Home நாடு மாமன்னரின் கரங்களில் மீண்டும் நாட்டின் அரசியல் முடிவு!

மாமன்னரின் கரங்களில் மீண்டும் நாட்டின் அரசியல் முடிவு!

1044
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நமது நாட்டின் அரசியல் நிலைமையும், எதிர்காலமும் சுமார் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு சுற்று முடிவடைந்து மீண்டும் மாமன்னரின் அரண்மனை வாயில்களை வந்தடைந்திருக்கிறது.

இன்று தொடங்கி பத்திரிகையாளர்கள் அரண்மனை வாயில்களில் முற்றுகையிடுவார்கள். பல்வேறு அரசியல் தலைவர்கள் மாமன்னரைச் சந்திப்பார்கள்.

அடுத்த சில நாட்களில் நாட்டின் மொத்தப் பார்வையும் மாமன்னரின் அரண்மனை வாயில்களிலேயே பதிந்திருக்கும். யார் உள்ளே போகிறார்கள் – வெளியே வரும்போது என்ன கூறுவார்கள் என்பதிலேயே ஊடகங்களின் – மக்களின் கவனம் – நிலைத்திருக்கும்.

#TamilSchoolmychoice

புதிய பிரதமர் யார் – நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாருக்குப் பெரும்பான்மை என்பது போன்ற விவகாரங்களைத் தீர்மானிக்க வேண்டிய கடமை மீண்டும் மாமன்னரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட அரசியலில் பல்வேறு சாத்தியங்கள், திருப்பங்கள் நிகழலாம்.

15-வது பொதுத் தேர்தலா?

இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் கானி பின் சாலேயை மாமன்னர் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காவல் துறையின் தலைவரான ஐஜிபி அக்ரில் சானி உள்ளிட்ட காவல் துறையின் உயர் அதிகாரிகளையும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணையும் மாமன்னர் இன்று சந்திக்கிறார்.

இந்த சந்திப்புகள் அனைத்தும் பிரதமர் – மாமன்னர் இடையிலான சந்திப்புக்கு முன்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நண்பகல் 12.30 மணியளவில் பிரதமர் மொகிதின் யாசின் மாமன்னரைச் சந்திக்கிறார்.

தேர்தல் ஆணையத் தலைவரையும் மாமன்னர் சந்திக்கவிருப்பதால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 15-வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மையை நிரூபிப்பதில் குழப்பங்கள் நிலவுவதால் நேரடியாக 15-வது பொதுத் தேர்தலை எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்துவது, அதுவரை மொகிதின் யாசினை காபந்து பிரதமராகத் தொடரச் செய்வது – அல்லது இன்னொரு நடுநிலைமை பிரதமரை ஏற்றுக் கொள்வது – போன்ற பரிந்துரைகளையும் மாமன்னர் பரிசீலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.