Home உலகம் பிலிப்பைன்ஸ் : டுடெர்டே புதல்வி துணையதிபருக்குப் போட்டி

பிலிப்பைன்ஸ் : டுடெர்டே புதல்வி துணையதிபருக்குப் போட்டி

669
0
SHARE
Ad

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வந்த ரோட்ரிகோ டுடெர்டேயின் புதல்வி சாரா டுடெர்டே கார்பியோ 2022-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பிலிப்பைன்ஸ் தேர்தலில் துணையதிபராகப் போட்டியிட முன்வந்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு சட்டங்களின்படி அதிபராகத் தேர்வு பெறுபவர் 6 ஆண்டுகள் கொண்ட ஒரு தவணைக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன் காரணமாக 76 வயதான டுடெர்டே மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடவில்லை.

43 வயதான சாரா டுடெர்டே, அதிபர் பதவிக்குப் போட்டியிடும் பெர்டினண்ட்டுக்கு ஆதரவாக அவரின் அணியில் துணையதிபராகப் போட்டியிடும் சுவாரசியத் திருப்பம் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரியாகச் செயல்பட்டு பதவி வீழ்த்தப்பட்ட பெர்டினண்ட் மார்க்கோசின் புதல்வரான பெர்டினண்ட் இந்த முறை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபருக்கும், துணையதிபருக்குமான தேர்தல் தனித் தனியாக நடத்தப்படும். சாரா டுடெர்டே அதிபர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இறுதி நேரத்தில் துணையதிபருக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

அவர் அறிவித்த அடுத்த சில மணி நேரத்தில் பெர்டினண்ட் சார்ந்திருக்கும் கட்சியின் சார்பிலான துணையதிபர் வேட்பாளராக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

ஆசியானின் உறுப்பிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் எதிர்வரும் 2022 மே மாதத்தில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. 110 மில்லியன் மக்கள் தொகையையும் ஏராளமான தீவுக் கூட்டங்களையும் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில் அந்தத் தேர்தல்களில் அதிபர், துணையதிபர் முதற்கொண்டு நகர மேயர்கள், அதிகாரிகள் வரை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் குத்துச் சண்டை வீரர் மேன்னி பாக்கியாவ், நடப்பு துணையதிபர் லெனி ரோப்ரெடோ, மணிலா நகர மேயர் பிரான்சிஸ்கோ டோமாகோசோ, செனட்டர் பான்பிலோ லாக்சன், டுடெர்டேயின் முன்னாள் காவல் துறைத் தலைவர் ரோனால்ட் டெலா ரோசா ஆகியோரும் அதிபர் பதவிக்குக் குறிவைத்து தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.