கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு அவசர கால சட்டங்களை நீட்டிக்க மாமன்னர் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தினால்தான் அமைச்சரவை அந்த சட்டங்களை இரத்து செய்யும் முடிவை எடுத்தது என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை (ஜூலை 31) அறிக்கை ஒன்றில் அமைச்சரவையின் முடிவை விக்னேஸ்வரன் தற்காத்தார். விக்னேஸ்வரன் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவருமாவார்.
“ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு அவசர கால சட்டங்களை நீட்டிக்க மாமன்னர் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டதால்தான் அந்தத் தேதிக்கு முன்னரே அந்த சட்டங்களை இரத்து செய்யும் முடிவை அமைச்சரவை எடுத்தது. இதுவே, சரியான அணுகுமுறை” என்றும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முடிவுக்கு வந்துவிடும் அவசர கால சட்டங்கள் குறித்து ஆகஸ்ட் 2 திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது என்பது நேரத்தை விரயமாக்கும் தேவையில்லாத செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எனினும் அவசர கால சட்டங்களை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்குமாறு மாமன்னர் உத்தரவிட்டது தேசிய நிலைத்தன்மைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டது முதல் நமது நாடு கடுமையான அரசியல், பொருளாதார அம்சங்களில் நிலைத்தன்மையற்ற சூழலை எதிர்கொண்டு வந்துள்ளது. இதனைச் சரிப்படுத்தவே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் மூலம் விளக்கங்கள் தர அரசாங்கம் முற்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றக் கூட்டம் நிறுத்தப்பட்டு அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன” எனவும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அரசாங்கத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, மாமன்னரால் அல்ல என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தனதறிக்கையில் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.