Home நாடு நாடாளுமன்ற வாக்கெடுப்பு வரை மொகிதின் அரசாங்கமே நீடிக்கும் – கோபால் ஸ்ரீராம் கூறுகிறார்

நாடாளுமன்ற வாக்கெடுப்பு வரை மொகிதின் அரசாங்கமே நீடிக்கும் – கோபால் ஸ்ரீராம் கூறுகிறார்

653
0
SHARE
Ad
கோபால் ஸ்ரீராம்

கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு மொகிதின் யாசினுக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பது நிரூபிக்கப்படும்வரை அவரின் அரசாங்கம் நீடித்திருக்கும் என நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான கோபால் ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.

ஸ்ரீராம் கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமாவார்.

மொகிதின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவருக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டும் – இந்த இரண்டும் நடைபெறாதவரை அவரையோ அவரின் அரசாங்கத்தையோ ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஸ்ரீராம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை மொகிதின் நிரூபித்து விட்டால், அதன்பிறகு அவரை அரசியல் அமைப்பு சட்டப்படி அகற்றுவது என்பது இயலாத காரியம் என்றும் ஸ்ரீராம் குறிப்பிட்டார்.

“இதுவரையில் நாடாளுமன்றத்திற்கு வெளியில்தான் அவருக்குப் பெரும்பான்மை இல்லை எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை வைத்து மாமன்னர் எதுவும்  செய்ய முடியாது. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மொகிதினுக்குப் பெரும்பான்மை இல்லை என்ற நிலைமை வந்தால்தான், மாமன்னர் அவரை அழைத்து பதவி விலகச் சொல்ல முடியும்” எனவும் ஸ்ரீராம் விளக்கியிருக்கிறார்.

அப்படி மாமன்னர் சொல்லியும் பிரதமர் பதவி விலக மறுத்தால், நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படியும், புதிய பொதுத் தேர்தலுக்கு வழிவிடும்படியும் பிரதமர் மாமன்னரைக் கேட்டுக் கொள்ளலாம்.

“அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்க மாமன்னர் மறுத்துவிட்டால் பிரதமரும் அவரின் அமைச்சரவை முழுவதும் பதவி விலக வேண்டும். பொதுத் தேர்தலைத் தவிர்க்க மாமன்னர் முடிவு செய்தால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டிருப்பதாக மாமன்னர் கருதும் நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து அடுத்த அரசாங்கத்தை அமைக்க உத்தரவிடலாம். அவரையே பிரதமராகவும் நியமிக்கலாம்” எனவும் நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் பிரச்சனைகள் குறித்துக் கருத்துரைக்கும்போது ஸ்ரீராம் தெரிவித்தார்.