Home Photo News இஸ்மாயில் சாப்ரி : புதிய பிரதமர் தாக்குப் பிடிப்பாரா? – டத்தோ பெரியசாமியின் அரசியல் கண்ணோட்டம்

இஸ்மாயில் சாப்ரி : புதிய பிரதமர் தாக்குப் பிடிப்பாரா? – டத்தோ பெரியசாமியின் அரசியல் கண்ணோட்டம்

592
0
SHARE
Ad

(114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இஸ்மாயில் சாப்ரி பெற்றிருக்கிறார் என தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அரசியல் ஜாம்பவனான துன் மகாதீர், நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட மொகிதின் யாசின் போன்றவர்களே பதவி விலகிச் சென்ற பிரதமர் பதவியில், புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தாக்குப் பிடிப்பாரா? இனியேனும் நாட்டு மக்களின் நலன்  முன்னிறுத்தப்படுமா? பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி வழங்கும் அரசியல் கண்ணோட்டம்)

கட்டுரையாளர் டத்தோ மு.பெரியசாமி

கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பக்கத்தான் ஹாரப்பான் ஆட்சி கவிழ்ந்ததற்குப் பிறகு நாடு ஆட்சி மாற்றம் கண்டது. இந்த ஆட்சி  மாற்றத்திற்குப் பிறகு மார்ச் 2020 முதல் இந்நாட்டின் 8-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற மொகிதின் யாசின், ஆகஸ்டு 16, 2021-ஆம் நாளோடு தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அவரின் ராஜினாமாவுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டது. அவர் தலைமைப் பொறுப்பிற்கு வருவதற்கு அடித்தளமாக இருந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதிலிருந்து விலகிக் கொள்ளவே, நாடாளுமன்றத்தில் அவர் பெரும்பான்மையை இழந்தார்.

#TamilSchoolmychoice

இந்த சூழல் உருவெடுத்ததால், அரசியலமைப்புச் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மையை இழந்த ஒரு பிரதமர் தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றச் சட்டம் இடந்தரவில்லை. ஆகவே,அரசியலமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலே மொகிதின் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

துன் டாக்டர் மகாதீர் தலைமையில் அமைந்த பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் கவிழ்வதற்கு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களே காரணமாக இருந்தனர் எனலாம்.

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களாகிய மலாய்க்காரர்களின் அரசியல் ஆதிக்கத்திற்கு ஊறு விளைவிக்கிறதெனக் கருதிய மலாய்க்காரர்களைப் பிரிநிதிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் குறிப்பாக அம்னோ,பெர்சத்து,பாஸ் ஆகிய கட்சிகள் ஒன்று கூடி பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டன.

பக்கத்தான் ஹரப்பானுக்குப் பதிலாக பெரிக்காத்தான் நேஷனல் எனும் பெயரில் மொகிதின் தலைமையில் ஒரு புதிய அரசாங்கம் அமைந்தது நாட்டு மக்கள் அறிந்ததே. இந்தப் புதிய அரசாங்கம் மலாய்க்காரர்களின் உரிமைகளை முன்னெடுக்குமெனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடந்ததென்ன?

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைப்பதற்கு அடித்தளமாக இருந்தவர்களில், 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீரென ஏதோவொரு காரணத்திற்காக மொகிதினுக்கு ஆதரவு வழங்குவதை மீட்டுக் கொண்டனர்.

இந்த நடவடிக்கையால் நாடாளுமன்றத்தில் மொகிதினின் பெரும்பான்மை குறையவே  பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கமும் ஒரு முடிவுக்கு வந்தது. ஆகவே, ஓர் அரசாங்கத்தை அமைப்பதும், கவிழ்ப்பதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையில்தான் இருக்கிறது என்பதை மேற்கூறிய ஆட்சி மாற்ற நிகழ்வு தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

ஓர் அரசாங்கத்தைத் தேர்வு செய்வது நாட்டு மக்களின் உரிமை என்பதை ஜனநாயக ஆட்சி முறை வலியுறுத்துகிறது. ஆனால், மலேசியாவில் ஓர் அரசாங்கத்தை உருவாக்கும் பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையிலே உள்ளது என மலேசிய அரசியல் சட்ட அமைப்பு கூறுகிறது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 43(2)(a) நாடாளுமன்ற உறுப்பினரிடையே பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத்தான் பிரதமராக மாமன்னர் தேர்வு செய்வதற்கு சட்டம் வலியுறுத்துகிறது.

அப்படிப் பிரதமராகத் தேர்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்தான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆகவே, நமது நாட்டைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையிலேதான் அரசாங்கம் அமைகிறது.

மலேசிய நாட்டைப் பொறுத்தமட்டில் நாட்டு மக்கள் நேரடியாக ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை.

அதற்கு மாறாகப் பொதுத் தேர்தலில் மக்களைப் பிரதிநிதிக்கத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே ஓர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அடித்தளமாக இருக்கிறார்கள். ஒரு பிரதமரைத் தேர்வு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை ஆதரவு இருப்பது அவசியமாகிறது.

பிரதமர் வேட்பாளராக இருக்கின்ற ஒருவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்க வேண்டியவர் என்றாலும் அவரின் ஆதரவு அவரைச் சார்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரிடையே இருப்பது முக்கியமல்ல. மாற்றுக் கட்சியிலிருந்தும் ஆதரவைத் திரட்டி பெரும்பான்மையைக் காட்டலாம்.

நம் நாட்டைப் பொறுத்த மட்டில் இது வரையில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பான்மை இருந்து வந்ததால் அந்தக் கட்சியைத் தலைமை தாங்கியவரே பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டது வழக்கமாகி விட்டது. ஆனால் இவ்வழக்கத்திற்கு மாறாக பெரிக்கத்தான் நேஷனல் அமையும்போது பல கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரு பிரதமரைத் தேர்வு செய்தனர். இந்தத் தேர்வு முறை நாட்டு மக்களுக்கு புதிதாகத் தென்பட்டது.

எவ்வாறாயினும் நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்வதற்கு மாமன்னருக்கு சில விசேஷ அதிகாரங்களை நம் நாட்டு அரசியல் சாசனம் வழங்குகிறது. ஆகவே, புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டால் நாட்டின் நலன் கருதி மாமன்னரே தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பாரென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே கடந்த இரு தினங்களாக தேசிய முன்னணி உறுப்பினர்கள் சாஹிட் ஹாமிடி தலைமையிலும், பக்கத்தான் ஹரப்பான்  உறுப்பினர்கள் அன்வார் இப்ராகிம் தலைமையிலும்  ஆதரவு திரட்டும்  கூட்டங்களும் பேரங்களும்  நடந்தேறியது.

இறுதியில் தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பையும் பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர்கள் அன்வாரையும் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளதாக தகவல் சாதனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் தேசிய முன்னணி வேட்பாளரே பெரும்பான்மை பெற்ற வேட்பாளராகத் தேர்வாகியிருக்கிறார் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. எவ்வாறாயினும் நாட்டின் 9-ஆவது பிரதமராக மாமன்னரால் தேர்வு பெறும் வேட்பாளர் அடுத்து நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாமன்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வகையில் புதிதாகத் தேர்வு பெறும் பிரதமர்  வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எவ்வாறாயினும் புதிதாகத் தேர்வு பெறும் பிரதமர் அனைத்துக் கட்சித் தரப்பினரையும் அரவணைத்துக் கொண்டு கொவிட் 19 பெருந்தொற்றுக்கு எதிராக போராட்டத்தைத் தொடர்ந்து  செய்ய வேண்டுமென நாட்டு மக்களும் மாமன்னரும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

9-ஆவது பிரதமராகத் தேர்வு பெற்றப் பிறகு அடுத்த 15- ஆவது பொதுத் தேர்தல் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்  சர்ச்சையில் ஈடுபடாமல் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு கொவிட் பெருந்தொற்றினால் தொய்வுற்ற நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார மீட்புப் பணிகளுக்கும் மும்முரம் காட்ட வேண்டுமென நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

-டத்தோ மு.பெரியசாமி