Home இந்தியா பெரியார் பிறந்த நாள், இனி “சமூக நீதி நாள்” – ஸ்டாலின் அறிவிப்பு

பெரியார் பிறந்த நாள், இனி “சமூக நீதி நாள்” – ஸ்டாலின் அறிவிப்பு

754
0
SHARE
Ad

சென்னை : தன் வாழ்நாள் முழுக்க தமிழக நலன்களுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய, தந்தை பெரியார் பிறந்த நாளான, செப்டம்பர் 17ஆம் நாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஆண்டு தோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும். சாதிய ஏற்றத் தாழ்வு, பெண்ணடிமைத்தனத்தை உதறித்தள்ள அந்நாளில் உறுதியேற்போம்! பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியட்டும்!”

#TamilSchoolmychoice

தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக…பெரியார் உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. தந்தை பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம்; சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களைச் சமநிலையில் மதிப்போம்” எனத் தெரிவித்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal