ஜார்ஜ் டவுன் – நிபோங் திபாலில் நண்பர்கள் 4 பேர் சேர்ந்து வீட்டில் பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக அவை வெடித்ததில், ஒருவர் முகத்தில் 20 சதவிகித தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாமான் தெர்குகுர் இண்டா என்ற இடத்திலுள்ள குடியிருப்பு ஒன்றில், 17 வயதிலிருந்து 20 வயதிற்குட்பட்ட மூன்று இளைஞர்களும், 1 பெண்ணும் சேர்ந்து வீட்டிலேயே வெடிபொருள் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் அவை எதிர்பாராதமல் திடீரென வெடித்ததில், இளைஞர்களில் ஒருவர் கடுமையாகக் காயமடைந்தார். மற்ற மூவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்ததில், கட்டிடத்தில் சிறு சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. என்றாலும் அவை கட்டிடத்தில் நிலைப்புத் தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் லேசான காயமடைந்த 18 வயது இளைஞரின் தந்தையான லியாங் வோய் நாங் (வயது 39) கூறுகையில், தனது மகனுக்கு தற்போது சத்தமாகப் பேசினால் தான் காது கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.
“அவர்கள் சொந்தமாக பட்டாசுகள் செய்ய முயற்சி செய்துள்ளனர். அது மிகப் பெரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. தற்போது சத்தமாக வெடிக்கும் பட்டாசுகள் விலை அதிகம்”
“எனினும், சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட அந்தப் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த மேசையிலிருந்து கீழே விழுந்ததால் வெடித்துள்ளது” என்றும் கூறியுள்ள லியாங், தனது மகன் எஸ்பிஎம் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்த பெண் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் செபெராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் லியாங் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு வெடிபொருள் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் சட்டம், பிரிவு 4-ன் கீழ், சிதைக்கும் அல்லது வெடிக்கும் பொருள்கள் அல்லது தாக்குதல் ஆயுதம் பயன்படுத்திய குற்றத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப்படுவதாக தெற்கு செபெராங் பிறை ஓசிபிடி வான் ஹசான் வான் அகமட் தெரிவித்துள்ளார்.
படம்: நன்றி (The Star)