ஈப்போ : இதுவரையில் பெர்சாத்து கட்சியில் இருந்த பேராக் மாநிலத்தின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிய கட்சியான பங்சா மலேசியா கட்சியில் இணைந்துள்ளனர். இதனால், அவர்களின் ஆதரவு நிலைப்பாடு மாறுமா? அதனால் மாநில அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்க்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஏ.சிவசுப்பிரமணியம் (புந்தோங்), போல் யோங் கியோங் (துரோனோ) ஆகிய இருவரும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் இணைந்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் லேரி சிங் அறிவித்தார்.
அந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களும் 2018 பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர் கடந்த 2020-ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் ஜசெகவில் இருந்து விலகி பெர்சாத்து கட்சியில் இணைந்தனர். அதே ஆண்டில் பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கமும் வீழ்ச்சியடைந்தது.
தற்போது அவர்கள் இருவரும் பெர்சாத்து கட்சியில் இருந்து விலகி பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் சேர்ந்துள்ளனர்.
கட்சியில் சேர்ந்தவுடனேயே, சிவசுப்பிரமணியம் பார்ட்டி பங்சா கட்சியின் இரண்டாவது உதவித் தலைவராகவும், யோங் சூ கியோங் கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேராக், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் லியோங் சியோக் கெங்கும் பார்ட்டி பங்சா கட்சியில் இணைந்துள்ளார். அவரும் ஜசெகவில் முன்பு இருந்தவர். பின்னர் மசீசவில் இணைந்ததாகக் கூறப்பட்டது.
இதற்கிடையில் இது குறித்துக் கருத்துரைத்த பேராக் மந்திரி பெசார் சரானி முகமட் பார்ட்டி பங்சா கட்சியில் இணைந்துள்ள 3 சட்டமன்ற உறுப்பினர்களும் பேராக் மாநில அரசாங்கத்தை ஆதரிப்பதால் இப்போதைக்கு மாநில அரசாங்கம் கவிழ்வதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியிருக்கிறார்.
இருந்தாலும், இந்தப் புதிய அரசியல் மாற்றத்தால் பேராக் மாநில அரசாங்கம் இனி ஊசலாடத் தொடங்கலாம் என்ற ஆரூடங்களும் முன்வைக்கப்படுகின்றன. 59 தொகுதிகளைக் கொண்ட பேராக் மாநில சட்டமன்றத்தில் தங்களுக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் சரானி முகமட் கூறியிருக்கிறார்.