1979-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள்!
கிள்ளானின் பிரபலமான ஹோக்கியன் மண்டபத்தில் இரண்டு நாட்களுக்கான மஇகா தேசியப் பொதுப் பேரவையும் அந்த ஆண்டுக்கான கட்சித் தேர்தல்களும் நடந்து முடிந்து வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்ட, இரண்டாம் நாள் மாலை வேளை!
மத்திய செயலவைக் கூட்டம் முடிவடைந்து அனைவரும் வெளியே வந்தனர். அதுவரையில் கட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த சி.சுப்பிரமணியத்துக்குப் பதிலாக (டான்ஶ்ரீ சுப்ரா) எம்.மகாலிங்கம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
செனட்டராக இருந்த மகாலிங்கம் 1979 மஇகா தேர்தலில் 3 மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவராக மூன்றாவதாகத் தேர்வு பெற்றிருந்தார். மஇகா ஒழுங்கு நடவடிக்கைக் குழு செயலாளராகவும் அப்போது பணியாற்றி வந்தார்.
1979-இல் மாணிக்கா அவருக்கு வழங்கிய தலைமைச் செயலாளர் பதவிதான் அவருக்குக் கிடைத்த முதல் தேசிய நிலையிலான பதவி.
ஏன் இந்த தலைமைச் செயலாளர் மாற்றம்?
சுப்ராவுக்குப் பதிலாக மகாலிங்கம் நியமிக்கப்பட என்ன காரணம்?
இந்தக் கேள்விகளுக்குள் செல்லும் முன் 1979-ஆம் ஆண்டு காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலைகளையும் அப்போதிருந்த மஇகா அரசியல் கள நிலவரங்களையும் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
சுவாரசிய வரலாற்றுத் திருப்புமுனைகளை ஏற்படுத்திய 1979 மஇகா தேர்தல் களம்…
1977-இல் கட்சியின் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் அப்போதைய உதவித் தலைவரான ச.சாமிவேலுக்கும், தலைமைச் செயலாளரான சுப்ராவுக்கும் இடையிலான போட்டியில் சுப்ரா 26 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.
இருந்தாலும் சுப்ராவையே மீண்டும் மஇகா தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு மாணிக்கா நியமித்தார். 1973-இல் மாணிக்கா தேசியத் தலைவரானதும் தனது தலைமைச் செயலாளராக முதன் முதலில் நியமித்தது சுப்ராவைத்தான் நியமித்தார். அப்போது மஇகாவின் நிர்வாகச் செயலாளராக சுப்ரா பணியாற்றிக் கொண்டிருந்தார்.
1978 பொதுத் தேர்தல் சுப்ராவுக்கு இன்னொரு பின்னடைவை ஏற்படுத்தியது. 1974 பொதுத் தேர்தலில் டாமன்சாரா தொகுதியில் வெற்றி பெற்று துணையமைச்சராக இருந்த சுப்ரா, 1978 பொதுத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.


அவரை எதிர்த்து ஜசெக சார்பில் களம் கண்டவர் பிரபல தொழிற் சங்கவாதியான மக்கள் தொண்டன் வி.டேவிட்.
1978 பொதுத் தேர்தலில் சுப்ரா சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், 1979 ஜனவரியில் சுப்ரா அப்போதைய பிரதமர் துன் ஹூசேன் ஓன் ஆதரவோடு செனட்டராக நியமிக்கப்பட்டார்.
ஆக, 1979 மஇகா தேர்தல்கள் நடைபெற்றபோது சாமிவேலு, கட்சியின் துணைத் தலைவர்-சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்- ஊராட்சி, வீடமைப்புத் துறை துணையமைச்சர்!
சுப்ராவோ செனட்டராகவும், மஇகா தலைமைச் செயலாளராகவும் இருந்தார். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.


டத்தோ கு.பத்மநாபன் துணையமைச்சராகவும், மஇகா மத்திய செயலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். தேசிய நிலையில் கட்சிப் பதவி எதனையும் பத்மா அப்போது வகிக்கவில்லை.
1979 மஇகா தேர்தலில் மஇகாவின் மூன்று தேசிய உதவித் தலைவர்களுக்கான போட்டியில் குதிக்க முடிவெடுத்தார் சுப்ரா. அவருக்கு ஆதரவாக பத்மாவையும் உதவித் தலைவராக இணைத்துக் கொண்டார்.
1979 மஇகா தேர்தலில் சாமிவேலு துணைத் தலைவராக ஏகமனதாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
சுப்ரா அந்தத் தேர்தலில் தங்களின் தரப்பில் மூன்றாவது உதவித் தலைவர் வேட்பாளர் ஒருவரைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். காரணம், உதவித் தலைவர் தேர்தலில், தான் முதல் உதவித் தலைவராகவும், பத்மா இரண்டாவது உதவித் தலைவராகவும் வெற்றி பெற வேண்டுமானால் சாமிவேலு தரப்பு பேராளர்களின் ஆதரவும் வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார் சுப்ரா.
சாமிவேலுவை எதிர்த்து இந்த முறை துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடாததால், அவரின் ஆதரவாளர்களின் வாக்குகளையும் பெற முடியும் என்பதையும் சுப்ரா கணித்தார்.
மூன்றாவது உதவித் தலைவருக்கான இடத்தில் சாமிவேலுவின் ஆதரவாளர் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்ற கணிப்பால், தங்கள் அணியில் 3-வது உதவித் தலைவர் வேட்பாளரை சுப்ராவும்-பத்மாவும் சேர்த்துக் கொள்ளவில்லை.
உதவித் தலைவருக்கு காந்தனும் போட்டி


அப்போது சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்த டத்தோ வி.எல்.காந்தனும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
மூன்றாவது உதவித் தலைவர் வேட்பாளராக காந்தனுக்கு ஆதரவு தரும்படி மாணிக்காவே சுப்ராவை கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு சுப்ரா மறுத்துவிட்டதாகவும், மாறாக காந்தனை போட்டியிலிருந்து விலகிக் கொள்ளும்படி சுப்ரா வற்புறுத்தினார் என்றும், இதனால் மாணிக்காவுக்கும் சுப்ராவுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன என்றும் அப்போது தகவல்கள் உலவின.
மாணிக்காவின் தம்பியான வெ.கணேசன் அப்போது மஇகாவில் தீவிரம் காட்டி வந்தார். இப்பொழுது இன்னொரு தம்பியான காந்தனும் உயர்நிலைப் பதவிக்குப் போட்டியிடுவது பேராளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும், எனவே அவரைத் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வது பின்னடைவை ஏற்படுத்தும் என சுப்ரா கருதினார்.
சுப்ராவின் ஆதரவை நாடிய பண்டிதன்


இந்த காலகட்டத்தில் மஇகா அரசியலில் இன்னொரு எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது. உதவித் தலைவராகப் போட்டியிட முன்வந்திருந்த எம்.ஜி.பண்டிதன் தனக்கு ஆதரவு வழங்குமாறு சுப்ராவை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்.
1977-இல், சிலாங்கூர் மாநிலத் தலைவராக இருந்த சாமிவேலுவின் ஆதரவோடு சிலாங்கூர் மாநிலத்தின் வழி மத்திய செயலவை உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தார் பண்டிதன்.
1979-இல் சிலாங்கூர் மாநிலத்திலிருந்து கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்ட காரணத்தால், மஇகா கூட்டரசுப் பிரதேசம் என்ற புதிய மாநில மஇகா உருவானது. பண்டிதன் தலைவராக இருந்த லொக்யூ சன்பெங் கிளை இப்போது கூட்டரசுப் பிரதேச மாநிலத்திற்குள் இடம் பெற்றிருந்தது.
1979-ஆம் ஆண்டில் மஇகா கூட்டரசுப் பிரதே மாநிலத் தலைவருக்கான போட்டியில், சாமிவேலுவின் ஆதரவோடு சுப்ராவை எதிர்த்துப் போட்டியிட்டார் பண்டிதன். எனினும் அந்தப் போட்டியில் தோல்வி கண்டார்.
அதைத் தொடர்ந்துதான் பண்டிதன் சுப்ராவைச் சந்தித்து தன்னை 3-வது உதவித் தலைவராக ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார்.
சுப்ராவோ, அதற்கும் மறுத்து விட்டார். இருந்தாலும், சுப்ரா-பண்டிதன் இடையிலான அந்த சந்திப்புதான் அவர்களுக்கிடையிலான அரசியல் நட்புறவின் தொடக்கமாக அமைந்தது.
அதுவரையில் நெருங்கி வராமல், எதிரும் புதிருமாக இருந்த சுப்ராவும் பண்டிதனும் அரசியல் கருத்துப் பரிமாற்றங்களுக்காகச் சந்தித்துப் பேசத் தொடங்கியதும் அப்போதுதான். அதன் பின்னர்தான் இருவருக்கும் இடையில் நட்பும் அரசியல் இணக்கமும் வலுப்படத் தொடங்கியது.
பண்டிதனை தனது அணியில் சேர்த்துக் கொள்ள இயலாததற்கான காரணத்தையும் சுப்ரா, பண்டிதனிடம் விளக்கினார்.
தானும், பத்மாவும் உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் இருவரும் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், அதன் காரணமாக, ஒரே ஒரு மூன்றாவது உதவித் தலைவர் வேட்பாளர் மட்டுமே வெல்ல முடியும் என்றும் அந்த மூன்றாவது வேட்பாளர் சாமிவேலு ஆதரவு பெற்ற வேட்பாளராக மட்டுமே இருக்க முடியும் என்றும் சுப்ரா தனது தரப்பு வாதங்களை பண்டிதனிடம் முன்வைத்தார்.
மேலும், தனக்கு நெருங்கிய நண்பரான காந்தனும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் – மாணிக்காவின் தம்பியான அவரையே உதவித் தலைவர் அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் பண்டிதனிடம் கூறினார் சுப்ரா. காந்தனை விட்டுவிட்டு பண்டிதனை தனது அணியின் மூன்றாவது வேட்பாளராக இணைத்துக் கொண்டால் அதனால் மாணிக்காவும் அதிருப்தி அடைவார் என்றும் சுப்ரா விளக்கினார்.
இந்த விளக்கங்களையெல்லாம் கேட்டுக் கொண்ட பண்டிதன் “பரவாயில்லை. நான் தன்னந் தனியாகவே உதவித்தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று கூறிவிட்டார்.
சாமிவேலு – பண்டிதன் இடையில் பிற்காலத்தில் ஏற்பட்ட விரிசல்களுக்கும் அந்த 1979 கட்சித் தேர்தல் சம்பவங்களே வித்திட்டன எனலாம்.
இறுதியில் சுப்ராவின் வியூகம் வெற்றி பெற்றது.
1979 கட்சித் தேர்தல்களில் சுப்ரா முதலாவது உதவித் தலைவராகவும் பத்மா இரண்டாவது உதவித் தலைவராகவும் வெற்றி பெற்றனர். சுப்ரா கணித்ததைப் போன்று சாமிவேலு ஆதரவோடு போட்டியிட்ட ஜோகூர் மாநில மஇகா தலைவர் ஜி.பாசமாணிக்கம் மூன்றாவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார்.
உதவித் தலைவருக்குப் போட்டியிட்ட 8 வேட்பாளர்களில், 8-வது வேட்பாளராக ஆகக் குறைந்த வாக்குகளோடு காந்தன் தோல்வியடைந்தார்.
7-வது வேட்பாளராகத் தோல்வியடைந்தார் பண்டிதன்.
பண்டிதனுக்குக் கிடைத்த 300+ வாக்குகள்
1979 கட்சித் தேர்தல்தான் பண்டிதனின் அரசியலில் வாழ்க்கையிலும் ஒரு முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
1977-இல் மஇகா சிலாங்கூர் மாநிலத்தின் மத்திய செயற்குழு உறுப்பினராக, சாமிவேலுவின் ஆதரவோடு வெற்றி பெற்ற பண்டிதன் 1979 கட்சித் தேர்தல்கள் நடைபெற்ற காலத்தில் அவரோடு அரசியல் நட்பை முறித்துக் கொண்டார்.
உதவித் தலைவராக தனக்கு சாமிவேலு, சுப்ரா இருதரப்புகளும் ஆதரவு தராத நிலையில் தனித்து தனது சொந்த செல்வாக்கைச் சோதித்துப் பார்க்க களமிறங்கினார் பண்டிதன்.
அவரது ஆதரவாளர்கள் நாடு முழுக்க சுற்றிச் சுழன்று வீடு வீடாக சென்று பேராளர்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்டினர். பண்டிதனும் இரவு பகல் பாராமல் இயன்றவரை எல்லாப் பேராளர்களையும் சந்தித்து ஆதரவைக் கேட்டார்.
எனினும் 8 வேட்பாளர்கள் போட்டியிட்ட உதவித் தலைவர் தேர்தலில் பண்டிதன் 7-வது இடத்தை – சுமார் 300 + வாக்குகள் மட்டுமே பெற்றுப் பிடிக்க முடிந்தது.
ஆனால், அந்தத் தேர்தல் பண்டிதனின் மற்றொரு முக்கியத்துவத்தை மஇகா அரசியல்வாதிகளுக்குப் படம் பிடித்துக் காட்டியது.
1977-இல் சிலாங்கூர் மாநில பேராளர்களின் ஆதரவுடன் – குறிப்பாக சாமிவேலு ஆதரவுடன்தான் – பண்டிதன் மத்திய செயலவை உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தார் என்ற பிம்பம் அதுவரை கட்டமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தனக்கென தனித்த ஆதரவுப் பேராளர்கள் தேசிய அளவில் சுமார் 300 பேர் இருக்கிறார்கள் என்பதை 1979 கட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபித்தார் பண்டிதன். அப்போது முதல்தான் தேசிய அளவிலும் அவரின் செல்வாக்கு பரவத் தொடங்கியது.
மற்ற உதவித் தலைவர் வேட்பாளர்கள் எல்லாம் மாநிலத் தலைவர்கள் போன்ற பின்புலங்களோடும், சிலர் சாமிவேலு, சுப்ரா ஆதரவாளர்கள் என்ற அடையாளங்களோடும், அரசாங்கப் பதவிகளோடும் போட்டியிட்ட நிலையில் – எந்த பின்புலமும் இல்லாமல், ஒரு சாதாரண கிளைத் தலைவராக மட்டுமே போட்டியில் குதித்து 7-வது இடத்தைப் பிடித்ததும் – 300 வாக்குகளுக்கு மேல் பெற்றதும் – பண்டிதனின் தனிமனித செல்வாக்கை எடுத்துக் காட்டியது.
இதுவே, பின்னாளில் அவர் பல அரசியல் பேரங்களை நடத்துவதற்கும், அவரது அடிப்படை அரசியல் ஆதரவு பேராளர்களுக்கான கணக்காகவும் இருந்து, அவருக்குத் துணை புரிந்தது.
டி.பி.விஜேந்திரன் அரசியல் வருகை


1979 கட்சித் தேர்தல்கள் மஇகாவில் மற்றொரு புதிய முகத்தின் வரவை – அவரது எழுச்சியான அறிமுகத்தை – பதிவு செய்தன.
வழக்கறிஞரான டி.பி.விஜேந்திரன்தான் அந்தப் புதிய முகம்!
1978 காலகட்டத்தில் திடீரென சில இந்து ஆலயங்களில் சில சமூக விரோதிகள் நுழைந்து இந்து கடவுள் சிலைகளை உடைக்கும் சம்பவங்கள் பரவலாக நடைபெற்றன. காவல் துறையும் இதையெல்லாம் யார் செய்வது என்பதைக் கண்டுபிடிக்க தீவிரமாக இயங்கியது.
ஆலய நிர்வாகங்கள் தங்களின் ஆலயங்களில் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், ஆலய நிர்வாகத்தினரே பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் காவல் துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ஒருநாள் கெர்லிங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் அதன் நிர்வாகத்தினரே இரவு நேரத்தில் காவலில் ஈடுபட்டிருக்கும்போது, அந்த ஆலயத்தின் சிலைகளை உடைத்து சேதம் செய்வதற்காக 5 பேர் கொண்ட ஒரு குழுவினர் வந்தனர்.
அவர்களைக் காவலில் இருந்த ஆலயத்தினர் எதிர்க்க, அப்போது நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். தாக்க வந்த ஒருவன் கடுமையான காயங்களுக்கு இலக்கானான். ஆலயத் தரப்பினர் சிலருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர் சிலர் மீது, காவல் துறை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்த – அவர்களுக்காக இலவசமாக வழக்காட முன்வந்தார் டி.பி.விஜேந்திரன்.
அந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளும் மலேசியா முழுமையிலும் உள்ள அனைத்து இந்திய சமுதாயத்தினரின் உன்னிப்பான கவனிப்புக்கு உள்ளானது.
இதனால், விஜேந்திரன் மலேசியா முழுமையிலும் இந்தியர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மற்ற இனத்தவரிடையேயும் நன்கு அறியப்பட்ட முகமானார்.
வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 1979 மஇகா கட்சித் தேர்தலில் மூன்று தேசிய நிலை மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் குதித்தார் விஜேந்திரன்.
சொல்லத் தேவையில்லை! பேராளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மிகப் பெரும்பான்மை வாக்குகளில் முதலாவது மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே நாளில் மஇகா வட்டாரத்திலும் புகழ் பெற்றார் விஜேந்திரன்.
இரண்டாவதாக அதிக வாக்குகளோடுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாமிவேலுவின் தளபதியாகத் திகழ்ந்த டத்தோ வி.கோவிந்தராஜ் ஆவார். மூன்றாவதாகத்தான் மகாலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1979-இல் கட்சிக்கு புதிய தலைமைச் செயலாளர்
இப்படியாக,1979-ஆம் ஆண்டு மஇகா கட்சித் தேர்தல்கள் முதல் நாள் முடிந்த நிலையில், மஇகா தேசியப் பொதுப் பேரவையின் இரண்டாம் நாள் காலை முதல், அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற புதிய பிரச்சனையும், அரசியல் விவாதமும் பேராளர்களிடையே எழுந்தது.
சுப்ரா உதவித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலாளரை நியமிக்க வேண்டும் என ஒரு சாரார் கூறினர்.
சுப்ராவின் தீவிர ஆதரவாளர்களோ, சுப்ராவையே மீண்டும் தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என மாணிக்காவுக்கு நெருக்குதல்கள் தந்தனர். உதவித் தலைவருக்கு அதிகமாக கட்சிப் பணிகள் இருக்காது என்பதால், அவரே தலைமைச் செயலாளராகவும் தொடரலாம் என அவர்கள் வாதிட்டனர்.
மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த விஜேந்திரனை புதிய தலைமைச் செயலாளராக மாணிக்கா நியமிக்கப் போகிறார் என்ற தகவல்களும் பரவத் தொடங்கின. சாமிவேலுவின் தீவிர ஆதரவாளராக இருந்த விஜேந்திரன் மீது மாணிக்காவுக்கு நல்ல அபிமானம் இருந்தது.
சுப்ராவின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், உதவித் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த டத்தோ காந்தனிடம் சென்று, “உங்கள் அண்ணனிடம் சொல்லி ஒன்று சுப்ராவையே மீண்டும் தலைமைச் செயலாளராக நியமியுங்கள். உதவித் தலைவராக அவருக்கு பெரிய பணிகள் எதுவும் இருக்கப் போவதில்லை. இல்லாவிட்டால், நீங்களே தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் விஜேந்திரன் மட்டும் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படக் கூடாது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கேட்டுக் கொண்டனர்.
இரண்டாவது நாள் தேசியப் பொதுப் பேரவை முடிந்ததும், இறுதியில் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறுவது மஇகாவில் வழக்கம். அந்தக் கூட்டத்தில்தான் தலைமைச் செயலாளர், தலைமைப் பொருளாளர் போன்ற நியமனங்கள் தேசியத் தலைவரால் அறிவிக்கப்படும்.
இரண்டாவது நாள் மாநாடு முடிந்து கிள்ளான் ஹோக்கியன் மாநாட்டு மண்டத்தின் மேல்மாடி அறையில் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற்றது. நூற்றுக் கணக்கான பேராளர்கள் முடிவைத் தெரிந்து கொள்வதற்காக மாநாட்டு மண்டபத்திலேயே காத்திருந்தனர்.
அடுத்த தலைமைச் செயலாளராக மீண்டும் சுப்ராவா, காந்தனா, அல்லது விஜேந்திரனா? என்ற பரபரப்பு பேராளர்களிடையே பரவிக் கிடந்தது.
மத்திய செயலவைக் கூட்டம் முடிந்ததும், நடந்து முடிந்திருந்த கட்சித் தேர்தலில் மத்திய செயலவை உறுப்பினருக்கான போட்டியில் மூன்றாவதாக வெற்றி பெற்ற செனட்டர் எம்.மகாலிங்கத்தை மாணிக்கா புதிய தலைமைச் செயலாளராக நியமித்திருக்கிறார் என்ற யாரும் எதிர்பாராத அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜூன் 1979-இல் கட்சித் தேர்தல்கள் முடிந்த அடுத்த நான்கே மாதங்களில் மாணிக்காவின் மரணம் அக்டோபர் 12-ஆம் தேதி நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து மஇகா அரசியலும் மீண்டும் தலைகீழாக மாறியது.
சாமிவேலு இடைக்காலத் தேசியத் தலைவரானதும், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து மகாலிங்கம் அகற்றப்படுவார் என்ற ஆரூடங்கள் எழுந்தன.
ஆனால், மாணிக்கா-சுப்ரா அணியின் தீவிர ஆதரவாளராக அதுவரையில் இருந்த மகாலிங்கம் சாமிவேலு தலைமைப் பொறுப்பை ஏற்றதும் அவரின் தீவிர ஆதரவாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
அதன் காரணமாக, தலைமைச் செயலாளராக அடுத்த பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தார். சட்டமன்றம், நாடாளுமன்றம், துணையமைச்சர் என அரசாங்கப் பதவிகளையும் பெற்றார்.
மகாலிங்கம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு வழிவகுத்த,1979- கட்சித் தேர்தல்கள், மஇகா வரலாற்றில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தின என்பதையும், கட்சியின் அரசியல் பாதையை திசை திருப்பின என்பதையும் மறுக்க முடியாது.
-இரா.முத்தரசன்
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal