
சென்னை : பாகுபலி தந்த இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக வெளிவரக் காத்திருக்கிறது “ஆர்ஆர்ஆர்” (RRR). தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜித் தேவ்கன், அலியா பட் என பல பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் ஜனவரி 7-ஆம் தேதி இந்தப் படம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விளம்பரங்களும் பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டன.
பல திரையரங்குகளில் முன்கூட்டியே டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களும் வசூலிக்கப்பட்டன.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், கொவிட்-19 தொடர்பான நடப்பு நிலவரங்கள், திரையரங்குகள் மூடப்படுதல் போன்ற காரணங்களால் எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. எனவே, காலவரையறையின்றி பட வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம் என அறிவித்திருக்கின்றனர்.