Home நாடு “திராவிட மோடல், மலேசியாவுக்கும் பொருந்துமா?” – ஒப்பிடுகிறார் இராமசாமி

“திராவிட மோடல், மலேசியாவுக்கும் பொருந்துமா?” – ஒப்பிடுகிறார் இராமசாமி

630
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : அண்மையக் காலமாக தமிழ் நாடு முழுவதும் பேசப்படும் ‘திராவிட மோடல்’ எனப்படும் திராவிடக் கட்டமைப்பு என்பது என்ன? அது மலேசியாவுக்கும் பொருந்தக் கூடிய ஒரு சித்தாந்தமா? என்பது குறித்து விவரிக்கிறார் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி.

தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள் பின்வருமாறு:-

திராவிடம் என்ற சொல்லாடலை நாம் கேட்டிருப்போம்; பிராமணிய தத்துவார்த்துக்கு எதிரானதுதான் திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த கொள்கைகள். ஆனால் ‘திராவிட மாடல்’ அடிப்படையிலான மேம்பாடு என்பது புதிய சொல்லாடல்.

#TamilSchoolmychoice

அதிலும், தமிழகத்தின் புதிய அரசாங்கம் இந்த திராவிட மாடல் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுப்பதாக காட்டிக்கொள்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் அபரிதமான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இந்த ‘திராவிட மாடல்’-தான் அடிப்படை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக நீதியை அடிப்படையாக கொண்ட பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றத்தைத்தான் திராவிட மாடல் என கூறுகிறோம்.

ஆரிய படையெடுப்புக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்தவர்களைத்தான் நாம் திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறோம். சில அகழ்வாராய்ச்சியாளர்கள், சிந்து சமவெளி நாகரீகம், திராவிடர்கள் வாழ்ந்த நாகரீகம் என கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் அண்மையக் காலமாக கண்டுபிடிக்கப்பட்ட பொருநை, மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி கண்டெடுப்புக்கள், தற்கால இந்தியாவின் மூத்த குடிமக்கள் திராவிடர்கள் என்பதையே காட்டுகின்றன.

கடந்த காலங்களில் திராவிடம் – தமிழ் என்ற சொல்லாடல்கள் ஒன்றானதாகவே இருந்து வந்தன. ஆனால், தற்பொழுது ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை விட ‘தமிழர்’ என்ற அடையாளமே முன்னிறுத்தப்படுகின்றது.

திராவிடர் என்ற அடையாளம் தமிழர்களை மட்டும் குறிப்பதல்ல; தமிழிலிருந்து பிறந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் இனக்குழுக்களையும் குறிப்பதாகும். மலையாளிகள் கேரளாவிலும், தெலுங்கர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கனாவிலும், கன்னடர்கள் கர்நாடகத்திலும் வாழ்கின்றனர். ஆனால் ‘திராவிடர்’ என்ற அடையாளம், சொல்லாடல், தமிழ்நாட்டு தமிழர்கள் மத்தியில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.

திராவிடக் கொள்கை தத்துவங்கள், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய அரசியல் கட்சிகளின் அடிப்படை கொள்கையாக இருந்தது. இந்திய சமூக கட்டமைப்பில், தங்களைப் பிறப்பால் உயர்ந்தவர்கள் என கூறிக்கொண்டு பிராமணர்கள் கட்டமைத்த சமூக நீதிக்கு புறம்பான அரசியல்-சமூக கட்டமைப்பை உடைப்பதற்கு இந்த திராவிட கொள்கைகள் அடிப்படையாக இருந்தன.

தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திராவிட பேரியக்கத்தின் முக்கிய புள்ளியாக பெரியார் இராமசாமி முன்வந்தார். பெரியாரின் சமூகநீதி கொள்கையானது, சாதியம் தமிழர்கள், திராவிடர்களுக்கு எதிரானது என்ற தத்துவார்த்தத்தை மக்கள் மனதில் ஆழமாக பதித்தது. சாதி என்பது சாக்கடை போன்றது என்பதுதான் பெரியாரின் அடிப்படை வாதம்.

சமூகக் கட்டமைப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டங்களே, திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைக்க உந்துதலாக அமைந்தது. பின்னாளில் திமுக-விலிருந்து பிரிந்த திராவிட கட்சிகள் பெரும்பாலும், அரசியல் முரண்பாடுகள், தலைமைத்துவ மோதல்களால் தோன்றியவை.

அடிப்படையில் திராவிட மாடல் என்பது பொருளாதார தத்துவங்களை மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல, பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்த சமூகநீதி கொள்கை முன்னெடுப்பாகும். அது வெறும் சமூக முன்னெடுப்பாக மட்டுமல்லாமல், பொருளாதார, சமூக மேம்பாட்டு முன்னெடுப்பாகவும் அமைந்தது.

திராவிட மாடல் என்ற கொள்கைகளை தற்காப்பவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை, மேற்குலகின் குறுகிய பொருளாதாரப் பார்வையில் நோக்காமல், பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக சமூக, அரசியல், பொருளாதார அநீதிக்கு எதிராக கிளம்பிய சமூக புரட்சியாகத்தான் காண வேண்டும் என சரியாக குறிப்பிடுகின்றனர்.

தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ சாதியம் முழுதாக ஒழிக்கப்படவில்லை. ஆனால், பிராமண ஆதிக்க அநீதியை எதிர்க்க பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஒன்றிணைப்பானது, சமூகநீதியின் வெற்றியாகும்.

திராவிட மாடல் முழுதாக சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்பதிலும் சில பலவீனங்கள் இருக்கவே செய்கின்றன. பிராமண ஆதிக்கத்துக்கு எதிரான முன்னெடுப்புகள், சாதியத்தை ஒழிக்கவில்லை; சாதிகளுக்கிடையான மோதல்களையும் நிறுத்தவில்லை.

என்னதான் பலவீனம் இருப்பினும், திராவிட மாடல் அரசியல் வழி மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை பெற்றுள்ளன. திராவிட மாடல் அரசியல், இந்தியாவில், தமிழகத்தில் மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தையும், ஒடுக்குமுறைகளையும் வென்றுள்ளது.

சாதிய, வகுப்பு வேறுபாடுகளை கடந்த சமூக வளர்ச்சியே, இன்னும் சமூக, இன, மத அடிப்படையில் இன்னும் பின்தங்கியுள்ள மற்ற மாநிலங்கள், நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும்.

மலேசியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சி தேக்கமடைய, இன, மத வேறுபாடே அடிப்படை காரணமாக இருக்கின்றது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை கலைந்து, சமூகநீதியை முன்னிறுத்திய பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்தால் முன்னெடுக்க முடியுமென்றால், மலேசியாவில் ஏன் அதை செய்ய முடியாது?

இன, மத வேறுபாடுகளை கடந்த மேம்பாட்டு, வளர்ச்சியை முன்னிறுத்திய ‘மலேசிய மாடல்’ அரசியலை நாம் ஏன் முன்னெடுக்க முடியாது?