Home நாடு நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பிரச்சனை – அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பிரச்சனை – அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார்

1015
0
SHARE
Ad

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தில், மந்திரி பெசாருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தை பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார்.

வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 9) சிரம்பானிலுள்ள மந்திரி பெசாரின் அதிகாரத்துவ இல்லத்திற்கு வருகை தந்த அன்வார் இப்ராகிம், அங்கு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள், பிகேஆர் தொகுதித் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளை நேரில் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக அமினுடின் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அன்வாரின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஶ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் எம்.இரவி, மந்திரி பெசாருக்கும் தங்களுக்கும் இடையிலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இனி, 15-வது பொதுத் தேர்தலை நோக்கி தீவிரமாகப் பாடுபடுவதும், மீண்டும் மாநில அரசாங்க ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் தங்களின்  நோக்கம் என்றும் ரவி கூறியிருக்கிறார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை – பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் மறுப்பு

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாரா அமினுடின் ஹாருணைக் கவிழ்ப்பதற்கு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஒருங்கிணைந்திருக்கின்றனர் என அண்மையில் செய்திகள் வெளியாகின.

இரவி முனுசாமி

அந்த நால்வரில் ஶ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் எம்.இரவியும் ஒருவர் எனவும் அந்த செய்தி தெரிவித்திருந்தது.

இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளித்த இரவி மந்திரி பெசாரைக் கவிழ்க்கும் எண்ணம் எதுவுமில்லை என்றும் இது வெறும் உட்கட்சிப் பிரச்சனை மட்டுமே என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

உட்கட்சிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பேன் – நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் உறுதி

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்துக் கருத்துரைத்திருந்த நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹாருண் மாநில பிகேஆர் விவகாரங்களைத் தான் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். கொவிட் தொற்று காரணமாகவே கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவில்தான் நேற்று அன்வார் இப்ராகிம் நெகிரி செம்பிலான் பிகேஆர் தரப்புகளைச் சந்தித்து நிலவிய பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal