Home நாடு மலாக்கா: காடேக் – மஇகாவின் வி.பி. சண்முகம் வெற்றி!

மலாக்கா: காடேக் – மஇகாவின் வி.பி. சண்முகம் வெற்றி!

638
0
SHARE
Ad

மலாக்கா: மிகவும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட காடெக் சட்டமன்றத் தொகுதியில் மஇகா வெற்றி பெற்றது. இங்கு போட்டியிட்ட மஇகாவின் வேட்பாளர் வி.பி.சண்முகம் வெற்றி பெற்றார்.

நாடு முழுமையும் உள்ள இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் கவனித்து வந்த தொகுதி காடேக். இங்கு ஆறுமுனைப் போட்டி நிலவியது.

மஇகா- தேசிய முன்னணி சார்பில் வி.பி. சண்முகம், ஜசெக – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஜி. சாமிநாதன் ஆகிய இருவருக்கும் இடையில்தான் உண்மையான போட்டி இந்தத் தொகுதியில் நிலவியது.

#TamilSchoolmychoice

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பெர்சாத்து  கட்சியின் முகமட் அமிர் பித்ரி முஹாராம் இங்கு போட்டியிட்டார்.

மேலும் இரண்டு சுயேச்சைகளும், புத்ரா கட்சி வேட்பாளர் ஒருவரும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டனர்.

கடந்த 2018 பொதுத்தேர்தலில் சாமிநாதன் இந்தத் தொகுதியில் 307 வாக்குகள் பெரும்பான்மையில்தான் மஇகா வேட்பாளரைத் தோற்கடித்தார். இந்த முறை போட்டி கடுமையாக இருந்தாலும் கடந்த 2018 தேர்தலைப் போலவே மலாய் வாக்குகள் 3 அணிகளாக பிளவுபட்டன.

இருந்தாலும் இங்கு மஇகா வேட்பாளராகப் போட்டியிட்ட  வி.பி. சண்முகமும் கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்தத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்திருக்கிறார். அதன் காரணமாக இந்தத் தொகுதியின் பிரச்சினைகளையும் தேவைகளையும் சண்முகம் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

அவருக்கு ஆதரவாக மஇகா தலைவர்களும் தேசிய முன்னணித் தலைவர்களும் அணி திரண்டு தீவிரப் பிரச்சாரத்தை காடெக் தொகுதியில் மேற்கொண்டிருந்தார்கள்.

மேலும் இந்தத் தொகுதியில் கடைசி மூன்று நாட்களில் மலாக்காவின் முன்னாள் ஆளுநர் துன் காலிட் யாக்கோப் காடேக் தொகுதியில் களம் இறங்கி ஜசெகவின் சாமிநாதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததும் அதிரடித் திருப்பமாகப் பார்க்கப்பட்டது.

காலிட் யாக்கோப் அம்னோ-தேசிய முன்னணியின் முன்னாள் தலைமைச் செயலாளருமாவார்.

12,641 வாக்காளர்களைக் கொண்ட காடேக் தொகுதியில் 60 விழுக்காட்டு வாக்காளர்கள் மலாய்க்காரர்கள். 24 விழுக்காட்டினர் சீனர்கள். இந்தியர்கள் 16 விழுக்காட்டினர்.