Home Photo News 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்  ஒத்திவைப்பு-பக்காத்தானின் ஆபத்தான  அரசியல் சூதாட்டம்

3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்  ஒத்திவைப்பு-பக்காத்தானின் ஆபத்தான  அரசியல் சூதாட்டம்

347
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், சிலாங்கூர் – பினாங்கு– நெகிரி செம்பிலான் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒத்திவைத்திருக்கிறது. பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆபத்தான  அரசியல் சூதாட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறதா? விவாதிக்கிறார் இரா. முத்தரசன்)

பக்கத்தான் தரப்பில், நடத்துவதா இல்லையா என இழுபறியாக நீடித்து வந்த சிலாங்கூர் – பினாங்கு– நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தும் விவாதம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

நாடாளுமன்றக் கலைப்புக்கு முன்பாகவே இந்த மூன்று மாநிலங்களும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலை நடத்தாது என உறுதியாக அறிவிக்கப்பட்டது.

ஆனால்,  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் சில பக்கத்தான் தலைவர்களிடையே மனமாற்றம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில்  இந்த மாநிலங்களில் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கும் என அவர்கள் கருதினர்.

#TamilSchoolmychoice

குறிப்பாக,  பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்  ராம் கர்ப்பால் சிங் ஆகியோர் பினாங்கு மாநில மக்கள் ஒரே நேரத்தில்  நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதை விரும்புகின்றனர் எனத் தெரிவித்தனர். ஆனால், கடந்த சனிக்கிழமை அக்டோபர் 22-இல் கூடிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களிலும் சட்டமன்றக் கலைப்புகள் இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பக்காத்தானின் அபாயகர அரசியல் சூதாட்டம்

பக்காத்தானைப் பொறுத்தவரை ஓர் இக்கட்டான சிக்கலில்  அது சிக்கியுள்ளது.  தொடக்கம் முதலே பருவமழை வௌ்ளம் காரணமாக பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என தீவிரமாக அது எதிர்த்து வந்தது.

நாடாளுமன்றக் கலைப்புக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கும் வகையில்  பக்கத்தான் தலைவர்கள் மன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தாங்கள் ஆட்சி செய்யும் அந்த மூன்று மாநில சட்டமன்றங்களை கலைக்கமாட்டோம் என பகிரங்கமாக அறிவித்தது.

சட்டமன்றத் தேர்தல்களை தனியாக நடத்துவதன் மூலம் மீண்டும் ஒன்று முறை அதே வாக்காளர்களை தேர்தல் களத்திற்கு மீண்டும் இட்டுச் செல்லும் சூழ்நிலையை பக்கத்தானின் முடிவு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சாதகம் என்னவென்றால்,  இந்த மூன்று மாநிலங்களிலும்  நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டும் இப்போதைக்கு பக்கத்தான் தலைவர்கள் கவனம் செலுத்த முடியும். சட்டமன்றங்களை வெல்வது குறித்தோ மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்தோ அவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

அவர்களின் பிரச்சாரத்திற்குக் கூடுதல் நேரம் அவர்களுக்குக் கிடைக்கும்.  ஆனால், பொதுத் தேர்தல் முடிந்த பின்னர்தான் அவர்களுக்கு அடுத்த கட்ட அபாயம் காத்திருக்கிறது. மத்திய அரசாங்கத்தை பக்கத்தான் கைப்பற்ற முடிந்தால் இயல்பாகவே இந்த மூன்று மாநிலங்களிலும்  சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும்போது, பக்கத்தான் கட்சிகளின் கரங்களே ஓங்கியிருக்கும்.

அதே சமயம், 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று  மத்திய அரசாங்கத்தை அமைத்தால்  இந்த மூன்று மாநிலங்களையும் குறி வைத்து மீண்டும் அவற்றைக் கைப்பற்ற தேசிய முன்னணி தீவிரமாக முயற்சி செய்யும்.

அதன் காரணமாக இந்த மூன்று மாநிலங்களையும் தேசிய முன்னணியிடம் பக்கத்தான் இழப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இருந்தாலும்,  இந்த அபாயத்தை நன்கு உணர்ந்துதான் பக்கத்தான்  தலைவர்கள் மன்றம் சட்டமன்றத் தேர்தலை ஒன்றாக நடத்துவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது.

மாறாக,  சட்டமன்றத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தே நடத்த ஒப்புக் கொண்டிருந்தால் அவர்கள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் பாய்ந்திருக்கும்.

அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று எனவும் தனியாக சட்டமன்றத் தேர்தலை நடத்தப் பயப்படுகிறார்கள் எனவும் அவர்களின் அரசியல் எதிரிகள் சாடியிருப்பர்.

மாறிவிட்ட அரசியல் சூழலில் எந்தத் தொகுதியிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயமில்லை – எந்தக் கட்சி எந்த மாநிலத்தைப் பிடிக்கும் என்பதும் உறுதியில்லை –  என்பதுதான் நம் நாட்டு அரசியலின் நிதர்சனமாகிவிட்டது.

கடந்த ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல்கள் தனியாக நடத்தப்பட்ட ஜோகூர், மலாக்கா மாநிலங்களில் தேசிய முன்னணி பெரும்பான்மை பெற்று அந்த மாநிலங்களைக் கைப்பற்றியதை நாம் மறந்துவிட முடியாது. ஆனால் அந்தத் தேர்தல்களில் 50 விழுக்காட்டு வாக்காளர்கள்தான் வாக்களித்தனர். இந்த 15-வது பொதுத் தேர்தலில் 75 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயது வாக்காளர்களும் வாக்களிக்கவிருப்பதால், அவர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்ற பரபரப்பு இன்னும் கூடியிருக்கிறது.

இருந்தாலும் ஏற்கெனவே விடுத்த அறிவிப்பை நிலைநிறுத்தும் நோக்கத்தில்  பக்கத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்துள்ளது.

பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்று மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றினால் இந்த மாநிலங்களை மீண்டும் சட்டமன்றத் தேர்தல்களில் கைப்பற்றும் அதன் இலக்கும் வெற்றி பெறக் கூடும்.

அதே சமயம், தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், இந்த 3 மாநிலங்களை பக்காத்தான் மீண்டும் தற்காப்பதற்கு கடும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும்.

-இரா.முத்தரசன்