புத்ரா ஜெயா : நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் சில முக்கிய மனுக்களை இன்று செவ்வாய்க்கிழமை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
இது நஜிப்புக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு தனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக நஜிப் தெரிவித்தார்.
நஜிப் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்ள கூட்டரசு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து 3 அல்லது 4 மாதங்களுக்கு இந்த மேல்முறையீட்டு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என நஜிப்பின் வழக்கறிஞர்கள் மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர். அந்த மனுவையும் கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஏற்கனவே, திட்டமிடப்பட்ட தேதிகளில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெறும் என்றும் எந்தவொரு ஒத்தி வைப்புக் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் கூட்டரசு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும் நஜிப்புக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது என கூட்டரசு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.