Home நாடு பக்காத்தான் தலைவர்களுக்கு மாமன்னரைச் சந்திக்க அழைப்பு

பக்காத்தான் தலைவர்களுக்கு மாமன்னரைச் சந்திக்க அழைப்பு

660
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்து வரும் சில நாட்களில் மாமன்னரைச் சந்திக்கத் தயாராக இருக்கும்படி நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களுக்கு அரண்மனையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொகிதின் யாசினின் பதவி விலகலைத் தொடர்ந்து அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் பொறுப்பு மாமன்னருக்கு இருக்கிறது.

மொகிதினின் பதவி விலகலை வரவேற்ற அன்வார் இப்ராகிம், “அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மலேசியா தற்போதைய பொருளாதார, சுகாதாரப் பிரச்சனைகளிலிருந்து மீண்டு, மேலும் வலிமையுடன் திகழும் என நம்புகிறேன்.  மொகிதின் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளுக்காக நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராகிம் ஆவார். எனினும் அவருக்கு இன்றைய நிலையில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்லை. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதால் அன்வார் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அதிகரித்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக, இன்று தனது பதவி விலகலை தொலைக்காட்சி வழி அறிவித்த, மொகிதின் யாசின் ஊழல்வாதிகளை ஆதரிக்க நான் முன்வந்திருந்தால் தொடர்ந்து பிரதமராக இருந்திருக்க முடியும், நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.

நான் ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை ஆதரிக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து மொகிதினும் அவர் அணியின் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாரை ஆதரிக்க முன்வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில், அமானா கட்சியின் தலைவரான முகமட் சாபு, 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தை மீண்டும் பக்காத்தானிடமே ஒப்படைக்க வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

பக்காத்தான் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு மீண்டும் பக்காத்தான் கூட்டணிக்குத் திரும்ப வேண்டுமெனவும் முகமட் சாபு கேட்டுக் கொண்டார்.

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி மொகிதின் யாசின் பதவி விலகி சரியான முடிவைச் செய்திருக்கிறார் என ஜசெகவின் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், அரண்மனைக்கு வந்து மாமன்னரைச் சந்திக்க தயாராக இருக்கும்படி அரண்மனையில் இருந்து பக்காத்தான் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.