Home நாடு ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 2 : மந்திரி பெசார் ஹாஸ்னி முகமட் போட்டியிடும்...

ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 2 : மந்திரி பெசார் ஹாஸ்னி முகமட் போட்டியிடும் பெனூட்

385
0
SHARE
Ad

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களில் சில தொகுதிகள் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளாக மாறியிருக்கின்றன. அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்தத் தொகுதிகளின் வரிசையில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் போட்டியிடும் பெனூட் தொகுதி குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

2018 பொதுத் தேர்தல் வரையிலும், ஏன் அதற்குப் பின்னரும் கூட பலருக்கு பெனூட் சட்டமன்றத் தொகுதி எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாது. அதுவரையில் அந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் என்பவர் ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராக 2018 வரை பதவி வகித்தவர் – சில தவணைகளாக அந்தத் தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருப்பவர் – என்ற அளவில் மட்டும்தான் பிரபல்யம்.

ஆனால், 2020-ஆம் ஆண்டில் அதே ஹாஸ்னி முகமட் ஆட்சி மாற்றத்தின்கீழ் ஜோகூர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டபோது எல்லாமே தலைகீழாக மாறியது.

ஹாஸ்னி முகமட் பிப்ரவரி 2020-இல் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டபோது…
#TamilSchoolmychoice

இன்றைய நிலையில் பெனூட் அனைவரும் ஆர்வத்துடன் கவனித்துப் பார்க்கும் நட்சத்திரத் தொகுதியாக மாறியிருக்கிறது.

நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்று பார்க்கும்போது மந்திரி பெசார் போட்டியிடும் தொகுதியை விட வேறு எந்த தொகுதிக்கு கூடுதலாக அத்தகைய நட்சத்திர அந்தஸ்தை வழங்க முடியும்?

அந்த வகையில் பெனூட் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஸ்னி முகமட் தேசிய முன்னணியின் முதல் நிலை நட்சத்திர வேட்பாளராக திகழ்கிறார்.

இந்தத் தொகுதியைக் கடந்த சில தவணைகளாக அவர் வெற்றிகரமாக தற்காத்து வந்திருக்கிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான
அலை, புயலடித்து சுனாமியாக வீசியபோதும் தடுமாறாமல், பெனூட் தொகுதியை 4,447 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிகரமாக தற்காத்தார் ஹாஸ்னி.

தந்தையாரின் அரசியல் பாதையில்…

ஒரு நீண்டகால அம்னோ அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவர் ஹாஸ்னி முகமட். இவரின் தந்தையார் முன்னாள் தகவல் அமைச்சர் டத்தோ முகமட் ரஹ்மாட்டிடம்
செயலாளராக பணிபுரிந்தவர். அதன் தாக்கத்தின் காரணமாகவோ என்னவோ இளம் வயதிலேயே அம்னோவில் அரசியல் ஈடுபாடு கொண்டார் ஹாஸ்னி.

அமெரிக்காவில் பொறியியல் (என்ஜினியரிங்) துறையில் பட்டம் பெற்றவர். நாடு திரும்பியதும் சொந்தப் பொறியியல் நிறுவனத்தை நடத்திக் கொண்டே அரசியலிலும்
தீவிரமாக ஈடுபட்டார்.

1999ஆம் ஆண்டிலேயே ஜோகூர் மாநில அம்னோ இளைஞர் பகுதித் தலைவராக உயர்ந்தார் ஹாஸ்னி. இருந்தாலும் அப்போது அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
வழங்கப்படவில்லை.

நாடாளுமன்ற, சட்டமன்ற அனுபவங்கள்

2004ஆம் ஆண்டில் பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஹாஸ்னி.

2008ஆம் ஆண்டில் பொந்தியான் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான பெனூட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2013ஆம் ஆண்டிலும் இந்தத் தொகுதியை வெற்றிகரமாக தற்காத்தார். ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவிலும் இடம் பெற்றார்.

2018 பொதுத் தேர்தலில் மீண்டும் பெனூட் தொகுதியில் வெற்றி பெற்றாலும் அதிர்ஷ்டக்காற்று அவர் பக்கம் வீசவில்லை. ஜோகூர் மாநிலத்தைத் தொடர்ச்சியாக மீண்டும் கைப்பற்ற முடியாமல் தேசிய முன்னணி அந்தத்
தேர்தலில் வீழ்ச்சி கண்டது.

ஆனால், இரண்டே ஆண்டுகள்தான் அதிர்ஷ்டம் ஹாஸ்னியை விட்டு விலகி இருந்தது.

2020இல் நடந்த ஆட்சி மாற்றங்கள், அவரை மீண்டும் மந்திரி பெசாராக முன்நிறுத்தின.

களையான – எப்போதும் புன்னகைத் தவழும் மலர்ச்சியான முகம் – சரளமான தெளிவான ஆங்கில உச்சரிப்பு – அனைத்து இனங்களுடன் நல்லிணக்கம் என ஒரு முன்மாதிரி மந்திரி பெசாராக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோகூரில்
பிரபலமடைந்திருக்கிறார் ஹாஸ்னி.

இரண்டாண்டுகளில் தான் வழங்கிய சேவைகள் – மக்களின் ஆதரவு -ஆகியவற்றின் அடிப்படையில் துணிச்சலுடன் ஜோகூர் சட்டமன்றத்தைக் கலைத்து – மீண்டும்
நாங்கள் ஆட்சி செய்ய அதிகாரம் தாருங்கள் – என்ற அறைகூவலோடு ஜோகூர் தேர்தலுக்கு வழிவிட்டிருக்கிறார் ஹாஸ்னி முகமட்.

ஹாஸ்னி முகமட்

எல்லா வகைகளிலும் கணக்கெடுத்து, அதன் காரணமாகப் பிறந்த நம்பிக்கையில்தான் ஜோகூர் தேர்தலை துணிச்சலுடன் எதிர்நோக்குகிறார் ஹாஸ்னி.

மலாக்கா மாநிலத்தைப் போலல்லாமல் ஜோகூர் மாநிலத்தில் அனைத்துத் தேர்தல் முடிவுகளையும் ஹாஸ்னியே முன்நின்று எடுக்கிறார். இது அவர் மீது அம்னோ – தேசிய முன்னணி தலைமைத்துவம் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

4 முனைப் போட்டியில் மந்திரி பெசார்

இந்த முறை நான்கு முனைப் போட்டியை ஹாஸ்னி முகமட் பெனூட் தொகுதியில் எதிர்நோக்குகிறார்.

அவரை எதிர்த்து பெஜுவாங் கட்சி சார்பில் இஸ்கண்டார் நூர் பின் இப்ராஹிம் போட்டியிடுகின்றார்.

பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக டத்தோ இஸா பின் அப்துல் ஹாமிட், பிகேஆர் சார்பாக ஹனிவ் கசாலி ஹோஸ்மான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை இந்தத் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 20,894. இவர்களின் 82 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்கள். 18 விழுக்காட்டினர் சீனர்கள். மற்ற
இன வாக்காளர்கள் யாருமில்லை.

இந்த முறை இந்தத் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 28,165 என அதிகரித்திருக்கிறது. தானியங்கி வாக்காளர் பதிவு, 18+ வாக்காளர்களின் வரவு ஆகியவையே இந்த எண்ணிக்கை ஏற்றத்திற்குக் காரணம் என்பதை விளக்கத்
தேவையில்லை.

நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும் நீண்ட காலமாக இந்தத் தொகுதியைத் தற்காத்து வந்திருக்கும் அனுபவத்தின் மூலமும், தன் கடந்த கால சேவைகள் மூலமும் இந்த முறையும் ஹாஸ்னி வெற்றி பெறுவார் எனக் கணிக்கப்படுகிறது.

அவர் வெற்றி பெற்றால் – தேசிய முன்னணியும் மாநிலத்தைக் கைப்பற்றினால் – ஹாஸ்னிதான் எங்களின் மந்திரி பெசார் என அம்னோ-தேசிய முன்னணி ஏற்கனவே
அறிவித்திருக்கிறது.

இதுவும் அவருக்கு வாய்த்திருக்கும் கூடுதல் பலம்.

அந்த பலத்தோடு களம் காண்கிறார் ஹாஸ்னி முகமட். தேசிய முன்னணி பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றினால், அந்த வெற்றிக்கான காரணங்களுள்
ஒன்றாக ஹாஸ்னியும் பார்க்கப்படுவார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜோகூர் மந்திரிபெசார் என்னும் அந்தஸ்தோடு மாநிலத்தில் வலம் வருவார். அது மட்டுமின்றி அம்னோவிலும் அடுத்த கட்ட உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக உயரக்கூடிய அத்தனை அம்சங்களையும்
கொண்டிருப்பவர் ஹாஸ்னி முகமட் எனவும் கருதப்படுகிறார்.

-இரா.முத்தரசன்