Home கலை உலகம் மகரந்தம் தொடர் நடிகர்கள் – குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

மகரந்தம் தொடர் நடிகர்கள் – குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

505
0
SHARE
Ad

அண்மையில் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ஒளியேறி அனைவரையும் கவர்ந்த ‘மகரந்தம்’ தொடரின் நடிகர்கள் – குழுவினருடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்

தினேஷ் சாரதி கிருஷ்ணன், இயக்குநர்:

1. மகரந்தம் தொடரை இயக்கியதற்கான உங்களின் உத்வேகத்தையும் இயக்குநராக உங்களின் பின்னணியையும் பகிர்ந்துக் கொள்ளவும்.

கடந்த 15 வருடங்களாக இத்துறையில் இருக்கிறேன். நான் ஒரு குழு உறுப்பினராக எனதுப் பணியைத் தொடங்கிச் சுயக் கற்றலின் வாயிலாக ஒரு பதிப்பாசிரியராக எனது நிலையை உயர்த்திக் கொண்டேன். தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் மின்னியல் தளங்களுக்கான உள்ளூர் இசை நிகழ்ச்சிகள், குறும்படங்கள் மற்றும் டெலிமூவிகளையும் நான் இயக்கியுள்ளேன். திருமணம் மற்றும் அதன் சவால்கள் குறித்து எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் பிறந்தக் கதைதான் மகரந்தம். எங்களுடையது ஒரு காதல் திருமணம். நாங்கள் எங்கள் திருமண உறவில் பலத் தடைகளையும் சவால்களையும் சந்தித்தாலும் இன்றுவரை ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இந்தத் தொடரின் மூலம் இளம் தலைமுறையினருக்குக் காதல், திருமணம் மற்றும் அர்ப்பணிப்புக் குறித்தச் சிறந்தப் புரிதலை வழங்க நான் விரும்புகிறேன். ரணமான இதயத்தைக் கொண்ட ஆண்/பெண் வாழ்க்கையில் சரியான நபர் நுழைந்தால் அவர் மீண்டும் காதல் வயப்படுவதோடு அது ரணத்திற்கும் மருந்தாக அமையும் என்ற வலுவானக் கருத்தை இந்தத் தொடரின் மூலம் நான் பகிர விரும்பினேன்.

#TamilSchoolmychoice

2. மகரந்தம் தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளவும்?

மதனும் ஏஞ்சலினும் பிரிந்த காட்சி உட்படப் பல மறக்கமுடியாதத் தருணங்கள் இருந்தன. இரு நடிகர்களும் தங்களின் சிறந்ததை வழங்கித் தங்களின் கதாப்பாத்திரங்களுக்கு அழகுச் சேர்த்தனர்.

இர்ஃபான் சைனி, சாந்தினி கோர், & ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி, நடிகர்கள்:

1. இந்தத் தொடரில் உங்களின் கதாப்பாத்திரத்தையும் நிஜ வாழ்க்கையில் தொடர்புப்படுத்தக்கூடிய உங்களின் கதாப்பாத்திரத்தின் சில பகுதிகளையும் பற்றிக் கூறுங்கள்.

இர்பான் சைனி

இர்ஃபான்: தன் பெற்றோரைப் போலவே அழகானத் தாம்பத்திய வாழ்க்கையை எதிர்ப்பார்க்கும் நம் அண்டை வீட்டில் வசிக்கும் ஓர் எளிய பையனாக, மதன் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். இருப்பினும், அவர் இரண்டு வெவ்வேறுப் பெண்களுடன் தனது வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொண்டதால், மதனின் திருமண வாழ்க்கை அவரது பெற்றோரின் திருமண வாழ்க்கையைப் பிரதிபலிக்கவில்லை.

சாந்தினி: தனது வாழ்க்கையில் பல மனவேதனைகளைச் சந்தித்தச் சுசீலா எனும் ஒரு தைரியமான மற்றும் முதிர்ச்சியுள்ளப் பெண்ணாக நான் நடித்தேன். வெளியில் பல பெண்களுடன் தொடர்புடைய ஒரு கதாப்பாத்திரம். அவர் வெளிப்புறத்தில் வலுவாகக் காட்சியளித்தாலும் தன்னுள் வலியையும் துக்கத்தையும் கையாளுகிறார். உணர்ச்சி ரீதியாகப் பலவீனமாக உள்ளார்.

சாந்தினி

விவாகரத்தானவராக, அவர் தனது வாழ்க்கையில் பல விஷயங்களைச் சமாளிக்கவும் கடந்துச் செல்லவும் தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்கிறார். நான் ஒரு மாறுபட்டத் தன்மையைக் கொண்டிருப்பதாலும் இன்னும் திருமணமாகாதவர் என்பதாலும் என்னால் சுசீலாவுடன் தொடர்புப்படுத்த முடியவில்லை.

கதாநாயகியாக இது எனது முதல் ஆஸ்ட்ரோ தொடர் என்பதால் சிறந்த படைப்பை வழங்க நான் பல முயற்சிகளை மேற்க்கொண்டேன். மக்கள் மகரந்தம் தொடரைக் கண்டு இரசிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி!

ஜேம்ஸ்

ஜேம்ஸ்: மகரந்தம் தொடரில் நான் நடித்தக் கதாப்பாத்திரம், சந்துரு. சந்துரு ஒரு ஆதறவற்றோர் இல்லத்தில் வளர்ந்ததால் ஓர் அக்கறையுள்ளத் துணைவிக்காக ஏங்கினார். தனக்கு ஆண்மைக்குறைவுப் பிரச்சனை இருப்பதை மறைத்துச் சுசீலாவை மணந்தார்.

இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்குக் கலவையான உணர்வுகள் இருந்தன. இருப்பினும், நடிகராக நான் வகித்தக் கதாப்பாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தக் கதாப்பாத்திரமாக இது திகழ்கிறது. சந்துரு போன்றவர்கள் நம்முடன் வாழ்கிறார்கள். எனவே, நிஜ வாழ்க்கையில் பலருடன் இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் தொடர்புடையது.

2. மகரந்தம் தொடரில் நடித்த உங்களின் அனுபவம் எவ்வாறு இருந்தது?

இர்ஃபான்: நான் கதாநாயகனாக நடிக்கும் முதல் தொடர் இது. இதற்கு முன்பு நான் வில்லன் கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்திருப்பதால், இது மிகவும் சவாலானதாக இருந்தது. இரசிகர்கள் எனது மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்களா அல்லது இல்லையா என்றக் கலவையான உணர்வுகளும் எனக்குள் இருந்தன.

அமோகமான வரவேற்புடன், மதனின் கதாப்பாத்திரத்தைப் பலர் ஏற்றுக்கொள்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், எனது இரசிகர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க நம்பிக்கை வழங்கிய ஆஸ்ட்ரோ மற்றும் மகரந்தம் குழுவினருக்கு இவ்வேளையில் நான் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாந்தினி: முதிர்ச்சியடைந்த விவாகரத்தான ஒரு பெண் சில விஷயங்களை எவ்வாறுக் கையாள்வார் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டியிருந்ததால், இந்தக் கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இந்தத் தொடரின் ஒரு பகுதியாக இருந்தது உண்மையில் எனக்கு மிகவும் சிறப்பான ஒரு அனுபவமாக அமைந்தது! என் மீது நம்பிக்கை வைத்து இதைச் செய்ததற்கு நன்றி.

ஜேம்ஸ்: மகரந்தம் தொடரின் ஒரு பகுதியாக இருந்தது முற்றிலும் ஓர் அற்புதமான அனுபவம். குறைந்தப்பட்சக் காட்சிகளில் நடித்திருந்தாலும், அது எனக்கு நம்பமுடியாதக் கற்றல் தளமாக இருந்தது. இயக்குநர் தினேஷ் சாரதி, சந்துரு என்ற கதாப்பாத்திரத்தை மிகவும் சிறப்பாக வடிவமைத்ததால் உண்மையிலேயே அவர் ஒரு சிறந்த வழிகாட்டி என்றுதான் கூறுவேன்.

ஸ்கிரிப்ட்டின் ஆழத்தைக் கருத்தில் கொண்டுச் சில உரையாடல்களைப் படைப்பதில் நான் மிகவும் கவலைப்பட்டேன். அதுமட்டுமல்லாமல், நிஜமாக அறையப்பட்டதும் செருப்பால் அடிக்கப்பட்டதும் எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மகரந்தம் தொடரில் பணியாற்றிய அனுபவம் என்றென்றும் போற்றப்படும்.