Home நாடு நஜிப், குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை நியமிக்க விண்ணப்பம்! தாமதிக்கும் நோக்கமா?

நஜிப், குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை நியமிக்க விண்ணப்பம்! தாமதிக்கும் நோக்கமா?

468
0
SHARE
Ad

(கூட்டரசு நீதிமன்றத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது எஸ்ஆர்சி நிறுவன வழக்கு தொடர்பான நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீடு. அந்த வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க குயின்ஸ் கவுன்சல் தகுதி கொண்ட இலண்டன் வழக்கறிஞரை நியமிக்க நஜிப் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் உண்மையிலேயே அத்தியாவசியமானதா அல்லது வழக்கைத் தாமதிக்கும் நோக்கமா? தன் பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் எஸ்ஆர்சி நிறுவன மேல்முறையீட்டு வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்காகக் காத்திருக்கிறது. அந்த விசாரணையில் தன்னைப் பிரதிநிதித்து குயின்ஸ் கவுன்சல் அந்தஸ்து கொண்ட லண்டன் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென அவர் விண்ணப்பம் செய்திருக்கிறார்.

ஏன் திடீரென இத்தகைய விண்ணப்பம்? அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன? குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான வரலாற்றுக் காரணங்கள் என்ன? உண்மையிலேயே அத்தகைய வழக்கறிஞர் ஒருவர் இந்த வழக்கில் அத்தியாவசியத் தேவையா? அல்லது மேல்முறையீட்டு வழக்கைத் தாமதிக்கும் வியூகமா? போன்ற அம்சங்களைக் கண்ணோட்டமிடுவோம்.

மலேசிய நீதிமன்றக் கட்டமைப்பு மாற்றங்கள்

#TamilSchoolmychoice

மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர் நம் நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு பிரிட்டிஷ் காலத்தில் இருந்தது போன்றே தொடர்ந்தது. அப்போது நாடாளுமன்றத்தில் இப்போது உள்ளதைப் போன்று நிறைய சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

பெரும்பாலான வழக்குகளில் பிரிட்டன் நாட்டு சட்டங்களின் அடிப்படையிலும் இந்தியா போன்ற காமன்வெல்த் நாடுகளின் சட்டங்களின் அடிப்படையிலும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. வழக்குத் தொடுக்கும் வாதிகள் அல்லது பிரதிவாதிகள் மலேசிய நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பைப் பெற்றதும் அவர்கள் பிரிவிகவுன்சில் (Privy Council) எனும் பிரிட்டன் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்னும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பிரிவி கவுன்சில் என்பது காமல்வெல்த் நாடுகளின் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்குப் பின்னர் இறுதி மேல் முறையீட்டுக்காகப் பிரிட்டன் உருவாக்கிய நீதிமன்றமாகும். மலேசியாவில் இருந்தும் பல வழக்குகள் பிரிவிகவுன்சிலுக்கு மேல் முறையீட்டுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதற்கான வழக்குச் செலவினங்கள் மிக அதிகம் என்பதால் பெரும் பணக்காரர்கள் மட்டுமே இத்தகைய மேல்முறையீட்டைச் சமர்ப்பித்து வந்தனர். பிரிவிகவுன்சில் நீதிமன்றத்தில் வழக்காட பிரிட்டனின் வழக்கறிஞர்களே நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான கட்டணமும் அதிகம். பிரிவிகவுன்சில் நீதிமன்றம் பிரிட்டிஷ் நீதித்துறை அடிப்படையில் செயல்படும் நீதிமன்றம் என்பதால் – பிரிட்டனின் நீதித் துறை நடைமுறைகள் தெரிந்த பிரிட்டிஷ் வழக்கறிஞர்களையே அங்கு வாதாட நியமிப்பது வழக்கமாக இருந்தது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் பொதுவாக குயின்ஸ் கவுன்சல் (Queens Counsel) என்ற வழக்கறிஞர் பிரிவிலிருந்து இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞர்கள் யார்?

பிரிட்டனில் பாரிஸ்டர்களாக (Barristers), நீதிமன்ற வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்கள் சுமார் 15 ஆண்டு காலம் பணியாற்றி அனுபவம் பெற்றதும் அவர்கள் குயின்ஸ் கவுன்சல் என்ற அந்தஸ்தைப் பெற விண்ணப்பிக்கலாம். மற்ற சில தகுதிகளையும் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஆட்சியில் இருக்கும் அரசியாரின் அனுமதியோடுதான் அவர்கள் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படுவார்கள்.

பொதுவாக அரசக் குடும்பத்திற்காக வழக்காட தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என்ற பாரம்பரிய நடைமுறை இவர்கள் நியமனத்தில் பின்பற்றப்படுகிறது. அதனால்தான் அவர்களுக்கு குயின்ஸ் கவுன்சல் – அதாவது மகாராணியாரின் வழக்கறிஞர்கள் – என்ற பெயர். நேரடியாக அரசியாரே இவர்களை நியமிப்பார். எனினும் இவர்கள் தகுதி அடிப்படையில்தான் நீதித் துறையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தற்போது எலிசபெத் ராணியாரின் ஆட்சி நடைபெறுவதால் அவர்கள் குயின்ஸ் கவுன்சல் என்று அழைக்கப்படுகிறார்கள். இதுவே மன்னர் ஆட்சி என்றால் அவர்கள் கிங்ஸ் கவுன்சல் என்று அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அணியும் பாரம்பரிய வழக்கறிஞர் கவுன் (Gown) எனும் ஆடையைப் பட்டுத்துணியால் அவர்கள் தைத்துக்கொள்ளலாம். மற்ற வழக்கறிஞர்களுக்குப் பட்டுத்துணியால் அவர்களின் கவுனைத் தைத்துக்கொள்ளும் உரிமை இல்லை. குயின்ஸ்கவுன்சல் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே பட்டுத் துணியால் ஆன கவுன் அணியும் உரிமை உண்டு.

மலேசிய வழக்குகளை பிரிவிகவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்யும் நடைமுறை இருந்தவரையில் அந்த மேல் முறையீட்டு வழக்குகளுக்காக குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது.

பிரிவி கவுன்சில் மேல் முறையீட்டு நடைமுறை ஒழிக்கப்பட்டது

1 ஜனவரி 1985 முதல் மலேசியாவின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தில் இருந்து பிரிவிகவுன்சில் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் நடைமுறை முற்றாக நிறுத்தப்பட்டது. இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. அதன் பின்னர் கூட்டரசு நீதிமன்றம் சுப்ரிம் கோர்ட் என அழைக்கப்பட்டது. ஏற்கெனவே பிரிவிகவுன்சிலில் செவிமடுப்பதற்காகக் காத்திருந்த வழக்குகள் மட்டுமே தொடர்ந்து நடத்தப்பட்டன.

1985ஆம் ஆண்டு முதல் எல்லா வழக்குகளும் மலேசிய நீதிமன்றங்களிலேயே நடத்தப்பட்டு இறுதித் தீர்ப்பு கூட்டரசு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டன.

1994ஆம் ஆண்டில் மீண்டும் நீதித்துறையில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு 3 அடுக்கு நீதி பரிபாலனத்துறை உருவாக்கப்பட்டது. இதன்மூலம் உயர் நீதிமன்றம், கோர்ட் ஆப் அப்பீல் என்ற மேல் முறையீட்டு நீதிமன்றம், பெடரல் கோர்ட் என்ற மேல் முறையீட்டு கூட்டரசு நீதிமன்றம் ஆகியவை உருவாக்கப்பட்டன.

மாஜிஸ்திரேட், செஷன்ஸ் என்ற கீழமை நீதிமன்றங்கள் சிறிய வழக்குகளுக்காகத் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

குயின்ஸ்கவுன்சல் வழக்கறிஞர்கள் மலேசியாவில் வழக்காட கட்டுப்பாடுகள்

பிரிவிகவுன்சில் மேல் முறையீடு நடைமுறை முற்றாக ஒழிக்கப்பட்டாலும் குயின்ஸ் கவுன்சல் எனும் பிரிட்டனின் வழக்கறிஞர்கள் மலேசிய நீதிமன்றங்களுக்கு வந்து வழக்காடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் அதற்குச் சில கட்டுப்பாடுகளும் உண்டு.

அவ்வாறு வழக்காட விரும்புபவர்கள் முதலில் உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வழக்கு வித்தியாசமான வழக்கு என்பதையும் இதற்கு வழக்காட சிறப்புத் தகுதிகள் – திறமைகள் – கொண்ட ஒரு வழக்கறிஞர் தேவை என்றும் அந்தத் தகுதிகள் வழக்காட முன்வரும் குறிப்பிட்ட குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞருக்கு உண்டு என்பதையும் விண்ணப்பிக்கும் வழக்கறிஞர் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்.

அத்தகைய விண்ணப்பத்திற்கு மலேசிய வழக்கறிஞர் மன்றமும் ஆட்சேபணை தெரிவிக்கக்கூடாது. அரசாங்கத் தரப்பும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது. இவையெல்லாம் சாத்தியமானால் அந்த குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் குறிப்பிட்ட வழக்கிற்காக வழக்காட அனுமதிக்கப்படுவார்.

கடந்த காலங்களில் சில வழக்குகளில் இவ்வாறு குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞர்கள் நம் நாட்டிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில்தான் நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில் குவின்ஸ்கவுன்சல் வழக்கறிஞரான  ஜோநாதன் லேய்ட்லா (Jonathan Laidlaw), தனக்காக நியமிக்கப்பட வேண்டுமென நஜிப், தனது வழக்கறிஞர் நிறுவனமான ஷாபி அப்துல்லா நிறுவனத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் இந்த விண்ணப்பத்திற்கு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபணைத் தெரிவித்துள்ளனர். இதுவரை வழக்கை நடத்திவந்த டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாவின் வழக்கறிஞர் குழுவினரே திறமையானவர்கள்தாம். இந்த வழக்கை நடத்துவதற்கு ஆற்றல்கொண்டவர்கள்தாம். எனவே நஜிப் வழக்கில் உள்நாட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் தெரியாத குயின்ஸ் கவுன்சல் வழக்காடத் தேவையில்லை என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஷாபி அப்துல்லாவே இந்த வழக்கை நடத்தி வந்திருக்கும் நிலையில் இப்போது மட்டும் இன்னொரு வழக்கறிஞர் ஏன் என்ற வாதத்தையும் அரசாங்கத் தரப்பு முன் வைத்திருக்கிறது.

வழக்கில் நஜிப்பைப் பிரதிநிதிக்கும் குயின் ஸ்கவுன்சல் வழக்கறிஞருக்கு மலாய் மொழி தெரியாது என்பதால் அவர் இந்த வழக்கைப் புரிந்துகொள்வது சிரமம் என்றும் அரசு தரப்பு கூறுகிறது. நாட்டிலுள்ள 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவர் கூட நஜிப்புக்காக வழக்காடும் திறமைசாலி இல்லையா என்ற கேள்வியையும் அரசு தரப்பு எழுப்பியிருக்கிறது.

தாமதிக்கும் வியூகமா?

நஜிப்பின் மேல்முறையீட்டு வழக்கைத் தாமதிக்க மேற்கொள்ளப்படும் வியூகம் இது என்ற கருத்து பொதுவாக வழக்கறிஞர்கள் மத்தியில் நிலவுகிறது.

கடந்த காலங்களில் ஓரிரு முறைகள் இதுபோன்று குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞர்களை நியமிக்க நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.

எனினும், குயின் கவுன்சல் வழக்கறிஞரை நியமித்துக் கொள்வது நஜிப்பின் சட்ட உரிமையாகும். மலேசிய சட்டங்களைப் பின்பற்றித்தான் அவர் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

கூட்டரசு நீதிமன்றம் குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை நஜிப் சார்பில் நியமிக்க அனுமதிப்பார்களா? அல்லது மறுப்பார்களா என வழக்கறிஞர் வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.

காரணம் நீண்ட காலமாக மலேசிய நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டதில்லை. அப்படியே அவர் இந்த வழக்கில் அனுமதிக்கப்பட்டாலும் திருப்புமுனை ஏற்படுத்தும் அளவுக்கு எத்தகைய வாதங்களை நஜிப்புக்காக முன்வைப்பார் என்பதும் கேள்விக்குறிதான்.

நஜிப்பிற்கு குயின்ஸ்கவுன்சல் வழக்கறிஞர் வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டால், அதுவும் அவரின் உரிமைகள் பறிக்கப்படுவதாக அரசியல் சர்ச்சைகளை எழுப்புவதற்கு காரணமாக அமையும்.

பின்னர், மேல்முறையீட்டு வழக்கில் அவர் தோல்வியடைந்தால், தோல்விக்கான காரணங்களுள் ஒன்றாக குயின்ஸ்கவுன்சல் வழக்கறிஞர் அனுமதி மறுப்பு பார்க்கப்படும்.

குயின்ஸ் கவுன்சல் விண்ணப்ப வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

இதற்கிடையில் இந்த மேல்முறையீட்டில் தனக்காக வாதாட குயீன்ஸ் கவுன்சல் தகுதி கொண்ட இலண்டன் வழக்கறிஞர் ஜோநாதன் லேய்ட்லா (Jonathan Laidlaw) என்பவரை நியமிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சமர்ப்பித்த விண்ணப்பத்தை வியாழக்கிழமை (ஜூன் 16) கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி அகமட் ஃபாரிட் வான் சாலே, இந்த வழக்கிலிருந்து தானே முன்வந்து
விலகிக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

காரணம், அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அதே கட்சியைச் சேர்ந்தவர் எனவும், ஒரு தொகுதியின் தலைவர் எனவும் நீதிபதி அகமட் ஃபாரிட் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது முடிவை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

“சுதந்திரமான நீதித் துறை ஒரு சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் தலையீடுகள் இருக்கக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதிபதிகள் செயல்பட வேண்டும். இந்த வழக்கில் நான் நீதிபதியாக செயல்பட்டால், அதில் முரண்பாடுகள் இருப்பதாகப் பார்க்கப்படும். நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் கருத்து சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடாது. எனவே, மேற்கூறிய காரணங்களுக்காக, எந்த தரப்பினரும் கோரிக்கை விடுக்கவில்லை என்றாலும்,
நானே முன்வந்து இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்று நீதிபதி மேலும் கூறினார்.

இதற்கிடையில் நேற்றைய விசாரணையில் இருந்து விலகிக் கொண்ட நீதிபதி அகமட் ஃபாரிட் வான் சாலே ஃபரித் ஒரு காலகட்டத்தில் செனட்டராக இருந்ததோடு,
உள்துறை துணை அமைச்சராகவும் இருந்தார் என ஊடகங்கள் தெரிவித்தன.

எனினும், நீதித்துறையில் இணைவதற்கு முன்னர் அவர் அம்னோவிலிருந்தும் மற்ற பதவிகளில் இருந்தும் விலகிக் கொண்டார் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.

நீதிபதி அகமட் ஃபாரிட் விலகிக் கொண்டதைத் தொடர்ந்து குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை அனுமதிக்கக் கோரும் நஜிப்பின் விண்ணப்பம் மீதான வழக்கு விசாரணை மற்றொரு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான அகமட் கமால் முகமட் ஷாஹித் முன்னிலையில் வழக்கு நிர்வாகத்திற்காக நிர்ணயிக்கப்பட்டது.

நஜிப் எஸ்ஆர்சி வழக்கில் ஆகஸ்ட் 15 முதல் 19-ஆம் தேதி வரையும், ஆகஸ்ட் 22 முதல் 26 வரையும் 10 நாட்களை மேல்முறையீட்டு விசாரணைக்காக நாட்களை கூட்டரசு நீதிமன்றம் நிர்ணயித்திருக்கிறது.