Home Photo News பெர்சாத்து நிலைமை என்ன? பக்காத்தானுடன் கூட்டணியில்லை – வெளியேறும் தலைவர்கள் !

பெர்சாத்து நிலைமை என்ன? பக்காத்தானுடன் கூட்டணியில்லை – வெளியேறும் தலைவர்கள் !

813
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனித்து விடப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது பெர்சாத்து கட்சி. அதனுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என பிகேஆர் கட்சி அறிவித்து விட்டது. அடுத்தடுத்து பல முக்கியத்  தலைவர்கள் பெர்சாத்துவில் இருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றனர். 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவின் நிலைமை என்ன? தனது பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

அண்மையில் நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தலில் உச்சமன்ற உறுப்பினர்களுக்கான போட்டியில் அதிக வாக்குகள் பெற்று முதலாவது இடத்தைப் பிடித்தவர் முன்னாள் கல்வி அமைச்சரான மஸ்லீ மாலீக்.

கடந்த ஆண்டு வரை பெர்சாத்து கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் – துன் மகாதீர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்தவர் மஸ்லீ. கடந்த ஆண்டில்தான் பெர்சாத்துவில் இருந்து விலகி, பிகேஆர் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஒரே வருடத்தில் அதிக வாக்குகள் பெற்று, முதலாவது நிலையில் அவர் உச்ச மன்ற உறுப்பினராக வென்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சி தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனை இதுதான்! ஒருவர் ஒருவராக அந்தக் கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சிகளில் அடைக்கலமாகி வருகிறார்கள்.

மஸ்லீக்கு முன்பே, பெர்சாத்து கட்சியிலிருந்து விலகி மூடா என்ற தனிக்கட்சி கண்டார் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்.
அமைச்சராக இருந்த சுரைடா கமாருடின் விலகி புதிய கட்சியான பார்ட்டி பங்சா மலேசியாவில் இணைந்து அதன் தலைவராகியிருக்கிறார். பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அலியும் சுரைடாவைத் தொடர்ந்து அந்தக் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டாலும், இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை.

ஆகக் கடைசியாக, பிகேஆர் கட்சியிலிருந்து அஸ்மின் அலியோடு வெளியேறி பெர்சாத்துவில் இதுவரை இணைந்திருந்த துணையமைச்சர் எட்மண்ட் சந்தாராவும் தற்போது அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். எந்தக் கட்சியில் இனி இணைவார் என்பது இதுவரையில் தெரியவில்லை.

பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை – அதிரடி முடிவெடுத்த பிகேஆர் தலைமைத்துவம்

எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் பெரிய கூடாரம் என்ற பெயரில் எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்தால்தான் தேசிய முன்னணிக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்ற சிந்தனை அடிக்கடி அரசியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

இதற்கு நேர் எதிரான சிந்தனை கொண்டவர் பிகேஆர் கட்சியின் புதிய துணைத் தலைவர் ரபிசி ரம்லி. பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி கட்சிகளின் ஆதரவுத் தளத்தையும், உட்கட்டமைப்பையும் முதலில் வலுப்படுத்துவோம் – துரோகம் செய்து ஆட்சியைக் கவிழ்த்த மற்ற எதிர்க்கட்சிகளுடன் 15-வது பொதுத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் – என்பது ரபிசியின் நிலைப்பாடு.

இந்நிலையில்தான் கடந்த வார இறுதியில் நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டின் முடிவில் 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து கட்சியோடு கூட்டணி இல்லை என்ற அதிரடி முடிவை அந்தக் கட்சி அறிவித்திருக்கிறது.

முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறும் படலம் – பக்காத்தான் கூட்டணியோடு இணைய முடியாது என்ற சூழ்நிலை – என பல்வேறு சிக்கல்களுக்கிடையில் தனித்து விடப்பட்டிருக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பெர்சாத்து!

பெர்சாத்துவின் வலிமை என்ன? பலவீனம் என்ன?

இத்தனை பிரச்சனைகளுக்கும் இடையில் பெர்சாத்து இன்னும் வலிமையுடன் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பது எதனால்?

டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சிக்கான மக்கள் ஆதரவு தேய்ந்து வருகிறது என பல அரசியல் ஆய்வாளர்கள் நாள்தோறும் கூறி வந்தாலும் 3 முனைகளில் பெர்சாத்து கட்சி இன்னும் தனது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்து வருகிறது.

முதலாவது, இத்தனை மோதல்களுக்குப் பின்னரும், இன்னும் அம்னோவுடன் கூட்டணி அரசாங்கத்தில் இடம் பெற்றிருப்பது – ஆட்சியிலும் அமைச்சர்களோடு தொடர்ந்து கொண்டிருப்பது!

இரண்டாவது, பெர்சாத்து தலைமையேற்றிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணியில் இன்னும் பாஸ் கட்சி ஓர் அங்கமாக நீடித்து இணைந்திருப்பது.

மூன்றாவது, சபா மாநிலத்தில் இன்னும் அம்னோவுடன் இணைந்து மாநில அரசாங்கத்தை எந்தவிதப் பிரச்சனையும் இன்றி ஆட்சி நடத்தி வருவது!

தீபகற்ப மலேசியாவில் பெர்சாத்துவுக்கு எதிராக நாள்தோறும் அறிக்கை விடும் தலைவர்கள் சபாவில் மட்டும் பெர்சாத்து முதலமைச்சர் ஹாஜிஜிக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். சபா அம்னோ தலைவர்களும் அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவில்லை.

இதனால்தான், பெர்சாத்து, பல முக்கியத் தலைவர்களின் வெளியேற்றத்திற்குப் பின்னரும் இன்னும் வலிமையாகத் திகழ்கிறது.

பாஸ் கட்சியின் இணைப்பால் கூடுதல் வலிமை!

யார் என்ன சொன்னாலும், பாஸ் கட்சிக்கு மலாய்-முஸ்லீம் வாக்காளர்களிடத்தில் பரவியிருக்கும் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது. அத்தகைய பாஸ் கட்சி இன்றுவரை தேசியக் கூட்டணியில் இருந்து விலகாமல் பெர்சாத்து கட்சியுடன் இணைந்திருப்பதே மொஹிதின் யாசின் தலைமைக்கு இருக்கும் இன்னொரு வலிமை என்பதையும் மறுக்க முடியாது.

பாஸ், தேசியக் கூட்டணியின் மூலம் தங்களுக்குத் தேவையானத் தொகுதிகளைப் பெற்றுவிடும் என்பதோடு, பெர்சாத்து ஆதரவு வாக்காளர்களையும் – அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலாக இருந்தாலும் – கூடுதலாகப் பெறும் என்பதால் – பாஸ் கட்சியைப் பொறுத்தவரை தேசியக் கூட்டணியில இணைந்திருப்பது அதற்கு சாதகம்தான்.

தேசியக் கூட்டணியின் புதிய சின்னத்தின் கீழ் போட்டியிடத் தயார் என்றும் பாஸ் அறிவித்துள்ளது. ஆக, 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் இணைந்து தேசியக் கூட்டணியில் பாஸ் நீடிக்கும் என்பதே இன்றுவரையிலான நிலைமை.

எத்தனை தலைவர்கள் பெர்சாத்துவில் இருந்து வெளியேறினாலும், பாஸ் கூடவே இருக்கும்வரை, பெர்சாத்துவும், தேசியக் கூட்டணியும் தொடர்ந்து வலிமையுடன் திகழும் என்பதில் ஐயமில்லை.

அதே சமயம், பாஸ் தனித்து நின்றாலும், தேசியக் கூட்டணியில் இருந்தாலும் – எப்படியும் சில தொகுதிகளில் வெற்றி பெற்று விடும்.

பெர்சாத்துவும் அவ்வாறு 15-வது பொதுத் தேர்தலில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

15-வது பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி?

பிகேஆர் மாநாட்டு அறிவிப்பை வைத்துப்பார்க்கும்போது பெரிய கூடாரம் என்ற சிந்தனை நாளடைவில் பிசுபிசுத்துப் போகும் என்றே தெரிகிறது.

துன் மகாதீரின் தலைமையிலான பெஜூவாங் கட்சியும் மகாதீரையே பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கிறது.

எனவே, பெஜூவாங் பக்காத்தான் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை. மீண்டும் பெர்சாத்துவுடன் கைகோக்குமா என்பதை காலம்தான் நிர்ணயிக்கும்.

15-வது பொதுத் தேர்தல் நெருங்கும்போது மேற்கூறப்படும் நிலைப்பாடுகளில் சில மாறுதல்கள் நிகழலாம். ஆனால், இன்றைய நிலையில் 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி – தேசியக்கூட்டணி – பக்காத்தான் ஹாரப்பான் – என மும்முனைப் போட்டிகள் நிச்சயம் என்றுதான் தோன்றுகிறது.

இந்தப் போட்டிகளால் வாக்குகள் பிளவுபடும் என்பதால் சில தொகுதிகள் தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையும்.
அதே போன்று வேறு சில தொகுதிகளில் – குறிப்பாக, மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் – வெற்றி வாய்ப்பு, பக்காத்தான் கூட்டணிக்கு சாதகமாக அமையும்.

பொதுத் தேர்தலுக்கு முன்பாக எதிரும் புதிருமாக இருக்கும் இந்தக் கட்சிகளுக்கிடையில் தேர்தல் உடன்பாடு என்பது சாத்தியமில்லாத – கானல் நீராகவே – தென்படுகிறது.

அந்தந்தக் கட்சித் தலைவர்களுக்கிடையே இருக்கும் சுயகௌரவம், சுயநல அரசியல், நானே பெரியவன் என்ற விட்டுக்கொடுக்காத அரசியல் ஆணவம் – இவையெல்லாம்தான் தேர்தல் உடன்பாடுகள் காணப்படுவதற்குத் தடைவிதிக்கும் முட்டுக்கட்டைகள்.

ஒருசில ஆய்வாளர்கள் கணிப்பதுபோல், பொதுத் தேர்தல் முடிவடைந்து எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி எத்தனைத் தொகுதிகளைப் பெறப் போகிறது என்பதை வைத்துத்தான் – பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு தெளிவு பிறந்து – கூட்டணி ஆட்சியும் அமையும் – தேர்தல் உடன்பாடும் காணப்படும் – என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதாவது ஒரு கூட்டணி உறுதியான பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்பட்டால் சிக்கலில்லை.

எந்தக் கூட்டணியும் அறுதிப் பெரும்பான்மை பெற இயலாவிட்டால் – அப்போதுதான் இந்தக் கட்சித் தலைவர்கள் எல்லாம் இறங்கி வந்து – அவர்களின் சிந்தனையில் தெளிவு பிறந்து – கூட்டணி அரசாங்கத்தை அமைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்!

ஒரே ஆறுதல்!

அதற்குள் கட்சித் தாவல் தடைச் சட்டம் அமுலுக்கு வந்து விடும் என்பதால், ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று – இன்னொரு கட்சிக்குத் தாவும் – ஷெராட்டன் நகர்வு போன்ற அவலங்கள் – வாக்காளர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் செயல்கள் – இனியும் அரங்கேறாது என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.

-இரா.முத்தரசன்