குவாந்தன், ஜூன் 6 – புலாவ் தியோமானில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆணின் சடலம் காணாமல் போன கேரத் ஹண்ட்லி என்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டூழியரின் உடல் தானா என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை முடிவிற்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
நேற்று துங்கு அம்புவான் அஃப்சான் மார்க் மருத்துவமனையில் அவ்வுடலில் நடத்திய பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரும் இறந்ததற்காக காரணம் இன்னும் உறுதிபடுத்தப் படவில்லை என பகாங் காவல்துறையின் மூத்த துணைத்தலைவரான டத்தோ ஷாரிஃபுடின் அப்துல் கானி கூறியுள்ளார்.
அது கேரத் ஹண்ட்லியின் உடல் தானா என்பதைக் கண்டறிய இன்னும் பலகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் ஷாரிஃபுடின் குறிப்பிட்டார்.
“அந்த சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிரிகள் வேதியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதற்கான முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகலாம்” என்று ஷாரிஃபுடின் தெரிவித்துள்ளார்.
ஹண்ட்லியின் தாய் ஜேனட்டிடமிருந்தும் மரபணு மாதிரிகள் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷாரிஃபுடின் தெரிவித்துள்ளார்.
கடல் ஆமைகள் மீதான ஆய்வுத் திட்டத்தின் கீழ் தியோமானில் தங்கியிருந்த கேரத் ஹண்ட்லியை, கடந்த மே 27 – ம் தேதி முதல் காணவில்லை. அவரைத் தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்ட போது அடையாளம் தெரியாத ஆணின் பிணத்தை மீட்புக் குழுவினர் குளம் ஒன்று அருகே கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை அறிக்கையை கீழ்காணும் காணொளி வழியாகக் காணலாம்:-