Home நாடு ஜோகூர் லார்க்கின் சட்டமன்றம் : எதிர்க்கட்சிகள் மோதிக் கொண்டு இழந்த தொகுதி

ஜோகூர் லார்க்கின் சட்டமன்றம் : எதிர்க்கட்சிகள் மோதிக் கொண்டு இழந்த தொகுதி

765
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் அபார வெற்றிக்குக் காரணம் அவர்களுக்கு கிடைத்த ஆதரவு அல்ல! மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் என்பதற்கான சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது லார்க்கின் சட்டமன்றத் தொகுதி முடிவுகள்!

கடந்த 2018 பொதுத் தேர்தலில் 8,590 வாக்குகள் பெரும்பான்மையில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்டு பெர்சத்து கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்ற தொகுதி லார்க்கின்.

இந்தத் தொகுதி இந்த முறை பாக்காத்தான் தேர்தல் உடன்பாட்டின் கீழ்
பிகேஆர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், மூடா கட்சியும் இங்கு போட்டியிட்டது.

#TamilSchoolmychoice

ஆறு முனைப் போட்டி நிலவிய லார்க்கின் தொகுதியில் தேசிய முன்னணி
சார்பாகப் போட்டியிட்ட முகமட் ஹைரி பின் மாட் ஷா 16,053 வாக்குகள்
பெற்று 6,178 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக ஷுல்கிப்ளி பூஜாங் (9,875 வாக்குகள்)
பிகேஆர் சார்பாக டாக்டர் ஷாமில் நாஜ்வா (6,448 வாக்குகள்) மூடா கட்சியின்
சார்பாக ரஷிட் அபு பாக்கார் (4,948 வாக்குகள்) பெர்ஜுவாங் கட்சி சார்பாக
முகமட் ரியாட்ஸ் பின் முகம்மட் ஹாஷிம் (810 வாக்குகள்) ஆகியோரும் இங்கு
போட்டியிட்டுத் தோல்வியடைந்தனர்.

ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத்
தொகுதிகளில் ஒன்று லார்க்கின். மற்றொன்று ஸ்தூலாங். ஜோகூர் பாரு
நாடாளுமன்றம் அதன் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் என அனைத்தையும்
பக்கத்தான் ஹாப்பான் கட்சிகளே 2018-இல் கைப்பற்றின.

இந்த முறை லார்க்கின் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பெரிக்காத்தான்
நேஷனல், மூடா, பிகேஆர், பெஜுவாங் ஆகிய 4 கட்சிகள் பெற்ற மொத்த
வாக்குகளின் எண்ணிக்கை 22,081 ஆகும். ஆனால், இங்கு வெற்றி பெற்ற தேசிய
முன்னணியின் வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 16,053 மட்டுமே
ஆகும்.

ஆக எதிர்க்கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி வேட்பாளரை விட 6,028
வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தும் இந்தத் தொகுதியில் தேசிய முன்னணியே
வெற்றி பெற்றிருக்கிறது.

ஜோகூர் பாரு நாடாளுமன்றத்தின் கீழ்வரும் மற்றொரு தொகுதியான ஸ்தூலாங்கில் மட்டும் ஜசெக வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தியிருந்தாலோ – அல்லது மும்முனைப் போட்டி நிகழ்ந்திருந்தால் கூட – எதிர்க்கட்சிகளில் ஒருவர் வெற்றி வாய்ப்பைப் பெற்றிருக்க முடியும்.

ஒட்டு மொத்தமாக மாநில அளவிலும் எதிர்க்கட்சிகள் கூட்டாக 56 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றன. தேசிய முன்னணியோ 43 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாக்குகளை மட்டுமே பெற்றது.

-இரா.முத்தரசன்