Home நாடு “அமைச்சர் பணியில் நான் பெருமிதம் கொண்ட நாள்” – கட்டாயத் தொழிலாளர் தடை ஆவணத்தில் கையெழுத்திட்ட...

“அமைச்சர் பணியில் நான் பெருமிதம் கொண்ட நாள்” – கட்டாயத் தொழிலாளர் தடை ஆவணத்தில் கையெழுத்திட்ட நெகிழ்ச்சியில் சரவணன்!

860
0
SHARE
Ad

ஜெனிவா : ஒவ்வோர் அமைச்சரும் அவரின் அமைச்சர் பொறுப்பிலும், பணியிலும் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். அவற்றில் ஒரு சில தருணங்களே – ஒரு சில நிகழ்ச்சிகளே – அந்த அமைச்சரின் பெயரை பின்னாளில் வரலாற்றில் நிலைத்து நிற்கும் வண்ணம் அமையும்.

தற்போது ஜெனிவாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணனுக்கும் அத்தகைய தருணம் ஒன்று வாய்த்திருக்கிறது. ஐஎல்ஓ என்னும் அனைத்துலக தொழிலாளர் அமைப்பு தயார் செய்திருக்கும் கட்டாயத் தொழிலாளர்களைத் தடை செய்யும் ஆவணத்தில் மலேசியாவின் சார்பில் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 21) சரவணன் கையெழுத்திட்டார்.

மனிதவள அமைச்சராகத் தான் பணியாற்றி வரும் இந்தக் காலக் கட்டத்தில் தனக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்திய தருணமாக இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டது அமைந்தது என நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றின் வழி சரவணன் பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

புரோட்டோகோல் 29 (Protocol 29) என கட்டாயத் தொழிலாளர்களைத் தடை செய்யும் இந்த ஆவணம் குறிப்பிடப்படுகிறது.

1957-இல் ஐஎல்ஓ என்னும் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பில் மலேசியா இணைந்தது. அதன் நீண்ட காலப் பயணத்தில் தொழிலாளர்களுக்கான பல்வேறு சலுகைகளையும், சிறப்புத் திட்டங்களையும் அறிவித்திருக்கிறது.

கட்டாயத் தொழிலாளர்களைத் தடை செய்யும் ஆவணத்தில் மலேசியா கையெழுத்திட்டிருப்பது வரலாற்றுபூர்வமானதாகும். ஆசிய பசிபிக் நாடுகளில் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட 5-வது நாடு மலேசியாவாகும்.

ஆசியான் நாடுகளில் வியட்நாமுக்கு அடுத்து மலேசியா இந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட இரண்டாவது நாடாகும். மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர்களை துடைத்தொழிப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் மலேசியா, அனைத்துலக அளவிலும் தன் கடப்பாட்டை இதன் மூலம் புலப்படுத்தியுள்ளது.

ஜெனிவாவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் சரவணன், ஐஎல்ஓ தலைமை இயக்குநர் மற்றும் அதன் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான வட்டார இயக்குநர் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.  பல்வேறு தொழிலாளர் விவகாரங்கள், கட்டாயத் தொழிலாளர் பிரச்சனைகள், அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நல்ல திட்டங்கள், நடைமுறைகள் ஆகிய அம்சங்கள் சரவணன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் வகித்தன.