Home இந்தியா ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் தமிழ் நாடு காவல் துறை

ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் தமிழ் நாடு காவல் துறை

1040
0
SHARE
Ad

சென்னை : அன்று முன்னாள் அமைச்சர். ஆடம்பர வாழ்க்கை – அதிரடிப் பேச்சு! இன்றோ, சிறைக்கு பயந்து தலைமறைவு ஓட்டம்! தமிழ் நாடு காவல் துறையினரால் தேடப்படும் அவலம்! இருந்தாலும் அந்தக் காவல் துறைக்கே கடந்த ஓரிரு வாரங்களாக “தண்ணி” காட்டும் சாதுரியம் – துணிச்சல்!

இதுதான் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

எனினும் தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜியை காவல் துறை நெருங்கி விட்டதாகவும் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் பேசிக் கொண்டிருந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைக் கொண்டு ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்துவிடலாம் என காவல்துறை நம்புவதாகத் தெரிகிறது.

மோசடி வழக்குகள்

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17ம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 13-வது நாளாகத் தேடி வருகிறது.கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23-ஆம் தேதி “லுக் அவுட்” எனப்படும் தேடப்படும் அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது ராஜேந்திரபாலாஜி தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலூர், ஓசூர் ஆகிய பகுதியில் பதுங்கி உள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

புதிதாக 7 புகார்கள்- கிடுக்கிப்பிடி போடும் தமிழகக் காவல் துறை

பண மோசடி வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புதிதாக 7 புகார்கள் அண்மையில் அளிக்கப்பட்டன.

இதற்கு முன்னர் ஏற்கனவே, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரின் உதவியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராஜேந்திர பாலாஜி.

அந்த முன் ஜாமீன் மனு, கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நாளில், காரில் ஏறி தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளார். இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர், கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையில் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கடலோரக் கண்காணிப்பினையும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ராஜேந்திர பாலாஜிக்கு சொந்தமான 6 வங்கிக் கணக்குகளை காவல் துறை முடக்கியுள்ளது.

அவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது 7 பேர் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் ரூ.78.70 லட்சம் வரை மோசடி நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து குவியும் புகார்களால் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் மேலும் அதிகமாகியுள்ளது