Home நாடு தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ், சீனம் கற்பித்தல் அரசியலமைப்புக்கு உட்பட்டதே – நீதிமன்றம் தீர்ப்பு

தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ், சீனம் கற்பித்தல் அரசியலமைப்புக்கு உட்பட்டதே – நீதிமன்றம் தீர்ப்பு

1570
0
SHARE
Ad
நீதிபதி முகமட் நஸ்லான்

கோலாலம்பூர் :தாய்மொழிப் பள்ளிகளான சீன, தமிழ்ப் பள்ளிகளில் மலாய் மொழியே மைய மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாதது மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் சில மலாய் அமைப்புகள் தொடுத்திருக்கும் வழக்கின்  தீர்ப்பை இன்று புதன்கிழமை (டிசம்பர் 29) நீதிபதி முகமட் நஸ்லான் வழங்கினார்.

இந்திய, சீன அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் இந்தத் தீர்ப்பைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தன.

தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ், சீனம் கற்பிப்பது மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே என நீதிபதி முகமட் நஸ்லான் தன் தீர்ப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தீபகற்ப மலாய் மாணவர் சங்கம் (Gabungan Pelajar Melayu Semenanjung -GPMS), மலேசிய இஸ்லாமியக் கல்வி வளர்ச்சி மன்றம் (Majlis Pembangunan Pendidikan Islam Malaysia – Mappim), தேசிய எழுத்தாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Coalition of National Writers’ Associations – Gapena) ஆகிய 3 இயக்கங்களும் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்திருந்தன.

மலேசிய அரசாங்கத்திற்கும், கல்வி அமைச்சுக்கும் எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இருந்தாலும் பின்னர் இந்த வழக்கில் இணை பிரதிவாதிகளாக இணைத்துக் கொள்ளப்பட 11 மற்ற தரப்புகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மலேசிய சீனமொழி மன்றம், மசீச, மஇகா, கெராக்கான், புத்ரா ஆகிய கட்சிகள், சீனமொழி கல்வி அமைப்புகளான டோங் சோங்,(Dong Zhong) ஜியாவ் சோங் (Jiao Zong), தாய்மொழிப் பள்ளிகளின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தாய்மொழிப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஆகியவை உள்ளிட்ட அமைப்புகள் இந்த வழக்கில் இணை பிரதிவாதிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டன.

தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ், சீனம் கற்பிக்கும் நடைமுறை மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது, அதற்கான பாதுகாப்பையும் அந்த சட்டம் வழங்குகிறது என நீதிபதி தெரிவித்தார்.

வழக்கு தொடுத்த வாதிகள் தங்களின் உரிமைகள் இந்த நடைமுறையால் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதைக் காட்டத் தவறிவிட்டனர் என்பதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.

தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவதால் எந்த ஒரு மனிதரின் உரிமைகளையோ அடிப்படை சுதந்திரத்தையோ அவை பாதித்திருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை என்பதையும் நீதிபதி நஸ்லான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.