்று சீனா அமெரிக்காவை முந்தியிருக்கிறது.
எனினும் மொத்தப் பதக்கப்பட்டியலில் 46 பதக்கங்களைப் பெற்று அமெரிக்காவை விட ஒரு பதக்கம் வித்தியாசத்திலேயே சீனா பின்தங்கியிருக்கிறது.
11 தங்கப்பதக்கங்களுடன், மொத்தம் 37 பதக்கங்களை வெற்றி கொண்டு ரஷியா விளையாட்டாளர்கள் 3-வது இடத்தைப் பிடித்திருக்கின்றனர்.
விருந்துபசரிப்பு நாடான ஜப்பான் 17 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 30 பதக்கங்களை வெற்றி கொண்டு 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
பொதுவாக ஒலிம்பிக்சில் திடல்தளப் போட்டிகள் தொடங்கும்போதுதான் அமெரிக்கா எல்லா நாடுகளையும் முந்தி பதக்கங்களை வாரிக்குவிப்பது வழக்கம். தற்போது திடல்தளப் போட்டிகளுக்கான தேர்வுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.