
கோலாலம்பூர் : அனைத்துலக அளவில் கவனம் பெறும் முக்கிய இலக்கிய விழாக்களான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (George Town Literary Festival), சிங்கப்பூர் இலக்கிய விழா (Singapore Writers Festival) ஆகியவற்றில் வல்லினத்தின் ஆசிரியர்களான ம.நவீன் மற்றும் அ.பாண்டியன் ஆகியோர் இவ்வாண்டு பங்கேற்கின்றனர்.
நெருக்கடி மிகுந்த இந்த கொரோனா சூழலில், இம்மாதம் நடைபெறும் இந்த இரு நிகழ்வுகளும் மனிதத்துவமும் மகிழ்ச்சியும் மேம்பட இலக்கியத்தின் பங்கை நிரூபிக்கின்றன.
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் ம.நவீன்
‘ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா’ அனைத்துலக அளவில் மதிக்கப்படும் மலேசியாவின் மிகப் பெரிய இலக்கிய விழா ஆகும். இவ்விழா பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுடைமைப் பகுதியான ஜார்ஜ் டவுனில், ஆண்டுதோறும் நவம்பர் வார இறுதியில் நடத்தப்படுகிறது.
இம்மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவின் இவ்வருடத்திற்கான கருப்பொருள் சிறிய அண்டங்கள் (மைக்ரோ-காஸ்மோஸ்) ஆகும். சாதாரண உலக வாழ்விலிருந்து அண்டவியல் கற்பனை வரை, ‘ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா 2021’இல் பகிரப்படும். படைப்பாற்றலின் கட்டற்ற வெளிப்பாடும் சுதந்திரமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் அது எவ்வாறு பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் இக்கருப்பொருள் மையமிட்டுள்ளது.
மலேசியாவின் மதிப்புமிக்க எழுத்தாளர்களும் மொழிப்பெயர்ப்பாளர்களுமான பாலின் ஃபென் (Pauline Fan) இவ்வாண்டு விழாவின் இயக்குநராகவும், இசுடீன் ரம்லி (Izzuddin Ramli) நிர்வாகியாகவும் பங்காற்றும் இவ்விழாவில் மலேசிய, தென்கிழக்காசிய மற்றும் அனைத்துலக எழுத்தாளர்களும் பங்கேற்கின்றனர். இவர்களோடு மலேசியத் தமிழ் இலக்கியத்தின் குரலை பதிவு செய்யும் விதமாக எழுத்தாளர் ம.நவீனுடனான உரையாடலும் மலாய் மொழியில் இடம்பெறுகிறது.
சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்து ஒருவர் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன் 2019-இல் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுடனான கலந்துரையாடல் இவ்விழாவில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘மலேசியத் தமிழ் இலக்கியம்’ குறித்து ம.நவீனுடன் கலந்துரையாடல்
நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ‘மலேசியத் தமிழ் இலக்கியம்’ குறித்து ம.நவீனுடன் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடல் நவம்பர் 28-இல் இடம்பெறும். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் போக்குகள், எதிர்கொள்ளும் சவால்கள், முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள், தேசிய ரீதியான அங்கீகாரத்தின் அவசியம் மற்றும் ‘பேய்ச்சி’ நாவலின் தடை என அவர் விரிவாக இந்தக் கலந்துரையாடலில் பேசுகிறார்.
இவ்வாண்டு ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில், மதிப்புமிக்க எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான மரினா மகாதீர், சபா எழுத்தாளர் ருஹைனி மாடரின், நடிகர் வான் ஹனாஃபி போன்ற மலேசிய பிரபலங்களுடன், இந்தோனேசிய நாவலாசிரியர் ஏகா குர்னியாவான், ஜப்பானிய எழுத்தாளர் மினே மிசுமுரா, ஜெர்மன் கவிஞர் ஜான் வாக்னர், கனடிய எழுத்தாளர் சௌவன்காம் தம்மாவோங்சா, நியூசிலாந்து நாவலாசிரியர் டினா மகேரெட்டி, இந்திய எழுத்தாளர் மீனா கந்தசாமி, கென்யா-அமெரிக்க எழுத்தாளர் முகோமா வா ஙுயூ போன்ற 70-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பங்கேற்கின்றனர்.
கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பெரும்பாலும் நிகழ்ச்சிகள் இணையம் வழி ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் நடைபெறுகிறது.
டான்டே அலிகியேரியின் (Dante Alighieri) வாழ்க்கைப் பணியை கொண்டாடும் நிகழ்ச்சி
மேலும், இத்தாலிய கவிஞர் டான்டே அலிகியேரியின் (Dante Alighieri) வாழ்க்கையையும் பணியையும் கொண்டாடுவதன் மூலம் அவரது 700வது ஆண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்துகிறது இவ்விழா. இத்தாலியின் தூதரகத்துடன் இணைந்து, இத்தாலிய இலக்கிய அறிஞர் பேராசிரியர் கியுலியானா நுவோலி, இத்தாலியைச் சேர்ந்த மலேசிய எழுத்தாளர் மஸ்துரா அலடாஸ் ஆகியோருடன் டான்டே பற்றிய கலந்துரையாடலையும், புகழ்பெற்ற பிரிட்டிஷ்-இத்தாலிய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான டிம் பார்க்ஸுடனான உரையாடலும் இடம்பெறுகிறது.
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவிற்கு ‘இலக்கிய விழாவுக்கான அனைத்துலக சிறப்பு விருது’ 2018-இல் வழங்கப்பட்டது. அதுபோல தென்கிழக்கு ஆசியாவில் லண்டன் புக் ஃபேர் இன்டர்நேஷனல் எக்ஸலன்ஸ் விருதுகளில் இலக்கிய விழா விருதைப் பெற்ற முதல் இலக்கிய நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-இல் ஐந்து எழுத்தாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த விழா, தற்போது மலேசியாவின் மிகப்பெரிய இலக்கிய விழாவாகவும், உலகின் தலைசிறந்த இலக்கிய விழாக்களில் ஒன்றாகவும் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநில அரசின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் இவ்விழாவுக்கு அனுமதி இலவசம். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று இலக்கியம் சுவைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க: http://www.georgetownlitfest.com/

‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’ நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியன்
இம்மாதம் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ள ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’ நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியன் பங்கேற்கிறார். பல மொழிகளில் பல்வேறு வகைமைகளில் படைக்கும் சிங்கப்பூர் எழுத்தாளர்களும் அனைத்துலக எழுத்தாளர்களும் பங்கேற்கும் இவ்விழா நான்கு மொழிகளில் நடைபெறும். அனைத்துலக அளவில் சிறப்புப் பெற்ற இவ்விழாவில், அ.பாண்டியன் இரண்டாவது முறையாக இவ்வாண்டு கலந்து கொள்கிறார்.
“இதழ்களின் பயணம்: சிங்கப்பூர், மலேசிய தமிழ் சஞ்சிகைகள்” என்னும் கருத்தரங்கில் மலேசியா, சிங்கப்பூரின் முக்கிய இலக்கிய தமிழ் இதழ்களான வல்லினம், தி சிராங்கூன் டைம்ஸ், அரூ ஆகியவற்றின் பிரதிநிதிகளாக அ.பாண்டியன், சிவானந்தம் நீலகண்டன், ராம்சந்தர் முதலியோர் கலந்துரையாடுகின்றனர்.
தமிழில் தரமான இலக்கியங்கள் புனைவதற்கும், பல்வேறு வகையான எழுத்து வகைமைகளை உருவாக்குவதற்கும் தளங்களை உருவாக்கும் நோக்கில் இந்த இதழ்கள் தொடங்கப்பட்டது குறித்தும் அதன் வளர்ச்சியும் பங்களிப்பும் குறித்து இவர்கள் பேசுவார்கள்.
மேலும், கட்டுரையும் புனைகதையும், தமிழ் இலக்கியத்தில் எல்லைகளும் மீறல்களும், அபி க்ரிஷுடன் இருமொழிக் கதைநேரம், தமிழ், சீன, மலாய் மொழிகளில் நவீன கவிதை என இவ்வாண்டு பல்வேறு தலைப்புகளில் தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
கவிஞரும் திரைப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை, குறும்படப் பயிலரங்கை வழிநடத்துவார். நவம்பர் 7,13 ஆகிய தேதிகளில் இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது. எழுத்தாளர் சு.வேணுகோபால், ‘முன்னோடிகள், மாற்றி எழுதினால்?’ என்ற எழுத்துப் பயிலரங்கை வழி நடத்துவார்.
ஆசியாவின் முதன்மையான இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 1986-ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவாகத் தொடங்கியது. தென்கிழக்கு ஆசிய படைப்பாற்றல் திறமைகளை வெளிப்படுத்தும் தளமான இந்த 10 நாள் விழாவில், கருத்தரங்குகள், பயிலரங்குகள், விரிவுரைகள், நிகழ்ச்சிகள் பல இடம்பெறும். எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் ஒன்றுகூடும் இவ்விழாவில் இவ்வாண்டு, இரண்டு முறை புக்கர் பரிசு வென்ற மார்கரெட் அட்வுட், விட்பிரெட் முதல் நாவல் விருது வென்ற ஜாடி ஸ்மித், பிரிட்டிஷ் கவிஞர் பரிசு பெற்ற கரோல் ஆன் டஃபி, நெபுலா வெற்றியாளர் நீல் கெய்மன், ‘லாம்ப்டா’ இலக்கிய விருது வென்ற ரோக்ஸேன் கே போன்றோர் பங்கேற்கின்றனர்.
மேல்விவரங்களுக்கும் நுழைவுச் சீட்டுகளுக்கும்: www.singapore writersfestival.com
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal