Home Photo News பாகோ : பெரிக்காத்தான் பிரதமர் வேட்பாளர் முஹிடின் யாசின் மீண்டும் வெல்ல முடியுமா?

பாகோ : பெரிக்காத்தான் பிரதமர் வேட்பாளர் முஹிடின் யாசின் மீண்டும் வெல்ல முடியுமா?

390
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தலில் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம், அனல் பறக்கும் தேர்கல் களங்களாக மாறியுள்ளன சில தொகுதிகள். அவற்றில் ஒன்று ஜோகூரின் பாகோ. முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் தற்காக்கக் களமிறங்கும் இந்தத் தொகுதியின் நிலவரம் குறித்து விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

2015ஆம் ஆண்டு! நஜிப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி ஊழல் விவகாரங்கள் மெல்ல மெல்ல தலையெடுத்து ஊடகங்களை ஆக்கிரமித்த தருணம். யாரும் எதிர்பாராத விதமாக அந்த விவகாரத்தை  நஜிப் தவறாக கையாண்டார் எனக் குரல் கொடுத்தார் துணைப் பிரதமராகவும் அம்னோவின் துணைத் தலைவராகவும் இருந்த டான்ஸ்ரீ முஹிடின் யாசின்.

அதற்குப் பதிலடியாக 28 ஜூலை 2015ஆம் நாள்,  அவரைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார் நஜிப். ஸாஹிட் ஹமிடி துணைப் பிரதமராக, முஹிடினுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். இருந்தாலும் அம்னோவில் துணைத் தலைவராக முஹிடின் தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

அந்தப் பதவிக்கும் அடுத்த ஓர் ஆண்டில் ஆபத்து வந்தது.  ஜூன் 2016இல்  துணைத் தலைவர் பதவிலிருந்தும் கட்சியிலிருந்தும் முஹிடின் நீக்கப்பட்டார்.  அம்னோவின் அதிகார அரசியலிலிருந்து நீக்கப்பட்டதால் முஹிடினின்  அரசியல் எதிர்காலம் ஒருமுடிவுக்கு வந்துவிட்டதாகவே பலரும் கருதினர்.

மீண்டும் அரசியலில் விஸ்வரூபம் எடுத்த முஹிடின்

‘ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்’ என்பது அரசியலைப் பொறுத்தவரை பொருத்தமான பொன்மொழி.

அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதால்  தளர்ச்சி அடையாத முஹிடின், 1எம்டிபி ஊழலுக்கு எதிராக உரக்கக்  குரல் கொடுத்து வந்த துன் மகாதீருடன் கரங்கோத்தார். இருவரும் இணைந்து ஆகஸ்டு 2016இல் பார்ட்டி பிரி பூமி பெர்சத்து மலேசியா  என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர்.

மலாய் கட்சியான பெர்சத்து, அம்னோவைவிட அதிக செல்வாக்கு பெற வாய்ப்பில்லை என்றே அப்போது கருதப்பட்டது. ஆனால்,  அதைப் பொய்ப்பிக்கும் விதமாக மலேசியாவிலும் பல அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.

துன் மகாதீர் சிறையில் இருந்த அன்வாருடன் இணைந்தார். யாரும் எதிர்பாராத வகையில் பிகேஆர் கட்சியுடன் ஜசெகவுடனும் கூட்டணி அமைத்தார்.

அம்னோ-தேசிய முன்னணி சின்னம் இல்லாமல் முதன் முதலில் பாகோவில் போட்டியிட்ட முஹிடின்

2018 பொதுத் தேர்தல் வந்தது. பல தவணைகளாக தான் பாரம்பரியமாக போட்டியிட்டு வந்த பாகோ தொகுதியில் மீண்டும் பெர்சத்து –  பக்கத்தான்  ஹாராப்பான் வேட்பாளராகப் போட்டியிட்டார் முஹிடின். கடந்த பல தவணைகளாக தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த அவர் – எவ்வளவுதான் செல்வாக்கு கொண்டிருந்தாலும், இன்னொரு சின்னத்தில் இந்த முறை வெற்றி பெற முடியுமா என்ற ஐயப்பாடு அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.

ஆனால், 6,927 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்றார் முஹிடின். துன் மகாதீரின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில்  உள்துறை அமைச்சராக  நியமிக்கப்பட்டார்.

பிரதமராகப் பல சிக்கல்கள்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் முஹிடினுக்கு இன்னோர் அரசியல் வாய்ப்பு அமைந்தது. பிகேஆர் கட்சியிலிருந்து பிரிந்த அஸ்மின் அலி 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அம்னோவுடன் அரசியல் கூட்டணி அமைத்தார்.

பெரும்பான்மை பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஹிடின்  பக்கம் சாய்ந்தனர்.

துன் மகாதீர் பிரதமராக தொடர்ந்து இருந்திருந்தால் ஷேரட்டன் நகர்வு என்ற பெயரில்  ஆட்சி கவிழ்ப்பு  சாத்தியமாகி இருக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள்  இன்று வரை கருதுகின்றனர்.

ஆனால், பிரதமர் பதவியிலிருந்து மகாதீர் விலகியதால் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அம்னோ– பிரிந்து வந்த பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவால்  பிரதமரானார் முஹிடின்.

கோவிட்– 19 காலகட்டத்தில் பிரதமரானதால்  பல சிக்கல்களை அவர் எதிர்நோக்கினார். அவரும் குடற்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் உடல் நலக் குறைவையும் எதிர்நோக்கியிருந்தார்.

அம்னோவின் நெருக்குதலால்  முஹிடின் ஆகஸ்டு 2021இல் பிரதமராக பதவி விலக நேர்ந்தது. இருந்தாலும் பெர்சத்து அமைச்சர்கள் தொடர்ந்து  இஸ்மாயில் சப்ரி அமைச்சரவையில் நீடித்தனர்.

முஹிடினும் தேசிய மீட்சித் திட்ட மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மீண்டும் பாகோவில் முஹிடின்…இந்த முறை பெரிக்காத்தான் சின்னத்தில்…

15ஆவது பொதுத்தேர்தலில் மீண்டும்  பாகோ தொகுதியில்  களமிறங்குகிறார் முஹிடின் யாசின். 4 வருடங்களுக்குள்ளாக இன்னொரு சின்னத்திற்கு மாறி போட்டியிடுகிறார். 2018-இல் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக, பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டவர் – இப்போது பெரிக்காத்தான் கூட்டணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

மீண்டும் சின்னம் மாறி போட்டியிட்டாலும் பாகோ வாக்காளர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா என்பதை நிர்ணயிக்கப் போகும் தேர்தல் இது. ஒரே தொகுதியில் 3 முறை சின்னம் மாறிப் போட்டியிடும் முஹிடின் இந்த முறையும் வெற்றி பெற்றால் அது ஒரு சாதனையாகவே கருதப்படும். அவரின் தனிப்பட்ட அரசியல்  செல்வாக்கை அந்த வெற்றி காட்டுவதாகவும் இருக்கும்.

தோல்வி அடைந்த ஒரு பிரதமராக   முஹிடின் அடிக்கடி வர்ணிக்கப்படுகிறார். ஆனால் அவரின் அரசியல் வியூகத்தையும் செல்வாக்கையும் – தொடர்ந்து களத்தில் நிற்கும் துணிச்சலையும்  நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

அம்னோ எவ்வளவுதான் தூண்டில் போட்டாலும் இறுதி வரை பாஸ் கட்சி, முஹிடின் தலைமைத்துவத்தை ஏற்று பெரிக்காத்தான் கூட்டணியிலேயே நிலைத்திருக்கிறது. இதுவே முஹிடினின்  பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. தனது சொந்த செல்வாக்கு – பாஸ் கட்சியின் ஆதரவு ஆகியவை காரணமாக முஹிடின் மீண்டும் பாகோவில் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை இங்குப் போட்டியிட்ட பாஸ் கட்சி 2,483 வாக்குகளைப் பெற்றது. இந்த முறை  முஹிடினை பாஸ் ஆதரிப்பதால் அந்தக் கூடுதல் வாக்குகளைக் கொண்டும் முஹிடின் இந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

ஆனால், அவர் கடுமையானப் போட்டியை எதிர்நோக்குகிறார் தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ ரஸாலி இப்ராஹிம் இங்கு போட்டியிடுகிறார்.

துணை அமைச்சராகப் பணியாற்றிய அம்னோவின் ரஸாலி இப்ராஹிம்  முஹிடினுக்கு எதிராகக் கடுமையானப் போட்டியை வழங்கலாம்.

கடந்த முறை  பிகேஆர் சின்னத்தில் வெற்றி பெற்ற முஹிடின் பின்னர், தான் சார்ந்திருந்த பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு துரோகம் இழைத்தார் – எந்த அம்னோவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினாரோ – அதே அம்னோவுடன் – பிரதமராவதற்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்து கரங்கோத்தார்– என்ற எதிர்மறையான தோற்றமும் – தாவும் இன்னொரு அரசியல் தவளை என்ற முத்திரையும் –  முஹிடின் மேல் சுமத்தப்படுகிறது.

மகாதீருக்கே துரோகம் செய்தவர் என்பதால், மகாதீரின் ஆதரவாளர்களும் – அப்படி யாராவது பாகோவில் இருந்தால் – முஹிடினுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள்.

இதன் காரணமாக அவரை எதிர்த்துப்போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் இஸ்கண்டார் ஷா கணிசமான வாக்குகளை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்முனைப் போட்டியை எதிர்நோக்கும் பாகோவில் வாக்குகள் பிளவுபடுவது யாருக்குச் சாதகமாக அமையப் போகிறது என்பது கேள்விக்குறி. தேர்தல் முடிவுகள்தான் காட்டும்.

எதிரணியில் மூடா கட்சியின் சையிட் சாதிக்…

பாகோவுக்கு அருகாமையிலுள்ள  மூவார் தொகுதியில் போட்டியிடுகிறார் மூடா கட்சியின் தலைவர் சையிட் சாதிக் அப்துல் ரஹ்மான்.

கடந்த முறை முஹிடினை ஆதரித்தவர் சையிட் சாதிக். அதேபோல சையிட் சாதிக் அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் முஹிடின். இந்த முறை சையிட் சாதிக் ஆதரவாளர்கள் மூடா கட்சியில் இணைந்து பக்கத்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்திருப்பதால் அத்தகைய நகர்வும் முஹிடினுக்கு எதிராக வாக்குகளைக் குறைக்கலாம்.

69,939 பதிவு பெற்ற வாக்குகளைக் கொண்டது பாகோ தொகுதி. 2018 கணக்கெடுக்கின்படி சுமார் 66 விழுக்காட்டு மலாய் வாக்குகளையும்  30 விழுக்காடு சீன வாக்குகளையும் 4 விழுக்காடு இந்திய வாக்குகளையும் ஒரு விழுக்காடு மற்ற இன வாக்குகளையும் கொண்டது இந்தத் தொகுதி.

கடந்த காலங்களில்  ஜோகூர் மாநில மந்திரி பெசாராக பணியாற்றியவர் – முன்னாள் அமைச்சர் – முன்னாள் பிரதமர் – என பல முனைகளிலும் ஜோகூர் மாநிலத்தில் முஹிடினுக்கு தனி செல்வாக்கு உண்டு.

ஆனால், பாகோ தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று வர அந்த செல்வாக்கு மட்டும் போதுமா?

– இரா.முத்தரசன்