நிபோங் திபால், ஏப்ரல் 24- பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற தே.மு.கூட்ட பிரசாரத்தின்போது மர்மமான முறையில் வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு 10.15 மணியளவில் நிபோங் திபால் வட்டாரத்தில் பினாங்கு மாநில கெராக்கான் தலைவரும், பினாங்கு மாநில தே.மு.தலைவருமான டத்தோ டாக்டர் தெங் ஹோக் நான் பிரதான மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் குவிக்கப்பட்டிருந்த பொருட்களில் இருந்து அந்த வெடிப்பு ஏற்பட்டதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம் இணையத் தளத்தில் செய்தி வந்துள்ளது.
இந்த வெடி சம்பவத்தின்போது நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜைனால் அபுடின் ஒஸ்மானுடன் உடன் வந்த கட்சி பணியாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வெடிப்பில் இருந்து வெளிவந்த ஒரு கூர்மையான பொருள் சம்பந்தப்பட்டவரின் காலில் பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்புக்கான காரணம் இன்னும் அறியப்பட முடியாத வேளையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தைச் சுற்றி தடுப்புக் காவல் ஏற்படுத்தி வெடிப்புக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.