கோலாலம்பூர், ஏப்ரல் 22- “வேதமூர்த்தி அடுத்த சாமி வேலுவாக உருவாக முயற்சி செய்கிறார். நஜிப் அமைச்சகத்தில் ஒரு நிலையான இடம் பிடிப்பதே அவரது அடுத்த இலக்கு” இப்படி ஒரு பகிரங்க குற்றச்சாட்டை ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மீது வைப்பவர் வேறுயாருமல்ல அவரது உடன் பிறந்த அண்ணன் உதயக்குமார் தான்.
ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டு திட்டவரைவினை ஏற்றுக்கொள்ளுமாறு அதன் தலைவர் வேதமூர்த்தி, தேசிய முன்னணியிடமும், மக்கள் கூட்டணியிடமும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்த போது மௌனம் காத்து வந்த உதயக்குமார், தற்போது தேசிய முன்னணியுடனான ஹிண்ட்ராப்பின் ஒப்பந்தத்திற்குப் பிறகு வெகுண்டெழுந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
அதிலும் தேசிய முன்னணியை மூன்றில் இரண்டு பங்கு வெற்றியடைய வேண்டும் என்று இந்திய மக்களிடம் வேதமூர்த்தி கூறிவருவது உதயகுமாரை மேலும் எரிச்சலடையச் செய்துள்ளது.
இத்தனை நாட்களாக தனது தம்பி வேதமூர்த்தியின் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர், தற்போது வெளிப்படையாகவே, “வேதமூர்த்தி ஹிண்ட்ராப்பை கடத்தி விட்டார்”,“புதிய மண்டோர்” என்பது போன்ற கருத்துக்களை வெளியிடத்தொடங்கியுள்ளார்.
வேதாவால் தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தர இயலாது
வரும் பொதுத்தேர்தலில் வேதமூர்த்தியால் நிச்சயம் தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் வாக்கை பெற்றுத்தர முடியாது. காரணம் வேதமூர்த்தியின் செயலால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவர் மீது மிகுந்த ஆத்திரம் கொண்டுள்ளனர் என்று உதயக்குமார் கூறியுள்ளார்.
மேலும் ஹிண்ட்ராப்பை ஆரம்ப காலங்களில் தான் நடத்தி வந்தபோது அதற்கு ஐந்து தலைவர்கள் இருந்ததில்லை என்றும், வேதமூர்த்தியோடு சேர்த்து ஐவர் அடங்கிய வழக்கறிஞர் குழுவை மட்டுமே தான் அமைத்திருந்ததாகவும் ஆனால், தான் சிறை சென்ற பிறகு அந்த வாய்ப்பை பயன்படுத்தி வேதமூர்த்தி தலைவராகி விட்டார் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.
அதன் பிறகு வேதமூர்த்தியின் தவறான வழிநடத்துதலால், ஹிண்ட்ராப் இன்று தனது சுயமரியாதையை இழந்து இந்திய மக்களின் வெறுப்பிற்கு ஆளாகியிருக்கிறது.கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தான் கஷ்டப்பட்டு உழைத்து மக்களிடம் கொண்டு சேர்த்த ஹிண்ட்ராப் என்ற இயக்கத்தை, வேதமூர்த்தி தேசிய முன்னணி என்ற இனவாத அரசியல் கட்சியுடன் இணைத்து அதன் நன்மதிப்பை கெடுத்துவிட்டார் என்று உதயமூர்த்தி தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.
ஹிண்ட்ராப்பை உடைத்தது தேசிய முன்னணி தான்
ஹிண்ட்ராப்பை என்ற இயக்கத்தை உடைத்து, அதன் ஒற்றுமையை வலுவிழக்கச் செய்வதே தேசிய முன்னணியின் நோக்கம். அதை வெற்றிகரமாக நஜிப் செய்து முடித்துவிட்டார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப்புக்கு இந்திய மக்களிடம் இருந்தது போன்ற ஒரு பற்று, இனி வரும் காலங்களில் இருக்கப்போவதில்லை. இதனால் அவ்வியக்கை உருவாக்கியவன் என்ற முறையில் நான் தோற்றுவிட்டேன் என்று உதயமூர்த்தி ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் தான் 514 நாட்கள் சிறையில் இசா சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்தது எதற்காக? இப்படி தேசிய முன்னணியிடம் சரணடைந்து ம.இ.கா போன்ற எடுபுடி கட்சியாக ஹிண்ட்ராப் உருவாகி அம்னோவிற்கு சேவை செய்யவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் பொதுத்தேர்தலில், கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் உதயகுமார், அங்கு வெற்றி பெற்றால், ஹிண்ட்ராப்பைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுவார்.