ஈப்போ, ஏப்ரல் 23 – தேர்தல் பிரச்சாரங்களின் போது பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் ஏதேனும் அவதூறான வாசகங்களோ அல்லது பொதுமக்கள் முகம் சுழிக்கும் படியான குறியீடுகளோ இடம்பெறும் பட்சத்தில், அவை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்றப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜீஸ் முகமத் யூசூப், இன்று ஈப்போவிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அதோடு, பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்திலும் அதை வெளியிடுபவரின் பெயரோ அல்லது அச்சகத்தின் பெயரோ கண்டிப்பாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை உடனடியாக எந்த ஒரு கேள்வியுமின்றி அகற்றப்படும் என்றும் அப்துல் அஜீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களை கவனிப்பதற்காக காவல்துறையினர் அடங்கிய ஒரு குழு தேர்தல் ஆணையத்தால் தொகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தையும் தொடர்ந்து கவனித்துவருவார்கள் என்றும் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.