Home Photo News தித்திவங்சா: மீண்டும் கைப்பற்றுவாரா ஜொஹாரி கனி? அமானாவின் காலிட் சாமாட்  வெற்றி பெறுவாரா?

தித்திவங்சா: மீண்டும் கைப்பற்றுவாரா ஜொஹாரி கனி? அமானாவின் காலிட் சாமாட்  வெற்றி பெறுவாரா?

407
0
SHARE
Ad
பிரச்சாரத்தின்போது ஜொஹாரி கனி

(கூட்டரசுப் பிரதேசத்தின் தித்திவாங்சா அனல் பறக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று. 2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தோல்வியடைந்த அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் ஜொஹாரி கனி மீண்டும் இங்கு போட்டியிடுவதாலும் – ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் அமானாவின் பிரபலம் காலிட் சாமாட்டும் போட்டியில் குதித்திருப்பதாலும் – பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது இந்தத் தொகுதி. அதன் நிலவரம் குறித்து விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

அண்ணன் – தம்பிகள் எதிரும் புதிருமாக வெவ்வேறு கட்சிகளில் அரசியலில் இயங்குவது மலேசியாவிலும் உண்டு.   மூத்த சகோதரர் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சாமாட் அம்னோவில் தீவிரமாக இயங்கி வருபவர். ஜோகூர் பாரு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

அவரின் இளைய சகோதரர் காலிட் அப்துல் சாமாட் நீண்ட காலமாக பாஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு காட்டியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் அமானாவைத் தோற்றுவித்தபோது முகமட் சாபு தலைமையில் அந்த கட்சியில் இணைந்தவர்  காலிட் சாமாட்.

கடந்த இரண்டு தவணைகளாக  சிலாங்கூரிலுள்ள ஷா ஆலாம் தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்து வருபவர்.

2013 பொதுத் தேர்தலில்  பாஸ் சின்னத்தில் போட்டியிட்டு ஷாஆலாம் தொகுதியில் 10,939  வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

2018-இல் அமானா கட்சி சார்பில்  மீண்டும் ஷாஆலாமில் போட்டியிட்டு  33,849 வாக்குகள் பெரும்பான்மையில்  பெரும் வெற்றி பெற்றார். அந்த காலிட் சமாட்தான்  இந்த முறை தித்திவங்சா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

அதனால்தான் இந்த முன்னுரை!

வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்னர் ஷாஆலாம் தொகுதியில் மீண்டும் போட்டியிடமாட்டேன் என அறிவித்திருந்தார் காலிட் சமாட்.

ஆனால், அமானா கட்சியின்  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபோது ஆச்சரியத் திருப்பமாக தித்திவங்சா வேட்பாளராக காலிட் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால்,  இந்தத் தொகுதியை புதியவரான அவர்  கைப்பற்ற முடியுமா? என்று எழுந்திருக்கும் பரபரப்பால் – கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக – தித்திவங்சா மாறியிருக்கிறது.

அம்னோவின் சார்பில் ஜொஹாரி கனி மீண்டும் போட்டி

தித்திவங்சா தொகுதி, அம்னோ பாரம்பரியமாக வெற்றி பெற்றுவந்த தொகுதியாகும். கோலாலம்பூரின்  மிகப் பழைமையான மலாய்க்காரர்களின் குடியிருப்பான கம்போங் பாரு தித்திவங்சா தொகுதியின் கீழ் வருகிறது.

அம்னோவின் கோட்டையாகத் திகழ்ந்த வந்த இத்தொகுதியில்  2013 பொதுத் தேர்தலில் 866 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அம்னோவின் ஜொஹாரி அப்துல்  கனியால் வெற்றி பெற முடிந்தது.

அதைத் தொடர்ந்து அவர் இரண்டாவது நிதி அமைச்சராகவும்  நஜிப் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.

2018 பொதுத் தேர்தலில்  மீண்டும் இங்கு போட்டியிட்ட ஜொஹாரி  தோல்வி அடைந்தார்.

பெர்சத்து கட்சியின் சார்பில்  களமிறங்கிய ரீனா முகமட் ஹருண் 4,139 வாக்குகள் பெரும்பான்மையில்  வாகை சூடி, ஜொஹாரியை வீழ்த்தினார்.

பெர்சத்து கட்சி, முஹிடின் – மகாதீர் என பிளவுபட்டபோது, முஹிடின் பக்கம் சாய்ந்தார் ரீனா. அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த முறை தித்திவங்சா தொகுதியில் போட்டியிடாமல் சிலாங்கூரிலுள்ள சிப்பாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதனால்தானோ என்னவோ, இந்த முறை பெர்சாத்து, தித்திவாங்சாவில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு பாஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது.

கடந்த பொதுத்தேர்தலில் பக்கத்தான் கூட்டணியில் பெர்சத்துவுக்கு ஒதுக்கப்பட்ட இந்தத் தொகுதி இந்த முறை அமானா கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அமானா- பக்காத்தான் கூட்டணி சார்பில்தான் நாம் மேலே குறிப்பிட்ட – ஷா ஆலாம் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், காலிட் அப்துல் சமாட் போட்டியிடுகிறார்.

அம்னோ – தேசிய முன்னணி சார்பில் மீண்டும் இங்கு போட்டியிடுகிறார் ஜொஹாரி அப்துல் கனி. இந்தத் தொகுதியின் கீழ்வரும் கம்போங் பாண்டான் பகுதியில் பிறந்து வளர்ந்தவர், படித்தவர் என்பதால் உள்ளூர்க்காரர்.

ஒரு கணக்கியல் நிபுணரான ஜொஹாரி நாட்டிலேயே முக்கிய ஊடக நிறுவனமான மீடியா பிரிமா நிறுவனத்தின் உரிமையாளர். நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹாரியான் நாளிதழ்களையும், டிவி3 தொலைக்காட்சி நிறுவனத்தையும் கொண்டிருக்கிறது மீடியா பிரிமா.

நான்கு முனைப் போட்டியில் வெல்லப் போவது யார்?

தித்திவங்சா தொகுதியில்  நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் டாக்டர் ரோஸ்னி அடாம் இங்கு போட்டியிடுகிறார். இவர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

மகாதீரின் பெஜுவாங் கட்சி சார்பில் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசான் போட்டியிடுகிறார். மகாதீருக்கு நெருக்கமான நண்பர் இவர். அடிக்கடி மகாதீருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர். எவ்வளவு மலாய் வாக்குகளை இவரால் பிரிக்க முடியும் என்பதுதான் கேள்வியே தவிர, வெற்றி பெற வாய்ப்பில்லை.

கடந்த பொதுத்தேர்தலில் இங்கு போட்டியிட்ட  பாஸ் கட்சி 6,845 வாக்குகளைப் பெற்றது. இந்த முறை இந்த வாக்குகளோடு, பெர்சாத்து ஆதரவு வாக்குகளையும் பாஸ் பெறும். ஆனால், தொகுதியைக் கைவிட்டு விட்டு சிப்பாங் தொகுதிக்குச் சென்று விட்ட ரீனா ஹாருண் நடவடிக்கையால் – பெர்சாத்து மீது எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, பாஸ் கட்சிக்கு பெர்சாத்து ஆதரவு வாக்குகள் எத்தனை கிடைக்கும் என்பது இன்னொரு பிடிபடாத கணக்கு!

மொத்தம் 80,747 வாக்குகளைக் கொண்ட இந்தத் தகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுமே மலாய்க்காரர்கள்.

2018 கணக்கெடுப்பின்படி  தித்திவாங்சா தொகுதியின் 72 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்கள். சீனர்கள் 17 விழுக்காட்டினரும்  இந்தியர்கள் 9 விழுக்காட்டினரும் மற்ற இனத்தவர் 2 விழுக்காட்டினரும்  இருக்கின்றனர்.

எனவே,  மலாய் வாக்குகள் நான்கு பிரிவுகளாகப் பிளவு படும் பட்சத்தில் மலாய்க்காரர் அல்லாத  28 விழுக்காட்டு வாக்குகள்தான்  வெற்றியை நிர்ணயிக்கும்.

இவை நகர்ப்புற வாக்குகள் என்பதால் பெரும்பாலும்  பக்கத்தான் கூட்டணிக்கே – அமானா வேட்பாளருக்கே செல்லும் – என எதிர்பார்க்கலாம். இது காலிட் சாமாட்டுக்கு வாய்த்திருக்கும் சாதகம்.

ஆனாலும், ஜொஹாரி உள்ளூர்க்காரர், சிறந்த கல்வித் தகுதிகள் கொண்ட திறமையானவர், வணிகப் பிரமுகர், ஒரு தவணை இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவத்தைக் கொண்டவர் – என்பது போன்ற சாதக அம்சங்கள் அவரின் வெற்றிக்கு வழிவகுக்கக் கூடும்.

ஆக, பல நாடாளுமன்றத் தொகுதிகளைப் போன்று இந்தத் தொகுதியிலும் தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் – வேட்பாளர்களில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்!

– இரா.முத்தரசன்