முன்னாள் பிரதமர் நஜிப் காலத்தில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமரான நஜிப்பே அந்தக் குழுவுக்குத் தலைமையேற்றார்.
அதே போன்று மீண்டும் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு தோற்றுவிக்கப்பட வேண்டுமென இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற மஇகாவின் 75-வது தேசியப் பொதுப் பேரவையில் உரையாற்றும்போது மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அந்தக் கோரிக்கைக்கு ஏற்ப, விரைவில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு அமைக்கப்படும் என இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஜாலான் டூத்தாவில் உள்ள மிடெக் மாநாட்டு மண்டபத்தில் மஇகாவின் 75-வது தேசியப் பொதுப் பேரவை நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மஇகா சார்பில் அதன் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முன்வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை உடனடியாக ஏற்றுக் கொண்டார். மேலும் சில கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதி கூறினார்.
“எல்லோருக்கும் வணக்கம்” எனத் தன் உரையைத் தொடங்கும்போது குறிப்பிட்ட இஸ்மாயில் சாப்ரி. உரையின் இடையில், “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற வாசகத்தையும் தமிழிலேயே முழங்கினார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்த பிரதமரை, மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட மஇகா பொறுப்பாளர்கள் மேளதாள முழக்கங்களுடன் வரவேற்றனர்.
பின்னர் மேடையில் அவருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, மாலையணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
பிரதமர் உரைக்கு முன்பாகப் பேசிய விக்னேஸ்வரன் தனதுரையில் மஇகா சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்பட பரிசீலனை
மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இன்றைய மாநாட்டில் பிரதமர் முன்னிலையில் வைக்கப்பட்டது.
பிரதமர் இது குறித்து நடப்பு ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக்குடன் பேசுவேன் என உறுதியளித்தார். மித்ரா தற்போது ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.