Home நாடு மாஸ் எர்மியாத்தி முதலமைச்சர் வேட்பாளர்! இறுதி நேர அறிவிப்பு – வாக்காளர் மனங்களை மாற்றுமா?

மாஸ் எர்மியாத்தி முதலமைச்சர் வேட்பாளர்! இறுதி நேர அறிவிப்பு – வாக்காளர் மனங்களை மாற்றுமா?

541
0
SHARE
Ad

மலாக்கா :   பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் மாஸ் எர்மியாத்தி என தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் பட்சத்தில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 18) அறிவித்தார் பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்.

அந்த அறிவிப்பின் தாக்கம் இன்று வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் மனங்களில் மாற்றம் எதனையும் ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் மோதிக்கொள்ளும் 3 கூட்டணிகளில் மிக பலவீனமான கூட்டணியாகப் பார்க்கப்படும் பெரிக்காத்தான் நேஷனலின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இறுதிநேரத்தில் ஓர் அதிரடி வியூகத்துடன் கூடிய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதுவரையில் முதலமைச்சர் வேட்பாளர் என யாரையும் பெயர் குறிப்பிடாமல் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தையும் அந்தக் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் முகத்தையும் மட்டுமே முன்னிருத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது பெரிக்காத்தான் நேஷனல்.

இதே வியூகத்தை சபாவிலும் பின்பற்றி வெற்றிகண்டது அந்தக் கூட்டணி. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அப்போது மொகிதின் யாசின் பிரதமராக இருந்தார். அவர் மீதான எதிர்மறை கருத்துகளும் பரவலாக அப்போது எழுந்ததில்லை.

ஆனால் இப்போது நிலைமை வேறு. அவரின் ஆட்சி காலம் ஒரு தோல்வி அடைந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் எனப் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் மலாக்கா மாநிலத் தேர்தலில்  முதலமைச்சர் வேட்பாளரை தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரண்டு கூட்டணிகள் அறிவித்தாலும் பெரிக்காத்தான் நேஷனல் மட்டும் அப்படியேதும் அறிவிக்காமலேயே பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது.

வியாழக்கிழமையன்று (நவம்பர் 18) அதிரடியாக மாஸ் எர்மியாத்தி எங்களின் முதலமைச்சர் வேட்பாளர் என மொகிதின் யாசின் அறிவித்திருக்கிறார். தற்போது பிரதமர்துறை துணையமைச்சராக இருக்கும் மாஸ் எர்மியாத்தி இன்று நடைபெறும் தேர்தலில் தஞ்சோங் பிடாரா சட்டமன்றத்தில் போட்டியிடுகிறார்.

கட்சி தாவியதால் எதிர்ப்பு வாக்குகள் விழுமா?

ஏற்கெனவே மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் அவர் இருக்கிறார். இரண்டு தவணைகளாக அவர் இத்தொகுதியைத் தற்காத்து வந்திருக்கிறார். கடந்த 2018 தேர்தலில் அவர் அம்னோ தேசிய முன்னணி சார்பில் மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். ஆனால் பின்னர் துன் மகாதீரின் தலைமையிலான பெர்சாத்து கட்சிக்குத் தாவினார்.

மொகிதின் யாசின் தலைமையிலும் அவர் தொடர்ந்து பெர்சாத்து கட்சியில் இணைந்திருக்கிறார். இதன் காரணமாக கட்சி மாறியவர் என்ற எதிர்மறை விமர்ங்னங்களால் தஞ்சோங் பிடாரா தொகுதியில் எதிர்ப்பு வாக்குகளால் அவர் பின்தங்கியிருக்கிறார் என்ற நிலைமை இருக்கிறது.

அப்படியே அவர் அந்தத் தொகுதியில் வெற்றிபெற்று – பெரிக்காத்தான் நேஷனல் பெரும்பான்மை சட்டமன்றங்களை வாகை சூடினால், மலாக்கா மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக மாஸ் எர்மியாத்தி பதவியேற்பார்.

அதுமட்டுமன்றி மலேசியாவில் ஒரு மாநில முதலமைச்சராகப் பதவியேற்கும் முதல் பெண்மணியாக அவர் திகழ்வார். ஆனால், நடப்பு அரசியல் நிலவரங்களை வைத்துப் பார்க்கும்போது அத்தகைய ஒரு காட்சி அரங்கேறுவதற்கு சாத்தியம் இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மாஸ் எர்மியாத்தி முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்பு குறைந்தபட்சம் அவர் போட்டியிடும் தஞ்சோங் பிடாரா தொகுதியில் அவருக்குக் கூடுதல் வாக்குகளைத் தேடித் தரலாம். அல்லது வெற்றியையே தேடித்தரலாம். ஆனால், அதன்மூலம் மலாக்கா மாநிலம் முழுவதிலும் பெண் வாக்காளர்களைக் கவர முடியும் என்பதோ கூடுதல் வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனல் பெறும் என்பதோ சாத்தியமில்லாத ஒன்று என்றே கருதப்படுகிறது.

இந்த முடிவு மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் பின்தங்கியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் இதன்மூலம் கூடுதல் வாக்குகளைப் பெற முடியாது. பல வாக்காளர்கள் ஏற்கெனவே தாங்கள் ஆதரிக்கும் கூட்டணி எது என்பதை முடிவு செய்துவிட்டார்கள் என்றே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக, மாஸ் எர்மியாத்தி முதலமைச்சர் வேட்பாளர் என்ற இறுதிநேர அறிவிப்பு அவர் போட்டியிடும் தஞ்சோங் பிடாரா தொகுதியில் மட்டுமே கூடுதல் வாக்குகள் திரட்டித் தரும். மற்றபடி மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாது.

-இரா.முத்தரசன்