Home Photo News பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் : குறைகள் என்ன? நிறைகள் என்ன?

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் : குறைகள் என்ன? நிறைகள் என்ன?

595
0
SHARE
Ad

  • சோழர் காலத்தை நேரில் பார்க்க வைக்கும் சினிமா அனுபவம்
  • ஆதித்திய கரிகாலனாக முத்திரை பதிக்கும் விக்ரம்
  • பிரமிக்க வைக்கும் சோழர்கால போர்க் காட்சிகள்
  • எண்ணிலடங்கா நட்சத்திரங்களின் பவனி 

பொன்னியின் செல்வன் பார்க்க விரும்புபவர்கள் முதலில் குறைந்தது ஒரு மணி நேரமாவது யூடியூப் தளத்தில் செலவிட்டு, நாவலின் சுருக்கத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் படம் பாருங்கள். படத்தின் கதையோட்டமும் புரியும்.

மணிரத்னம் இந்தப் படத்தைக் கையாண்டிருப்பதில் எழுந்திருக்கும் மிகப் பெரிய குறைபாடு – நாவலைப் படிக்காதவர்களுக்கு – சோழர்களின் வரலாறு தெரியாதவர்களுக்கு – படம் புரியவில்லை என்பதாகும்.

#TamilSchoolmychoice

இருந்தாலும் தன் சினிமா அனுபவத்தால் படம் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே – எடுத்த எடுப்பிலேயே – நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார் மணிரத்னம்.

கமல்ஹாசன் பின்னணிக் குரல் வழங்கி சோழர் காலத்து கதையை எடுத்துரைக்க, சுந்தர சோழனின் 3 மக்கட் செல்வங்களில் மூத்தவரான ஆதித்திய கரிகாலனாக விக்ரம் தோன்றி, வீரமும் சீற்றமும் கொண்ட போர் வெறி கொண்ட ஓர் இளவரசனை நம் கண் முன் நிறுத்துகிறார். அவருடன் இணைந்து போர்க்களத்தில் எதிரிகளை எதிர்கொள்ளும் போர்வீரன் – நண்பனாக – வந்தியத் தேவன் வல்லவராயனாக – கார்த்தி இன்னொரு பக்கம் கவர்கிறார்.

சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிராக சதி நடப்பதாக உளவுத் துறைத் தகவல் எனக் கூறும் ஆதித்திய கரிகாலன் தன் நம்பிக்கைக்குரிய நண்பன் வந்தியத் தேவனை சில செய்திகளோடு தஞ்சையை நோக்கி அனுப்பி வைக்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது பொன்னியின் செல்வன் கதை.

நாவலைத் திரைக்கதையாக்குவதில் மணிரத்னத்தோடு, பிரபல எழுத்தாளர் ஜெயமோகனும், குமரவேலும் (பல படங்களில் நடித்திருப்பவர் – பிரகாஷ்ராஜ், திரிஷா நடித்த அபியும் நானும் படத்தில் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரனாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர்) இணைந்து பணியாற்றியிருக்கின்றனர்.

பிரம்மாண்டம் – பிரபல நட்சத்திரங்கள் இணைந்த படம்

படம் முழுக்க பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் மணிரத்னம். சோழர் காலத்தை அப்படியே திரையில் நிகழ்கால இரசிகர்களுக்குக் கொண்டுவர அரும்பாடு பட்டிருக்கிறார்கள் கலை இயக்குநர் தோட்டதரணியும், தொழில்நுட்பக் கலைஞர்களும். படம் முழுக்க வெளிப்படும் இன்னொரு உழைப்பாளி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். இயற்கைக் காட்சிகள் ஒருபுறம், சோழர்களின் கோட்டை கொத்தளங்கள் இன்னொரு புறம், செல்வச் செழிப்பையும் பிரம்மாண்டத்தையும் காட்டும் அரண்மனைக் கூடங்கள், போர்க்காட்சிகள், எழில்கொஞ்சும் இலங்கைக் கடலோரங்கள் – என பலதரப்பட்ட சூழல்களை நம் கண் முன்னே அழகாகக் காட்டுகிறார்.

நட்சத்திரங்களைத் தேர்வு செய்வதிலும் அவர்களுக்கேற்ற கதாபாத்திரங்களுக்குள் அவர்களைப் பொருத்தியிருப்பதிலும் மணிரத்னத்தின் அனுபவம் தெரிகிறது. தமிழ் சினிமா உலகின் அத்தனை நட்சத்திரங்களையும் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் நுழைத்திருக்கிறார் மணிரத்னம். அதற்காகவே படத்தை ஒருமுறை பார்த்து வைக்கலாம்.

படத்தின் கதையமைப்பில் விக்ரமுக்கும் மணிரத்னத்திற்கும் கருத்து வேறுபாடு என பட வெளியீட்டுக்கு முன்னர் செய்திகள் கசிந்தன. பின்னர் அதைப் பொய்யாக்கும் வண்ணம் விக்ரம் மணிரத்னத்துடன் இணைந்து பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ஆனால் படத்தில் அனைவரையும் ஈர்க்கும் முதன்மைக் கதாபாத்திரம் யார் என்றால் அது விக்ரம்தான். காதலின் ஏமாற்றத்தையும், அதை மறைக்க போர்களில் ஆக்ரோஷமுடன் ஈடுபடும் வேகத்தையும் கண்களிலும், முக பாவனைகளிலும் ஆதித்திய கரிகாலனாக அனாயசமாகக் காட்டியிருக்கிறார் விக்ரம்.

அவரை அடுத்து படம் முழுக்க வந்து கவர்பவர் வந்தியத் தேவன் – கார்த்தி. ஒரு காலத்தில் எம்ஜிஆரே நடிப்பதற்காக ஏங்கிய கதாபாத்திரம். அதற்காகவே, பொன்னியின் செல்வன் நாவல் உரிமையை விலை கொடுத்து வாங்கினார் எம்ஜிஆர் என்பார்கள்.

பின்னர் ஜெயலலிதாவே அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் ரஜினிகாந்த் எனக் கூறியிருந்தார். அந்த வேடத்திற்கு “அவன்தான் பொருத்தமானவன்” என சிவாஜி கணேசனே தன்னிடம் ரஜினியைப் போடுமாறு கூறியதாக கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

படத்தைப் பார்க்கும்போது, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் எம்ஜிஆரோ  ரஜினியோ நடித்திருந்தால் எவ்வாறு பொருந்தியிருப்பார்கள் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அந்த வந்தியத் தேவன் கதாபாத்திரத்தை மணிரத்னம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. சில காட்சிகளில் வந்தியத் தேவன் ஒரு வீரன் என்பதை விட ஒரு கோமாளி போல காட்சியமைத்திருப்பது சற்று நெருடல்.

ஆழ்வார்க்கடியனாக வரும் ஜெயராம் நினைவில் நிற்கும் இன்னொரு கதாபாத்திரம். தலைமுடியைச் சிரைத்து, அதற்கேற்ற உடல்மொழியுடன் ஆழ்வார்க்கடியானை கண்முன்னே உலவ விட்டிருக்கிறார் ஜெயராம்.

நடிகைகளில் சொல்லத் தேவையில்லை. நந்தினியாக – அழகு தேவதையாக வருகிறார் ஐஸ்வர்யா ராய். பத்தாண்டுகளுக்கு முன்னர் பார்த்தது போன்ற அதே இளமை. அவரைப் படத்தில் இளமையாகக் காட்ட தொழில்நுட்ப ரீதியாக சில “கைங்கரியங்கள்” கணினி உபயத்தோடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள். ஆனால் திரையில் அப்படித் தெரியவில்லை.

குந்தவையாக வரும் திரிஷாவுக்கு அவரின் சினிமாப் பயணத்தில் இன்னொரு முத்திரைப்படம். இருபதாண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே இளமையோடும் கவர்ச்சியோடும் காட்சி தருகிறார். அவரின் கம்பீரமான இளவரசி குந்தவை தோற்றத்திற்கும் உடல்மொழிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மற்ற நடிகர்களில் பெரிய பழுவேட்டரையாக வரும் சரத்குமார் பொருத்தமான தேர்வு. 64 விழுப்புண்கள் தாங்கியவராக அவரின் கம்பீரமும் உடல்மொழியும் தனித்துவம். சுந்தர சோழனாக வரும் பிரகாஷ் ராஜூம், சின்ன பழுவேட்டரையாக – கோட்டைத் தளபதியாக – வரும் பார்த்திபனும் கொஞ்ச நேரம் வந்தாலும், நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் கவர்கிறார்கள்.

அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி சிறப்பான நடிப்புதான் என்றாலும், எதிர்காலத்தின் இராஜ இராஜ சோழன் அவர்தான் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நடிப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

படத்தின் சில குறைகள் – பலவீனங்கள் 

பாகுபலி படம் முடிந்தபோது, அதன் 2-ஆம் பாகம் எப்படி இருக்கும், எப்போது வெளிவரும் என்ற ஆர்வம் அனைவருக்கும் எழுந்தது. கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் தெறிக்க விடப்பட்டன.

ஆனால், பொன்னியின் செல்வன் முதல் பாகம் முடிவடையும்போது, இரண்டாம் பாகத்திற்கான ஆர்வத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தும் எந்தக் காட்சிகளும் இல்லாமல் படம் முடிவது ஒரு மிகப் பெரிய ஏமாற்றம்.

ஆதித்திய கரிகாலனின் கொலை என்ற அற்புதமான களம் இரண்டாம் பாகத்தில் இருந்தும், அதுகுறித்த விறுவிறுப்போ, எதிர்பார்ப்போ இல்லாமல் சட்டென்று முதல் பாகம் முடிவடைவதும் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டக் காட்சிகள் எதுவும் இல்லாததும் இரண்டாம் பாகத்தை இரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

படத்தின் சில பலவீனங்களைச் சுட்டிக் காட்டலாம். முக்கியமாக மணிரத்னம் கதையோட்டம் அனைத்துத் தரப்பு இரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என எண்ணாமல், நாவலைப் படித்தவர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் எடுத்திருக்கிறார்.

கதாபாத்திரங்களின் பின்னணி குறித்து விளக்கம் கொடுத்திருக்கலாம். சாதாரண சினிமா இரசிகர்களுக்கு கண்டராதித்த சோழனையும், மதுராந்தகச் சோழனையும் அவர்களுக்கு இடையிலான தொடர்புகளையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!

ஒவ்வோர் ஊரைக் காட்டும்போதும் அந்த ஊரின் தொடர்பு என்ன – முக்கியத்துவம் என்ன – என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம். இலங்கை ஏன் கதைக்குள் வருகிறது என்பது நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும். ஆனால், சோழர் காலத்துக் கதை என நினைத்து வரும் சாதாரண இரசிகன், ஏன் இலங்கையைக் காட்டுகிறார்கள் எனக் குழம்பி விடுகின்றான். அதேபோல கடம்பூர் என்று காட்டும்போது, சோழர் ஆட்சிக்கும் அந்த ஊருக்கும் என்ன தொடர்பு என்பதைக் காட்டியிருக்கலாம்.

இதனால், நாவலைப் படிக்காத சினிமா இரசிகர்கள் கதாபாத்திரங்களாலும், காட்டப்படும் ஊர்களாலும் குழம்பி விடுகின்றனர். பல இரசிகர்கள் இதைக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இருந்தாலும், பல தலைமுறைகளாய் படிக்கப்பட்ட கல்கியின் அற்புத நாவல் – எம்ஜிஆர், கமல்ஹாசன் முதற்கொண்டு பல ஜாம்பவான்கள் எடுக்க முற்பட்டுக் கனவு கண்ட படம் – நமது மூதாதையர்களான சோழர்களின் பெருமைகளையும், வெற்றிகளையும் கொண்டாடும் படம் – என்ற அளவில், பொன்னியின் செல்வன் எப்போதோ அபூர்வமாகப் பூக்கும் குறிஞ்சிப் பூக்களில் ஒன்றெனக் கொண்டாடுவோம். சோழர்காலத்துப் பெருமைகளை பிரம்மாண்ட திரையில் பார்த்து அனுபவிப்போம்.

-இரா.முத்தரசன்