கூச்சிங் : கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவாக் மாநிலத்தின் துணை முதல்வர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 31) காலமானார்.
ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் சரவாக் மாநிலத்தின் பாலே (Baleh) சட்டமன்ற உறுப்பினருமாவார். அவர் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றிருந்தார்.
எனினும் அவர் பெற்றிருந்தது எந்த இரக தடுப்பூசி என்பது அறிவிக்கப்படவில்லை.
72 வயதான அவர் பெத்ரா ஜெயாவிலுள்ள நோர்மா சரவாக் மெடிக்கல் சென்டரில் இன்று காலை 7.05 மணியளவில் காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சரவாக் மாநிலத்தை ஆளும் ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பார்ட்டி ராயாட் சரவாக் என்ற கட்சியின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார். கடந்த செப்டம்பர் 28 முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சரவாக் மாநிலத்தில் துணை முதலமைச்சராகப் பதவி வகித்த அதே வேளையில், மாநில உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக மேம்பாட்டு அமைச்ராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal