துபாய் : துபாய் நகரில் நடைபெற்று வரும் ‘துபாய் எக்ஸ்போ 2020’ கண்காட்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் மலேசிய மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை துபாய் நகரில் நடைபெற்றது. அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழ் நாட்டுக்கு ஈர்க்கவும் வருகை ஒன்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார். இந்த வருகையின்போது தமிழ்நாடு கண்காட்சி அரங்கத்தையும் ஸ்டாலின் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்தப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சரவணன் உரையாற்றினார்.
அண்மையில் ஜெனிவாவில் ‘ஐஎல்ஓ’ அனைத்துலக தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ள கட்டாயத் தொழிலாளர்களைத் தடை செய்யும் ஆவணத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் சரவணன் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் லண்டனுக்கான வருகையை மேற்கொண்ட அவர் அங்கு தொழிலாளர் அமைச்சரையும் சந்தித்தார். அதன் பின்னர் துபாய் சென்று சேர்ந்த சரவணன் அங்கு ஸ்டாலினுடன் பன்னாட்டு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார்.
ஸ்டாலினைப் பாராட்டிய சரவணன்
இந்த நிகழ்ச்சி குறித்துக் கருத்துரைத்த அவர், தமிழக முதல்வராக ஸ்டாலினின் சிறப்பான பணிகள் குறித்து வெகுவாகப் பாராட்டினார்.
தமிழ் நாட்டில் கொரோனாவை ஒழிப்பதில் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதன் காரணமாக, அந்தத் தொற்றுப் பரவல் தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்திருப்பதையும் சரவணன் சுட்டிக்காட்டினார்.
“ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பல்வேறு நற்பணிகளை ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார். உள்நாட்டில் மட்டுமல்லாது, அயல் நாட்டிலும் தமிழர்களைப் பாதுகாக்கும்-அரவணைக்கும் நடவடிக்கைகளையும் ஸ்டாலின் அமல்படுத்தியிருக்கிறார். அயலகத் தமிழர்களின் நலன் காக்கும் சிறப்பு அமைச்சு ஒன்றையும் தனது தமிழ் நாடு அமைச்சரவையின் கீழ் ஸ்டாலின் ஏற்படுத்தியிருக்கிறார். அண்மையில் வெளிநாட்டுத் தமிழர்களின் தமிழ்ப் பணிகளையும் பாராட்டும் விதமாக பல விருதுகளையும் அவர் அறிவித்திருக்கிறார். அந்த வரிசையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ‘தமிழ்த் தாய்’ விருது வழங்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியதாகும். அதற்காகவும் அயலகத் தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் பாடுபட்டு வருவதற்காகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு மலேசிய இந்தியர்களின் சார்பில் நான் எனது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் சரவணன் குறிப்பிட்டார்.
“தொடர்ந்து தமிழ் நாட்டு மக்களுக்காகவும் அயலகத் தமிழர்களுக்காகவும் அவர் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றி அடைய நான் வாழ்த்துகிறேன்” என்றும் சரவணன் தெரிவித்தார்.
ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் மலேசிய-தமிழக உறவு பலப்படும்
“அவரின் ஆட்சி காலத்தில் மலேசியத் தமிழ் சமூகத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான பாரம்பரியமிக்க நல்லுறவு பலப்படுத்தப்பட்டு புதிய எல்லைகளைத் தொடும் – புதிய பரிணாமங்களைக் காணும் – என்றும் நான் நம்புகின்றேன். அவரின் தலைமையிலான தமிழக அரசு அயலகத் தமிழர்களுக்கும் அயலகத் தமிழ் இயக்கங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் நடந்து கொண்டுவருவது குறித்தும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஸ்டாலினின் இந்த அணுகுமுறைக்குப் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் சரவணன் குறிப்பிட்டார்.
“தமிழ் நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற அவர் கொண்டிருக்கும் கடப்பாடு தூரநோக்கு இலக்கு ஆகியவற்றுடன் உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ் நாட்டுக்கு ஈர்க்கும் அவரது முயற்சிகள் வெற்றி அடையவும் வாழ்த்துகிறேன். அதேவேளையில், எதிர்க்கட்சித் தலைவராக மலேசியாவுக்கு வருகை தந்த அவர், தற்போது தமிழக முதல்வராக ஆகியுள்ளார். அவர் விரைவில் மலேசியாவுக்கும் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய இந்தியர்கள் சார்பாக எனது அன்பான அழைப்பையும் வேண்டுகோளையும் இந்த வேளையில் விடுக்கின்றேன்,” என்றும் சரவணன் தெரிவித்தார்.