Home நாடு “இந்திய சமூகத்தின் பங்களிப்பினால் வளர்ந்த நாடு மலேசியா” – விக்னேஸ்வரன் தேசியதின வாழ்த்துச் செய்தி

“இந்திய சமூகத்தின் பங்களிப்பினால் வளர்ந்த நாடு மலேசியா” – விக்னேஸ்வரன் தேசியதின வாழ்த்துச் செய்தி

571
0
SHARE
Ad

தேசிய தினத்தை முன்னிட்டு
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

நமது அன்பிற்குரிய நாட்டின் 64-வது தேசிய தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் அனைத்து மலேசியர்களுக்கும் எனது சார்பிலும், மஇகா சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அனைத்து மலேசியர்களும் ஒருங்கிணைந்து, மதம், இனம் பேதங்களைக் கடந்து கொண்டாடும் ஒரே நாள் நமது தேசிய தினமாகத்தான் இருக்க முடியும்.

அந்த வகையில் நாம் ஒவ்வொருவருக்கும், மலேசியக் குடிமகன் என்ற முறையில் இந்த நாட்டுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை அமைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்திய சமூகத்தினரும் இந்த தேசிய தினத்தில் பெருமைப்பட்டுக் கொள்ளும் வண்ணம் சிறப்பான பங்களிப்பைக் கடந்த காலங்களிலும், இன்றைய காலகட்டத்திலும் வழங்கி வந்திருக்கின்றனர்.

நமது நாடு இந்த அளவுக்கு செழிப்போடும், வளமையோடும் மேம்பாடுகளோடும் திகழ்வதற்கு முக்கியக் காரணம், நமது மூதாதையர்கள் கடந்த காலங்களில் காடு என்றும், மலை என்றும், தோட்டங்கள் என்றும் பாராமல் வழங்கிய கடுமையான உடல் உழைப்புதான் என்பதை மலேசியர்கள் மறந்து விட மாட்டார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது நாட்டின் செல்வச் செழிப்புக்கும், இயற்கை அழகுக்கும் அடிப்படையாகத் திகழும் இரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள் ஆகியவற்றிலும், நமது நாட்டின் பழமையான சாலைகளிலும், இரயில் தண்டவாளங்களிலும், நமது மூதாதையர்களின் இரத்தமும், வியர்வையும் கலந்த உழைப்பு இரண்டறக் கலந்திருக்கிறது.

1957-இல் நமது நாடு சுதந்திரத்திற்காகப் போராடியபோது அதிலும் நாம் முக்கியப் பங்கு வகித்தோம். சுதந்திரத்திற்கான பேச்சு வார்த்தைகளில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் அமைப்பாக மஇகாதான் செயல்பட்டது.

அப்போதைய மஇகா தேசியத் தலைவர் துன் சம்பந்தன் அவர்கள் நமது இந்திய சமூகத்தின் சார்பாக அந்தப் பேச்சு வார்த்தைகளில் பங்கு கொண்டு சுதந்திரப் பிரகடனத்திற்கான அதிகாரபூர்வ ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து நாட்டில் ஆட்சி அமைத்த தேசிய முன்னணி அரசாங்கத்திலும் மஇகா, 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு கொண்டு பல்வேறு வகைகளிலும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவி புரிந்தது.

எனவே, இந்த தேசிய தினம் என்பது நமது நாட்டில் இந்திய சமுதாயத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

எனவே, இந்த தேசிய தினக் கொண்டாட்டங்களில் நாமும் உணர்வுபூர்வமாகப் பங்கெடுப்போம். முழு மனதுடன் ஈடுபடுவோம். இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றிப் பறக்க விடுவோம். பயன்படுத்தும் கார்களிலும், வாகனங்களிலும் நமது தேசியக் கொடியைப் பொருத்தி நமது விசுவாசத்தையும், ஈடுபாட்டையும் காட்டுவோம்.

தேசியக் கொடி தாங்கிய சின்னங்களை, அதன் வண்ணங்களைக் கொண்ட ஆடைகளை அணிந்து நமது பங்கெடுப்பைக் காட்டுவோம்.

நமது இளைய சமுதாயத்தினருக்கு நமது மூதாதையர்கள் ஆற்றிய பங்களிப்பையும், அவர்களும் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக இணைந்து போராடிய வரலாற்றையும் எடுத்துரைப்போம். நமது நாட்டின் எதிர்காலத்திலும் அதன் வளர்ச்சியிலும் இளைய தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதைப் புரிய வைப்போம்.

அனைவருக்கும் இனிய தேசிய தின வாழ்த்துகள்.

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்