Home நாடு “டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்புத் திட்டம் உருவான வரலாறு” – காந்தன் விவரிக்கிறார்

“டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்புத் திட்டம் உருவான வரலாறு” – காந்தன் விவரிக்கிறார்

585
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 4) இயங்கலை வழி நடைபெற்ற டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ வி.எல்.காந்தன் அந்தத் திட்டம் உருவான வரலாறு குறித்து எடுத்துரைத்தார்.

இந்த இயங்கலை வழியான பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு டத்தோஶ்ரீ எம்.சரவணன் தலைமை வகித்தார்.

“இந்தப் புத்தகப் பரிசுத் திட்டம் தொடங்கி 24 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்த முறைதான் முதல் முறையாக மேடையில், பங்கேற்பாளர்கள் முன்னிலையில் நான் பேசுகிறேன். காரணம், எனது சகோதரர் மாணிக்காவைப் போலவே நானும் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தைத் தீவிரமாகப் பின்பற்றுபவன். Don’t let the left hand knows what the right hand gives என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப, வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்ற கொள்கையோடு பணியாற்ற விரும்புபவன் நான். இப்போது இந்த டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டம் நிரந்தரமாக்கப்பட்டு விட்டதாலும், அது ஓர் அமைப்பின் கீழ் நிரந்தரமாக இனி தொடரப்படும் என்பதாலும், அதன் தொடக்ககால பூர்வீகத்தையும், அதன் நோக்கங்களையும் குறித்து இப்போது பேச விரும்புகிறேன்” என்ற முகவுரையோடு தொடங்கிய காந்தன் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டம் தொடங்கிய வரலாறு தொடர்பில் பல சுவாரசியமாக விவரங்களைத் தெரிவித்தார்.

டத்தோ வி.எல்.காந்தன்
#TamilSchoolmychoice

“25 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பத்திரிகை ஆசிரியர் ஆதி.குமணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த நேரம். அவரும் நானும், சங்கத்தின் ஆலோசகராக இருந்த ரேடியோ பாலா என அன்புடன் அழைக்கப்பட்ட ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களும், சங்கத்தின் உதவித் தலைவராக இருந்த இராஜேந்திரனும் – நாங்கள் நால்வரும் – கோலாலம்பூர் சிலாங்கூர் கிளப்பில் சந்தித்தோம். அப்போது கவிஞர் பாதாசன் சங்கத்தின் செயலாளராக இருந்தார். டான்ஶ்ரீ மாணிக்காவின் நினைவாகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், அவர் பெயரில் புத்தகப் பரிசுத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கான பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்” என காந்தன் தெரிவித்தார்.

“அந்த நேரத்தில் எனக்கு அண்ணனின் சொல்வாக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. “Plan your work and work your plan” என்பதுதான் அது. அதாவது “உங்கள் வேலைகளைத் திட்டமிடுங்கள். நீங்கள் திட்டமிட்டதற்கேற்ப செயல்படுங்கள்” என்பதுதான் அதன் பொருள். If you cannot carry out any project sustainably don’t start it – என்பதும் அண்ணன் மாணிக்கா அடிக்கடி கூறும் இன்னொரு தாரக மந்திரமாகும். நீங்கள் தொடங்கும் ஒரு திட்டத்தை தொடர்ச்சியாக, நிலையாக செயல்படுத்த முடியாது என்றால் அந்தத் திட்டத்தைத் தொடங்கவே செய்யாதீர்கள்” என்பதுதான் இதன் பொருள். நான் முன்வைத்த இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து, டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டத்தை நானும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தொடர்ந்து நடத்துவோம் என உத்தரவாதம் அளிக்கிறோம் என இராஜேந்திரன் அப்போது தெரிவித்தார். அடுத்ததாக, அந்தப் புத்தகப் பரிசுத் தேர்வு மிகவும் உயர்வான நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும், டான்ஶ்ரீயின் கௌரவத்திற்கும் பெயருக்கும் ஏற்ப இருக்க வேண்டும். அந்தப் பரிசு பெறுவது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தையும் நான் முன்வைத்தேன். It must be of High Standard – a coveted prize – என்பதுதான் எனது கருத்தாக இருந்தது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் The Booker Man prize of England என்ற திட்டத்தின் அந்தஸ்தைப் போல் நமது டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டமும் இருக்க வேண்டும் எனவும் நான் வலியுறுத்தி இருந்தேன்” என காந்தன் தனதுரையில் தொடர்ந்து கூறினார்.

“அதற்கேற்ப, அந்தத் திட்டமும் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. அந்தப் பரிசளிப்பிற்கான முதல் கூட்டம் ஆதி.குமணன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துணையமைச்சர்களான டான்ஶ்ரீ டத்தோ சுப்ராவும், டத்தோ பத்மாவும், இரா.பாலகிருஷ்ணனும் கலந்து சிறப்பித்தார்கள். இன்றுவரை அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதோடு, எனது அண்ணனின் பெயரால் தமிழ் வளர்ச்சிக்கான இந்த சிறிய பங்களிப்பை வழங்க முடிந்தது குறித்து நான் பெருமையும் அடைகிறேன்” எனவும் காந்தன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் கல்வி அறவாரியத்தின் பங்கெடுப்பு

“2018-ஆம் ஆண்டு வரை ஷெர்ன் டெலாமோர் (Shearn Delamore) 0வழக்கறிஞர் நிறுவனத்தில் வசதியான வருமானத்தோடு நல்ல பொருளாதார நிலையில் நான் இருந்து வந்ததால், தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கெனத் தேவைப்பட்ட பொருளாதார உதவிகளை என்னால் செய்து வர முடிந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு, டான்ஶ்ரீ மாணிக்காவின் புதல்வர் இரமணி மாணிக்கவாசகம், “டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் கல்வி அறவாரியம்” மூலம் இந்தத் திட்டத்திற்கான பொருளாதார உதவிகளைச் செய்யும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொண்டார்”என மேலும் கூறிய காந்தன், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இரமணி மாணிக்கவாசகத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

“இனிமேல் இந்தப் புத்தகப் பரிசுத் திட்டம் ஓர் அறவாரியத்தின் மூலம் – ஓர் அமைப்பின் மூலம் – செயல்படுத்தப்படும் என்பதால், அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு இராஜேந்திரனும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தொடர்ச்சியாக, தங்கு தடையின்றி இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்த முடியும். டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டம் மூலம் எனது அண்ணனின் பெயரில் இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஒரு திட்டம் தொடங்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்தேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் அதன் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கும் டான்ஶ்ரீ மாணிக்கா குடும்பத்தின் சார்பில் எனது நன்றியையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியத் தமிழ் இலக்கிய உலகமும், தமிழ் எழுத்துத் துறையும் இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்திருக்கிறது, இனிமேலும் வளர்ச்சியடையும் என்பதால் அத்தகைய சிறிய பங்களிப்பை டான்ஶ்ரீ மாணிக்காவின் பெயரால் வழங்க முடிந்ததற்காக அவரின் குடும்பத்தின் சார்பில் நான் பெருமையும் கொள்கிறேன். டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டம் மேலும் பல்லாண்டுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு, எனது அண்ணனின் பெயருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் – தமிழ் மொழியும், மலேசியத் தமிழ் இலக்கியமும் இதுபோன்ற திட்டங்களால் மேலும் செம்மையடைய வேண்டும் சிறப்படைய வேண்டும்” என்றும் காந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal