Home நாடு ஜோகூர் : ஆட்டங் காணப் போகும் அடுத்த மாநிலமா? பொத்தானை அழுத்துவாரா மொகிதின்?

ஜோகூர் : ஆட்டங் காணப் போகும் அடுத்த மாநிலமா? பொத்தானை அழுத்துவாரா மொகிதின்?

753
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: அரசியல் குழப்படிகளால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சட்டமன்ற இடைத் தேர்தல் நடத்தப்படும் மாநிலம் மலாக்கா. இதே போன்ற நிலைமை அடுத்து ஜோகூர் மாநிலத்தில் நிகழும் என்பதற்கான முன்னோட்டக் காட்சிகள் அரசியல் அரங்கில் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

துணிச்சல் இருந்தால் ஜோகூர் மாநிலத்தைக் கவிழ்த்துப் பாருங்கள் என அம்னோவின் ஷாரிர் அப்துல் சமாட் பெர்சாத்து தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசினுக்கு சவால் விட்டுள்ளார்.

ஷாரிர் அப்துல் சமாட்

அதற்குப் பதிலளித்த மொகிதின் யாசின், “ஷாரிர் எனக்கு நன்கு தெரிந்த நீண்ட கால நண்பர்தான். இருந்தாலும், முட்டாள்தனமாகப் பேசுகிறார். நான் பயப்படவில்லை. நான் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். ஜோகூர் கவிழ்ந்து விடும். பார்க்க விரும்புகிறீர்களா? ஆனால் நான் மக்கள் நலனுக்காகப் பார்க்கிறேன். அதனால்தான் அப்படிச் செய்யாமல் இருக்கிறேன். மலாக்காவைப் பாருங்கள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று” எனக் காட்டமாகக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மலாக்கா தேர்தல் முடிந்ததும் அரசியல் பழிவாங்கல்கள், சதுரங்க ஆட்டங்கள் ஜோகூர் மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல், அம்னோ இடையில் மோதல்களாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜோகூர் மாநில அரசாங்கத்தில் அம்னோ சார்பிலான மந்திரி பெசாராக டத்தோ ஹாஸ்னி முகமட் செயல்பட்டு வருகிறார்.

பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளும், தேசிய முன்னணி கட்சிகளும் இணைந்த மாநில அரசாங்கம் ஜோகூரில் இயங்கி வருகிறது.