பிக் ஸ்டேஜ் தமிழ் வெற்றியாளர்களான அருளினி ஆறுமுகம் (முதல் நிலை வெற்றியாளர்) மற்றும் ரோஷினி பாலச்சந்திரன் (இரண்டாம் நிலை வெற்றியாளர்) ஆகியோருடனும் இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களான ஹரிஹரன் சி கங்கத்ரன், சசிதரன் ராஜேந்திரன் மற்றும் தனுஷன் ஜெயக்குமார் ஆகியோருடனும் கலந்துரையாடினோம்.
அவர்களின் உரையாடல்களில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது :
அருளினி ஆறுமுகம் (முதல் நிலை வெற்றியாளர்) & ரோஷினி பாலச்சந்திரன் (இரண்டாம் நிலை வெற்றியாளர்):
- நீங்கள் எப்படிப் பாட ஆரம்பித்தீர்கள் மற்றும் உங்கள் திறமையை எவ்வாறு வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தீர்கள் என்பதற்கானச் பின்னணியைப் பகிர்ந்துக் கொள்ளவும்.
அருளினி: சிறு வயது முதலே எனக்கு மன இறுக்கம் (ஒடிஸ்டிக்) இருந்தது. ஏழு வயது வரை என்னால் பேச முடியாது. ஆனால், இசை என்னைக் குணப்படுத்தியது. நான் வழக்கமாகப் பாடலின் மெல்லிசையை முணுமுணுப்பேன், அப்படித்தான் பாடும் திறனை நான் வளர்க்க ஆரம்பித்தேன். எட்டு வயதிலிருந்தே மேடையில் பாட ஆரம்பித்தேன்.
ரோஷினி: பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களாகப் பணி புரியும் எனது குடும்ப உறுப்பினர்களின் ஊக்கத்தால் நான் நான்கு வயதிலிருந்தே பாட ஆரம்பித்தேன். அவர்களின் மூலம் எனது பாடும் திறமையை வளர்த்துக் கொண்டேன். பாடலின் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை அம்சங்களை நான் எனது ஒன்பது வயதிலிருந்தே கற்றுக்கொண்டேன்.
- ஆர்வமுள்ளப் பாடகராக உங்கள் பயணத்தில் பிக் ஸ்டேஜ் தமிழ் உங்களுக்கு எவ்வாறு உதவியது?
அருளினி: நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், அளவற்ற ஆசீர்வாதம் பெற்றவராகவும் உணர்கிறேன். ஏனென்றால் பாடலையும் படைப்பையும் சமநிலைப்படுத்தி ஒரு பல்துறை பாடகராகுவது எப்படி என்பதை பிக் ஸ்டேஜ் தமிழ் எனக்குக் கற்றுக் கொடுத்தது. எனது சகப் போட்டியாளர்களிடமிருந்துப் பாடும் அறிவைப் பெற்றேன். அதே நேரத்தில், நடுவர்களின் கருத்துக்கள் எனது பாடும் திறனை மேம்படுத்த உதவியது. இந்த அனுபவத்தை நான் எப்போதும் போற்றுவேன்.
ரோஷினி: என்னை ஒரு சிறந்த பாடகியாகவும், கலைஞராகவும் பிக் ஸ்டேஜ் தமிழ் உருவாக்கியது. ஒரு சிறந்தப் பாடகராக வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்பினேன். பாடுதல் மற்றும் படைப்பு இரண்டையும் உள்ளடக்கியச் சிறந்தக் கலைஞராக வேண்டும் என்பதை பிக் ஸ்டேஜ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றப் பிறகு நான் எதிர்ப்பார்க்கிறேன்.
- பிக் ஸ்டேஜ் தமிழ் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். இந்தப் பாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்றப் பிறகு எப்படி உணர்கிறீர்கள்?
அருளினி: நன்றி! எனது வெற்றிக்குப் பிறகு நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் ஊக்கமூட்டப்பட்டவராகவும் உணர்கிறேன். இது வெறும் ஆரம்பம் என்பது நிச்சயம்.
ரோஷினி: நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். மிக முக்கியமாக, மேலும் பல வெற்றிகளைச் சுவைக்க இந்த வெற்றி என்னைத் தூண்டியது.
- பிக் ஸ்டேஜ் தமிழ் நிகழ்ச்சியில் உங்களின் தனிப்பட்டச் சிறந்தப் படைப்பு எது என்பதை நீங்கள் கருதுவீர்கள்?
அருளினி: எனது நான்காவது சுற்றின் படைப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். ஏனென்றால், நான் நாட்டுப்புறப் பாணியிலானப் படைப்பை வழங்கினேன். நான் அதை மிகவும் இரசித்தேன்.
ரோஷினி: ‘சந்திரலேகா’ பாடலைப் பாடிய எனது இறுதிப் படைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் எனதுப் படைப்பில் நான் மிகவும் திருப்தியடைந்தேன்.
- பாடகர்களில் உங்களின் ஐடல் (Idol) யார்?
அருளினி: என் ஐடல் ஏ. ஆர். ரகுமான். நாம் விரல் நுனியில் இசைப்பதிலோ அல்லது நம் குரல்வளையைத் திறந்துப் பாடுவதிலிருந்தோ இசை வரவில்லை. மாறாக அது ஆத்மார்த்தமான முதலீடு என்பதை அவரது பாடல்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தன.
ரோஷினி: ஸ்ரேயா கோஷல், சித்தி நூர்ஹலிசா, ஆண்ட்ரியா, பியான்ஸ் மற்றும் பலர் எனதுப் பாட்டு ஜடல்கள் ஆவர்.
- பாடல் பயணத்தைத் தொடர உங்களின் திட்டங்கள் யாவை?
அருளினி: எனதுச் சொந்தத் தனிப்பாடல்கள் மற்றும் பாடல்கள் தொகுப்பைத் தயாரிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும், ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கு இசை மூலம் உதவ விரும்புகிறேன்.
ரோஷினி: முதுகலைப் படிப்பைத் தொடரும் தருணத்தில் அசல் பாடல்களைத் தயாரிக்க விரும்புகிறேன். நன்கு அறியப்பட்டப் பாடகராகத் திகழ அனுபவத்தைப் தவிர இசை அறிவும் இன்றியமையாதது என்பதை நான் உணர்கிறேன்.
- உங்களின் இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியைப் பகிருக.
அருளினி: ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். யார் சிறந்தவர் என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டு, அவர்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் யார் என்பதை நீங்கள்தான் வரையறுக்கிறீர்கள்.
ரோஷினி: என் மீது நம்பிக்கை வைத்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு தடைகளை வென்றுப் பீடு நடைப்போடச் சிலர் என்னை ஊக்குவித்தீர்கள். இந்த அற்புதமான மனிதர்களுக்கு நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னால் முடிந்தவரைச் சிறந்ததை வழங்கக் கடினமாக உழைப்பேன்.
ஹரிஹரன் சி கங்கத்ரன், சசிதரன் ராஜேந்திரன் & தனுஷன் ஜெயக்குமார், இறுதிப் போட்டியாளர்கள்:
- நீங்கள் எப்படிப் பாட ஆரம்பித்தீர்கள் மற்றும் உங்கள் திறமையை எவ்வாறு வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தீர்கள் என்பதற்கான பின்னணியைப் பகிர்ந்துக் கொள்ளவும்.
ஹரிஹரன்: என்னுடைய ‘தேவாரம்’ குரு என்னைப் பாடத் தூண்டினார். நான் சினிமாப் பாடல்களைப் பாடத் தொடங்குவதற்கு முன்பு ‘தேவாரம்’ தான் எனக்கு அடித்தளமாக இருந்தது.
சசிதரன்: நான் ஆரம்பப் பள்ளியில் கல்விக் கற்கும் போதே எனதுப் பாடல் பயணத்தைத் தொடங்கினேன். மறைந்த இந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் அவர்களால் நான் பாட்டுப் பாடத் தூண்டப்பட்டேன். எனதுத் திறமையை வெளிப்படுத்தச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறேன்.
தனுஷன்: என்னுடைய அத்தை சுகுணாவின் மேடை நிகழ்ச்சிகளை நான் சிறுவயதிலிருந்தேப் பார்த்ததால், என்னை அது பாடத் தூண்டியது. எனது பாடல் பயணத்தைத் தொடர எனதுக் குடும்பம் ஒரு பெரியத் தூணாகவும் ஆதரவாகவும் இருந்து வருகிறது. கவர் பாடல்கள் மூலம் எனதுத் திறமையை வெளிப்படுத்தச் சமூக தளங்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியதே எனது குடும்பம்தான்.
- ஆர்வமுள்ளப் பாடகராக உங்கள் பயணத்தில் பிக் ஸ்டேஜ் தமிழ் உங்களுக்கு எவ்வாறு உதவியது?
ஹரிஹரன்: சிறந்தக் கலைஞராகி அதிக இரசிகர்களை ஈர்க்கப் படைப்பின் முக்கியத்துவம், பாடல் தேர்வு மற்றும் பலவற்றை பிக் ஸ்டேஜ் தமிழ் எனக்குக் கற்றுக் கொடுத்தது. எனது சகப் போட்டியாளர்களுடன் ஆரோக்கியமானப் போட்டியைக் கொண்டிருக்கவும் எனது தன்னம்பிக்கை அதிகரிக்கவும் பிக் ஸ்டேஜ் தமிழ் எனக்கு உதவியது.
சசிதரன்: பிக் ஸ்டேஜ் தமிழ் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் சிறந்தப் படைப்பாளராக என்னை வடிவமைத்ததற்கும் சிறந்த வாய்ப்பு வழங்கியதற்கும் நான் ஆஸ்ட்ரோவுக்கு நன்றிக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். எதிர்காலத்தில் நான் ஒரு நட்சத்திரமாக மாறினால், அதன் பெருமை அழகான ஆஸ்ட்ரோ குழுவைச் சேரும்.
தனுஷன்: பிக் ஸ்டேஜ் தமிழ் என் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் பாட்டுப் போட்டியில் பங்கேற்றதில் நான் பெருமை அடைகிறேன். ஒரு பல்துறை கலைஞராகப், பாடுதல் மற்றும் படைப்பு ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சி எனக்குக் கற்றுக் கொடுத்தது. பாவனை மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தவும் எனது மேடைப் பயத்தைப் போக்கவும் இந்நிகழ்ச்சி எனக்கு உதவியது. நடுவர்களின் கருத்துக்களும் எனதுத் திறமையை மேம்படுத்த உதவியது. இறுதியாகப், பிக் ஸ்டேஜ் தமிழ் நிகழ்ச்சிக்கு நன்றி.