கோலாலம்பூர் : மின்னல் வானொலியில் இரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று “ஆனந்தத் தேன்காற்று”.
ஆனந்த தேன்காற்றில் இனி ஒவ்வொரு நாளும் #நமக்குநாமே. – என்ற உன்னத திட்டத்தில் வானொலி நேயர்களான நீங்களும் இணைத்துக் கொள்ளலாம்.
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரையில், ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணி தொடங்கி நமக்கு நாமே ஒலியேறுகின்றது. பிறர் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” இது பாரதியின் பாடல் வரிகள். நாடு அபரீத வளர்ச்சியடைந்திருக்கும் இந்த காலக்கட்டத்திலும், இன்னமும் ஒரு வேளை உணவிற்குக்கூட திண்டாடும் குடும்பங்களும் இருக்கவே செய்கின்றன. வாடுவோரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து நாம் மனம் நிறைவோம்.
இதையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது “அன்னமிட்டக் கை”. ஞாயிறு தோறும் ஆனந்தத் தேன்காற்றில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒலியேறும். இதனை வழிநடத்துகின்றார் அறிவிப்பாளர் சசி. #நமக்குநாமே
புதிய தலைமைத்துவத்தில், மின்னல் சமுதாயக் கடப்பாடு கொண்ட பண்பலையாக உருமாறி இருக்கின்றது. மின்னல் பண்பலையின் புதிய நிர்வாகி திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிந்தனையின் அடிப்படையில் ஆனந்த தேன்காற்றை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறோம் என பெருமை கொள்கிறார் அறிவிப்பாளர் சுகன்யா சதாசிவம். #நமக்குநாமே…
திங்கட்கிழமைகளில் “அகரம் இப்போ சிகரம் ஆச்சு, தகரம் இப்போ தங்கம் ஆச்சு” எனும் தலைப்பில் நிகழ்ச்சி இடம்பெறும். நாம் தகரம் எனக் கருதுவதை இன்னொருவர் தங்கமெனக் கொண்டாடலாம். நாம் பயன்படுத்தாத, ஆனால் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைத் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் உன்னத நிகழ்ச்சி இது. “கருணையுணர்வோடு ஆனந்த தேன்காற்றில் கடமையாற்றுவதில் மகிழ்கிறேன்” என்கிறார் சுகன்யா. #நமக்குநாமே
தடம் மாறிய நம் சகோதர்களுக்கு, வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்தலாக செவ்வாய்க்கிழமைகளில் கரம் கோர்த்து கரையேற்றக் காத்திருக்கின்றது “மாற்றம் தேடியே”. நம் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களில் இதுவும் ஒன்று. தடம் மாறி, வாழ்வில் பல இன்னல்களை பாடமாய் பெற்று, இனி நல்வாழ்வு கிட்டாதா என ஏங்கும் மனங்களும் இருக்கவே செய்கின்றன. இவர்களின் ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் இனி செவ்வாய்க்கிழமைகளில் ஆனந்த தேன்காற்றில் உங்களுக்காக கொண்டு வருகிறோம். அவர்களின் பின்னணி என்ன? தற்போது அவர்கள் எதிர்நோக்கியுள்ள சூழல் என்ன? அவர்களின் தேவையை அறிந்து, அதற்கான தீர்வை அலசி ஆராய காத்திருக்கின்றார் அறிவிப்பாளர் ரவீன்.
தடம் மாறி, பின் நல்வழிக்கு திரும்ப காத்திருக்கும் இவர்களின் இயல்பை ஏற்று, கை கொடுப்போம். அவர்கள் வாழ்வில் மேம்பட இன்னொரு வாய்ப்பைக் கொடுப்போம். காத்திருங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆனந்த தேன்காற்றில் ரவீன் தொகுத்து வழங்கும் “மாற்றம் தேடியே”. #நமக்குநாமே
புதன்கிழமைகளில் உறவுகள் தொடர்கதை ஒலியேறி வருகின்றது. தொலைந்துப்போன உறவுகளைத் தேடும் படலமே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட உறவுகளை இணைத்துள்ள இந்நிகழ்ச்சி, இனி மேலும் சில மாற்றங்களுடன் இடம்பெறுகிறது. தற்போதையச் சூழலில், தனிமையிலுள்ள எத்தனையோ உள்ளங்களுக்கு இந்நிகழ்ச்சியின் வழி ஆறுதல் வார்த்தைகளும் காற்றலையில் அனுப்பி வைக்கப்படும்.
நமக்கும் நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் ஏற்படும் மன இறுக்கங்களை களையும் முறைகளையும் நேயர்களோடு பகிரவுள்ளோம். அகிலம் அன்பில் திளைக்க அனைவரோடும் அன்பு பகிர்வோம். அகிலத்தை அழகாக்குவோம். அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச்செல்வன் வழிநடத்தும் உறவுகள் தொடர்கதை எப்போதும் தொடர்கதையே. #நமக்கு நாமே.
வியாழக்கிழமை தோறும், ஆனந்த தேன்காற்றில் “ஒரு தெய்வம் தந்த பூவே”. மாணவர்களின் கனவுகளை நிதர்சனமாக்க காத்திருக்கின்றது வியாழக்கிழமை ஆனந்த தேன்காற்று. கனவுகள் காணாத மாணவர்களே கிடையாது. சிலருக்கு கனவுகள், கனவுகளாகவே அஸ்தமனமாகிப் போகின்றன. எல்லாருக்குமே எல்லாமும் கைக்கூடுவது கிடையாது. இனியும் இந்நிலை தொடரலாகாது. வாழ்க்கைச் சூழலும், ஏழ்மை நிலையும் நம் மாணவர்கள் கல்வியில் வெற்றிக் கனியை சுவைக்க தடைக் கல்லாகி விடக்கூடாது.
நம் சமுதாயத்தில் சாதனையாளர்களை உருவாக்க சேர்ந்தே கரம் கோர்ப்போம். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களைத் தத்தெடுத்து, அவர்கள் கல்வியில் ஒளியேற்றி வைப்போம். ஒரு தலைமுறைக்கு நாம் தரும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் கற்ற சமுதாயத்தை உருவாக்க விதை தூவும். வியாழக்கிழமைகளில் “ஒரு தெய்வம் தந்த பூவே” நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அறிவிப்பாளர் மோகன். #நமக்குநாமே.
வெள்ளிக்கிழமைகளில் ஆனந்த தேன்காற்றில் மருத்துவ உதவிகளுக்கான “நலம் நலமறிய ஆவல்” நிகழ்ச்சி இடம்பெறும். மருத்துவ உதவிகளுக்காக ஏங்கித் தவிக்கும் நேயர்களுக்கு உதவும் உன்னத திட்டம் இது. உதவிகள் தேவைப்படும் இவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து, புதுவாழ்வு கொடுக்க முன்வருபவர்கள் இத்திட்டத்தில் எங்களோடு இணைந்துக் கொள்ளலாம். “நலம் நலமறிய ஆவல்” நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து சமுதாயப் பணியாற்ற காத்திருக்கின்றார் அறிவிப்பாளர் திரேசா லசாரு. #நமக்குநாமே
சனிக்கிழமைகளில் ஆனந்த தேன்காற்றில் இணையம் வழி வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வசதியை ஏற்படுத்தித் தர காத்திருக்கின்றது “கற்கக் கசடற”.
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. இணையம் வழி இலவச கல்வி சேவையை நாடும் மாணவர்கள் சனிக்கிழமை ஆனந்த தேன்காற்றில் அழைத்து அவர்களுடைய விபரங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். கல்வி எனும் தாரக மந்திரத்தை கோவீட்-19 காலக்கட்டத்தில் இவர்களுக்கு உதவ முன்வரும் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் அழைத்து பேச அழைக்கப்படுகிறார்கள். பொருளாதார பின்னடைவு ஒரு மாணவன் கல்வியில் பின் தங்கிப் போக காரணமாகி விடக்கூடாது. “கற்கக் கசடற” இதற்கு நிச்சயம் சிறந்ததொரு தீர்வாக அமையும். சனிக்கிழமை ஆனந்த தேன்காற்றில் இதனை வழி நடத்துகின்றார் அறிவிப்பாளர் கிஷன். #நமக்குநாமே
சமுதாயத்திடையே மனித நேயத்தை வளர்க்கும் வகையில் இந்த புதிய திட்டத்தை ஆனந்த தேன்காற்றில் ஒலியேறச் செய்திருக்கும் மின்னல் பண்பலையின் புதிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அனைத்து அறிவிப்பாளர்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார் ஆனந்த தேன்காற்று தொகுப்பின் ஒருங்கிணைப்பு தயாரிப்பாளர் நளினி அச்சுதன்.
இத்தனை நாட்களாய் நிறைவான தமிழோடும், மனம் நிறைக்கும் இசையோடும் நேயர்களின் மனம் கவர்ந்த ஆனந்த தேன்காற்று, இனி மின்னலின் புதிய தலைமைத்துவத்தோடு இணைந்து, சமுதாய கடப்பாட்டோடும், சமூகப் பணியோடும் உங்களை நாடி வருகின்றது. நேயர்கள் இன்றி நாங்கள் இல்லை. இந்த உன்னத திட்டத்தை நாம் இணைந்தே வெற்றி பெறச் செய்வோம்.