சென்னை : கனடா நாட்டிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இலக்கிய விருதுகள் அனைத்துலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகும்.
இந்த ஆண்டுக்கான விருதுகளை அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் – வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ் நாட்டின் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்கு முன்னாள் நீதியரசர் கே. சந்துரு தேர்வு பெற்றுள்ளார்.
ஸ்டாலின் வாழ்த்து
கனடா இலக்கியத் தோட்ட விருதுகள் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
“ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’ – வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்! ‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் நீதியரசர் கே. சந்துரு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து தருக!” என ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.