Home நாடு “மலேசியக் குடும்பம் உணர்வோடு கொண்டாடுவோம்” – சரவணனின் தேசிய தின வாழ்த்து

“மலேசியக் குடும்பம் உணர்வோடு கொண்டாடுவோம்” – சரவணனின் தேசிய தின வாழ்த்து

537
0
SHARE
Ad

மஇகா துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தேசிய தின வாழ்த்துச் செய்தி

மலேசியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த 64ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் மட்டுமன்றி, மலேசியர்கள் எனும் அடையாளத்துடன் உலகின் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் இவ்வேளையில் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

“பரிவுமிக்க மலேசியா” எனும் கருப்பொருளில் வித்தியாசமான சூழலில், இரண்டாவது முறையாக தேசிய தினத்தைக் கொண்டாடுகிறோம். ஆனாலும் நமது தேசப்பற்றும், பல இன மக்களிடையே இருந்து வந்த ஒற்றுமையும், புரிந்துணர்வும் இந்த சுதந்திர தினத்தில் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை. அதற்குச் சான்றாக வீடுகள், வாகனங்கள், சாலைகள் என காணும் இடமெல்லாம் மலேசியக் கொடி கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

கொரோனா தொற்றின் பரவலால் ஏற்படும் அனைத்து சமூக-பொருளாதார பாதிப்புகளையும் நாம் இன்னும் கடந்து வருகிறோம். தொடர்ந்து விடாமுயற்சியுடன், ஒற்றுமையாக இருந்து கொரோனா தொற்றின் சங்கிலியை உடைப்போம். பொருளாதாரத்தில் மேன்மையடைவோம்.

#TamilSchoolmychoice

பரிவுமிக்க மலேசியர்களாக இந்த இக்கட்டான சூழலில் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டி, சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்களின் உழைப்பு வீண் போகவில்லை என்பதை நிரூபிப்போம்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த நாம் அனைவரும், ஒரே ‘மலேசியக் குடும்பம்’ எனும் உணர்வோடு ஒன்றுபட்டு நல்லிணக்கத்துடன் செயல்படுவோம். சுகாதார பிரச்சனையும், பொருளாதார சிக்கலும் மக்களைச் சூழ்ந்து வரும் இவ்வேளையில் எதிர்மறையான எண்ணங்களுக்குத் தீனி போட வேண்டாம். அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவோம்.

பலரின் தியாகத்திலும், அர்ப்பணிப்பிலும் கிடைத்த சுதந்திரத்தையும், அதன் சரித்திரத்தையும் அடுத்த தலைமுறையினரும் அறியச் செய்வோம்.

சுதந்திர தின வாழ்த்துகளுடன்,

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்