Home Photo News “அம்னோவுடன் பக்காத்தான் கூட்டணி சாத்தியமே! தவறில்லை!” – இராமசாமி கூறுகிறார்

“அம்னோவுடன் பக்காத்தான் கூட்டணி சாத்தியமே! தவறில்லை!” – இராமசாமி கூறுகிறார்

391
0
SHARE
Ad

(பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி, 15-வது பொதுத் தேர்தல்கள் குறித்து வழங்கிய சிறப்பு நேர்காணலில் முடிவுகள் எப்படியிருக்கும், எத்தகைய கூட்டணிகள் அமையலாம் என்பது பற்றி விவாதிக்கிறார். சந்திப்பு : இரா.முத்தரசன்)

  • 15-வது பொதுத் தேர்தல்:  எதிர்பார்த்த வெற்றியை தேசிய முன்னணி பெற வாய்ப்பில்லை
  • சொற்ப பெரும்பான்மையில் பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சி அமைக்கும்
  • அம்னோவுடன் இணைந்த கூட்டணி அரசாங்கம் சாத்தியமே! தவறில்லை
  • பக்காத்தான் கூட்டணிக்கு வாக்களிப்பதே இந்தியர்களுக்கு நன்மைகளைக் கொண்டுவரும்!

துணை முதல்வராக மாநில அரசாங்கப் பணிகள்; பினாங்கு மாநில நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரச்சாரங்களில் பங்கெடுப்பு – என்ற கடுமையான வேலைகளுக்கிடையிலும், சில நாட்களே எஞ்சியிருக்கும் 15-வது பொதுத் தேர்தல்கள் குறித்த தன் கருத்துகளையும், ஆரூடங்களையும் மக்கள் ஓசைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி.

காலையில் முதல் வேலையாக நடப்பு அரசியல் நிலவரங்களையும் அது குறித்த தன் சூடான – சமரசம் இல்லாத – கருத்துகளையும் தன் முகநூல் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தைக் கொண்டவர்.

#TamilSchoolmychoice

நேர்காணலிலும், தயங்காமல், வார்த்தைகளில் சிக்கல்கள் இல்லாமல், தனக்கே உரிய வாதத் திறமையோடு தன் கருத்துகளை முன்வைத்தார் இராமசாமி. இனி அவர் கூறியவற்றில் சில முக்கிய அம்சங்கள்:-

தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணி எதிர்பார்ப்பதுபோல் இருக்காது

முதலமைச்சர் சௌ கோன் இயோவுடன் பிரச்சாரம்

தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வினவியபோது பின்வருமாறு கூறினார் இராமசாமி:

“தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என எண்ணித்தான் தேசிய முன்னணி இந்தப் பொதுத் தேர்தலையே முன்கூட்டியே நடத்துகிறது. ஆனால் அவர்களின் கனவு பலிக்கப் போவதில்லை. வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர் கடந்த சில நாட்களாக எழுந்து வரும் பிரச்சாரத்தின் திசை மாற்றங்கள் – பிரச்சனைகளை – அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது – தேசிய முன்னணி எதிர்பார்க்கும் வெற்றி அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. ஆகக் கடைசியான ஆய்வுகளும், கணிப்புகளும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியே பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லும் எனத் தெரிவிக்கின்றன. நான் சென்று வந்த பிரச்சாரங்களின் அடிப்படையிலும் இதை நான் கூறுகிறேன்”

சொற்ப பெரும்பான்மையில் பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சி அமைக்கும்

இறுதியில் தேவையான 112 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பான் நெருக்கிப் பிடித்து விடும் என்பதுதான் எனது கணிப்பு. சபா, சரவாக் கட்சிகள் அல்லது மேற்கு மலேசியாவின் சில கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து பக்காத்தான் அரசாங்கத்தை நடத்துவதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும் என்பதே என் நம்பிக்கை.

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மேற்கு மலேசியாவின் எந்தக் கட்சியுடன் இணைந்து பக்காத்தான் அரசாங்கம் அமைக்கும்?

பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பக்காத்தான் ஹாரப்பானுக்கு இருக்கும் முதல் தேர்வு சபா, சரவாக் கட்சிகள்தான். அத்தகைய கூட்டணி அமையும் என்ற கருதுகிறேன். அவ்வாறு அமைக்க முடியாவிட்டால், அம்னோவுடன் இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். அரசியல் என்பது நடக்க முடியாத ஒன்றை நடத்திக் காட்டுவதுதான் (Politics is the art of possible). வேறு வழி இல்லையென்றால் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்காக – சீர்திருத்தங்களையும், மறுமலர்ச்சியையும் கொண்டு வருவதற்காக – அம்னோவுடன் இணைந்து பணியாற்றுவதில் தவறில்லை. ஆனால், நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து, கூட்டணி அமைப்பதே முறையானதாகும்.

15-வது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்? ஏன்?

இந்திய சமுதாயத்திற்கு இந்தப் பொதுத் தேர்தலில் இருக்கும் தேர்வுகள் என்ன என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பாஸ் கட்சி இணைந்திருக்கும் பெரிக்காத்தான் கூட்டணிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களா என அவர்களைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன். அல்லது மீண்டும் மீண்டும் அம்னோ-தேசிய முன்னணி இணைந்த கூட்டணிக்கே உங்களின் வாக்கைத் தரப் போகிறீர்களா என்றும் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் அவர்களுக்கிருக்கும் ஒரே சிறந்த தேர்வு பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிதான். ஏற்கனவே, 2018-இல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அனுபவத்தைக் கொண்டது பக்காத்தான்.

ஆனால், அப்போது துன் மகாதீர் பிரதமராக இருந்து போட்ட சில முட்டுக் கட்டைகளால் இந்திய சமுதாயத்திற்குத் தேவையான திட்டங்கள் சென்றடையவில்லை. இந்த முறை அன்வார் இப்ராஹிம் பிரதமர் என்பதால் அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாது. எனவே, தங்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டுமானால் பக்காத்தான் ஹாரப்பானுக்கே இந்தியர்கள் திரளாகத் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

பினாங்கில் எத்தனை தொகுதிகளை பக்காத்தான் வெல்ல முடியும்?

என்னைக் கேட்டால் எல்லாத் தொகுதிகளையும் நாங்களே வெல்ல வேண்டும் என்பேன் (சிரிக்கிறார்). ஆனால், கடந்த முறை போன்று மொத்தமுள்ள 13 தொகுதிகளில் ஓரிரண்டைத் தவிர மற்ற எல்லாத் தொகுதிகளையும் பக்காத்தான் சுலபமாகக் கைப்பற்றும் என்பதே என் நம்பிக்கை.

கெராக்கானுக்கு பினாங்கில் மீண்டும் ஆதரவு அலை எழுமா?

2008 பொதுத் தேர்தலில், அப்போதைய பினாங்கு முதலமைச்சர் டான்ஸ்ரீ கோ சூ கூன்னை பத்து கவான் தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்டுத் தோற்கடித்தவர் இராமசாமி. அதே பொதுத் தேர்தலில் பிறை சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். அந்த அரசியல் பிரவேசத்தின் வழி நான் பிரச்சாரங்களுக்கு சென்று வந்த முறையில் பினாங்கில் கெராக்கானுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் கெராக்கானுக்கு மீண்டும் ஆதரவு அலை திரும்பும் சாத்தியம் உள்ளதா? என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார் இராமசாமி:

“நான் பிரச்சாரங்களுக்கு சென்று வந்த முறையில் பினாங்கில் கெராக்கானுக்கு அப்படியொன்றும் செல்வாக்கு இன்னும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களால் எந்தத் தொகுதியையும் வெல்ல முடியாது. பினாங்கிலேயே வெல்ல முடியாது என்றால் மற்ற மாநிலங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மசீசவுக்கும் இதே நிலைமைதான். சீனர்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கில்லை”