கோலாலம்பூர், ஜூன் 8 – பிரிட்டிஷ் குடிமகன் கேரத் ஹண்ட்லியின் மரணம் அறிந்தவுடன் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
34 வயதான கேரத் கடந்த மே 27ஆம் முதல் தியோமான் தீவில் காணாமல் போனார். கம்போங் ஜூவாரா ஆமைகள் பாதுகாப்பு மையத்தில் தன்னார்வத் தொண்டூழியத்தில் ஈடுபட்ட வந்த அவரது சடலம் கடந்த ஜூன் 4ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
தனது ட்விட்டர் அகப் பக்கத்தில் “இந்த சோதனையான கட்டத்தில் நமது நினைவுகளும் பிரார்த்தனைகளும் கேரத் ஹண்ட்லியின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சார்ந்தே இருக்கும்” என்ற பொருளில் நஜிப் செய்தியொன்றைப் பதிவு செய்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை, பகாங் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஷரிபுடின் அப்துல் கனி, தியோமான் தீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன பிரிட்டிஷ் குடிமகனின் சடலம்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
தியோமான் தீவில் உள்ள கம்போங் ஜூவாரா லாகூன் தங்கும் விடுதிக்கருகில் உள்ள மெந்தாவாக் ஆற்றங்கரையோரம் கேரத்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தனது மகனின் நிலைமையை நேரடியாகக் கண்டறிய கேரத்தின் தாயார் ஜேனட் சவுத்வெல் கோலாலம்பூர் வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரத்தின் சடலத்தின் மீது பிரேதப் பரிசோதனையும், மரபணு பரிசோதனையும் நடத்தப்பட்டது. அவரது தாயாரின் மரபணு மாதிரிகளோடு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் வழி கண்டெடுக்கப்பட்ட சடலம் கேரத் ஹண்ட்லியின் சடலம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.