புலாவ் தியோமான், ஜூன் 5 – தியோமான் தீவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஆணின் சடலம் தற்போது குவந்தான் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. தியோமான் தீவில் காணமல் போன பிரிட்டிஷ் பிரஜையான ஹேரத் ஹண்ட்லி என்பவரின் சடலம் இதுதானா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை.
இந் விவகாரம் குறித்து கருத்துரைத்த பஹாகங் காவல்துறை உயரதிகாரியான டத்தோ ஷரிபுடின் அப்துல் ஹனி, கண்டெடுக்கப்பட்ட அந்தசடலத்தில் எந்தவித ஆவணங்களும் இல்லை என்றும் அந்த சடலத்தின் முகம் அழுகிய நிலையில் மோசமாக சேதமடைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
குவந்தான் மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொள்ளும் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அந்த மனிதர் எவ்வாறு மரணமடைந்திருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படுமென்றும் கூறிய அந்தக் காவல்துறை அதிகாரி, அந்த சடலத்திற்குரியவர் நிச்சயம் மலாய்க்காரர் அல்ல என்பது மட்டும் உறுதி என்று கூறினார்.
இன்று ஹேரத் ஹண்ட்லியின் குடும்பத்தினர் குவந்தானுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அவர்கள் அந்தச் சடலத்தை அடையாளம் காட்டுவார்கள் என்றும் ஷரிபுடின் மேலும் தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட பரிசோதனையின் படி, அந்தச் சடலத்தின் கால்களில் ஆழமான வெட்டுக்காயம் ஒன்று இருந்ததாக ஸ்டார் இணையத்தள செய்தி ஒன்று கூறியது. இந்தச் சடலத்தின் கண்டுபிடிப்புக் குறித்து காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையின் குடும்பத்திற்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷரிபுடின் கூறினார்.