
கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 19) அரண்மனையில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில், சமூக சேவைகளிலும், அரசியலிலும் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வந்திருக்கும் நாடறிந்த பிரமுகர் டாக்டர் ந.ஞானபாஸ்கரன், மாமன்னரிடமிருந்து “டத்தோ” விருதைப் பெற்றுக் கொண்டார்.
2021-ஆம் ஆண்டு கூட்டரசுப் பிரதேசத் தினத்தை முன்னிட்டு விருதுகள் வழங்கப்பட்டவர்கள் பட்டியலில் டாக்டர் பாஸ்கரனுக்கு டத்தோ விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
“இந்த விருதை எனக்கு வழங்கிய மாட்சிமை தங்கிய மாமன்னருக்கும், விருது வழங்கப்படுவதற்கும் சிபாரிசு செய்வதற்கும் காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின், கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா ஆகியோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” டாக்டர் ஞானபாஸ்கரன் குறிப்பிட்டார்.

மேலும் இந்த விருது தனக்கு வழங்கப்படுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்த லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.துரைசிங்கத்திற்கும் தனது நன்றியை பாஸ்கரன் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த 45 ஆண்டுகளாக மருத்துவத் துறைக்கும், சமூக இயக்கங்களிலும், அரசியல் கட்சிகளிலும், பொது வாழ்க்கையிலும் தான் வழங்கி வந்த தன்னலமற்ற சேவைகளுக்கான அங்கீகாரமாக இந்த விருதைக் கருதுவதாகவும் பாஸ்கரன் கூறினார்.
2019-2020-ஆம் ஆண்டுக்கான மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் டாக்டர் பாஸ்கரன் பதவி வகித்திருக்கிறார்.
இந்த விருதை என் தந்தையார் நடேசன் செட்டியார், அன்புத் தாயார் நீலாம்பாள், எனது அன்புத் துணைவியார் ரேணுகாவுக்கும், எனது குடும்பத்தினருக்கும், எனது பல்லாண்டு கால சேவைகளில் என்னோடு தோள் கொடுத்து துணை நின்ற எனது உறவினர்கள், நண்பர்கள், சக சேவையாளர்கள், நான் பணியாற்றிய இயக்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன் எனவும் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார்.