ராஞ்சி, ஜுன் 5 – ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இது தொடர்பாக பல முறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட மின்சார வாரிய தலைமை அலுவலகத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்க்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 2 ஆம் தேதி முற்றுகையிட்டனர்.
மின்சார வாரிய அலுவலரை கட்டி வைத்து தாக்கியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 300 தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
யஷ்வந்த் சின்கா கூறியதன் பேரில், அந்த அலுவலகத்தில் இருந்த ஹசாரிபாக் மாவட்ட மின்சார வாரிய பொது மேலாளர் கைகளை கயிற்றினால் கட்டி அமர வைத்தனர். பின்னர், பொதுமக்கள் அனைவரும் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து முன் கதவை பூட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பணிக்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் யாரையும் உள்ளே நுழைய அவர்கள் அனுமதிக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்று மேலாளரின் கை கட்டுகளை அவிழ்த்து விடுவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, யஷ்வந்த் சின்கா மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தொண்டர்களை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் சட்டசபை முன்னாள் சபாநாயகர் தலைமையில் அம்மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்கள் நேற்று சிறைக்கு சென்று யஷ்வந்த் சின்காவை சந்தித்தனர்.
ஜாமினில் வெளியே வர ஏற்பாடு செய்வதாக அவர்கள் கூறியதை ஏற்றுக் கொள்ள மறுத்த யஷ்வந்த் சின்கா, தன்னை சட்டவிரோதமாக கைது செய்த மாநில அரசு தன் மீதும் பா.ஜ.க.வினர் மீதும் போட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறும் வரை சிறையில் இருந்து வெளியே வரப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.