Home இந்தியா யஷ்வந்த் சின்ஹா : இந்திய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்

யஷ்வந்த் சின்ஹா : இந்திய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்

464
0
SHARE
Ad

புதுடில்லி : ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் இந்திய அதிபருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியுள்ளன.

யஷ்வந்த் சின்ஹா பீகார் மாநிலம் பாட்னாவில் 1937 -ல் பிறந்தவர். 1958-ல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றபிறகு யஷ்வந்த் சின்ஹா, 1960 வரை பாட்னா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதன்பிறகு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியராக, 24 ஆண்டுக்காலம் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பின்னர் 1984-ம் ஆண்டு தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனதா கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

1988-ல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-ல் ஜனதா தளம் கட்சி உருவானபோது அதன் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்.

1990 முதல் 1991 வரை இந்தியாவின் நிதியமைச்சராக சந்திரசேகர் அமைச்சரவையில் பணியாற்றினார்.

வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசில் 1998-ல் நிதி அமைச்சராக இருந்த அவர், 2002-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் மோடி, அமித் ஷா ஆகியோரால் பா.ஜ.க-விலிருந்து யஷ்வந்த் சின்ஹா ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் பா.ஜ.க-விலிருந்து விலகி 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் அந்தக் கட்சியின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக, வருகிற ஜூன் 27-ம் தேதி அவர் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.